]]

Monday, July 30, 2007

சிந்தனைக்கு

பரங்கிப்பேட்டை பேருராட்சி - பல வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஊரின் நிலைமைகளில் நல்ல பல மாற்றங்களை மக்கள் கண்டுகொண்டே இருக்கின்றனர். ஆனாலும், இன்னும் பல நிவர்த்தி செய்யப்பட வேண்டிய, மக்களின் சுமைகளை குறைக்கக் கூடிய பல தேவைகள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை மக்கள் மன்றத்திலே வைக்கப்படும் போது அதற்கான தீர்வுகளும், நடைமுறை சாத்திய கூறுகளும், சமுதாய நலன் குறித்த மக்களின் சிந்தனைகளும் மேம்பட வாய்பிருக்கிறது. இந்த நோக்கிலேயே "சிந்தனைக்கு" என்ற இந்த தலைப்பின் வாயிலாக பரங்கி்பேட்டை வாழ் மக்களின் சிரமங்களாக எங்கள் சிந்தனையில் உதித்ததை தங்களின் சிந்தனைக்கு (இந்த சிந்தனைக்கு என்ற தலைப்பின் கீழ் மக்கள் மன்றத்திலே) வைப்பதில் மகிழ்ச்சி.

சிந்தனை-1:

கடலூர் பழைய நகர் வரையுள்ள அரசுப்பேருந்து மார்க்கத்தை புதுநகர் வரை மாற்றக் கோரும் சிந்தனை.இது நாள் வரையிலும் கடலூர் செல்லக்கூடிய அரசுப்பேருந்துகள், கடலூர் பழையநகர் வரை மட்டுமே சென்று வருகின்ற காட்சியை நாம் காண்கின்றோம். பரங்கிப்பேட்டைக்கும் கடலூருக்கும் இடையிலே இன்னும் பல பேருந்துகள் இயக்கப்பட்டால் நன்றாக இருக்குமே என்ற மக்களின் எண்ணப்பாடு இருக்கும் நிலையில், வியாபாரம், கல்வி, மற்றும் பல பணிகள் நிமித்தம் கடலூர் புதுநகர் வரை செல்லும் மக்கள், தனியார் பேருந்துகளில் தான் செல்ல நேருகின்றது. அதுவும் சில சமயங்களில் தனியார் பேருந்துகள் பரங்கிப்பேட்டைக்கு வராமலே சென்றுவிடுவதும் வாடிக்கை. அப்படியே வந்தாலும், கூட்ட நெரிசல்களில் சிக்கி படாத பாடு பட்டு செல்ல வேண்டிய நிலை இருக்கின்றது. இதையெல்லாம் தவிர்த்து மக்கள் அரசுப்பேருந்துகளில் செல்ல நாடினால் அது பழைய நகர் வரை மட்டுமே செல்லக்கூடிய நிலை.

இதைவிட மிகக் கொடுமையானது பெண்களின் நிலைமை. கல்லூரிக்கு செல்லக்கூடிய பெண்கள் - இது போன்ற தனியார் பேருந்துகளில் செல்லும் போது அவர்கள் படும் இன்னல்கள் ஏராளம். இதையெல்லாம் கண்கூடாக பார்க்கும் பெற்றோர்கள் தங்களுடைய பெண்மக்களை மேற்படிப்பு படிப்பதைக்கூட தடைசெய்யக்கூடிய நிலைமைகளை நாம் அறிவோம்.

எனவே, மக்களின் தேவைக்கேற்ப கடலூர் பழைய நகர் வரை சென்றுகொண்டிருக்கிற அரசுப்பேருந்துகளை, கடலூர் புது நகர் வரை நீட்டிக்க வேண்டும் என்பது பெரும்பாலான பரங்கிப்பேட்டை வாழ் மக்களின் எண்ணம். அதே சமயம் கடலூர் பழைய நகர் வரை மட்டும் சென்று திரும்பும் மக்களுக்கு ஏற்ற விதமாக ஒரு நாளில் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளை இயக்கினால் போதுமானதாக இருக்கும். பழைய நகர் வரை இயக்கப்படும் இந்த குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளை தவிர்த்து மற்ற அனைத்து அரசுப்பெருந்துகளையும் கடலூர் புது நகர் வரை இயக்கினால், அது மேலே குறிபிடப்பட்டுள்ள வியாபாரிகள், கல்லூரி மாணவ - மாணவிகள், கடலூர் மார்க்கமாக பிற நகரங்களுக்கு செல்லக்ககூடிய பயணிகளுக்கும், வெளி ஊர்களில் இருந்து திரும்பும் மக்களுக்கும் மிகப் பயனுள்ள வகையில் அமையும் என்பதில் ஐயமில்லை.

இது குறித்து பரங்கிப்பேட்டையில் இயங்கிவரும் சமுதாய இயக்கங்களும், மன்றங்களும் சிந்துத்து செயல்படுவதன் மூலம் இது குறித்த நடைமுறை மாற்றத்தை ஏற்படுத்தவியலும். இன்ஷாஅல்லாஹ்.

2 comments:

said...

இது போன்று ஊர் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தோட்டங்களை அதிகமாக பதியுங்கள். உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்.

said...

ஹபீப்,
நல்ல சமுதாய சிந்தனை உங்களிடம் காண முடிகிறது.

இரண்டு கருத்துகள்;
1). இப்போதும் பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து கடலூர் புதுநகர் வரை சென்று வருகிற ஒரே ஒரு பெரியார் வண்டியில் 'டவுன்பஸ்' கட்டணம் தான்.
இந்த வண்டியை சின்னக்கடை/வாத்தியாப்பள்ளி வரை நீட்டிக்கக் கோரவும், மேலும் இரு வண்டிகளை இயக்கக் கோரவும் கிரஸண்ட் போன்ற சமுதாய நல இயக்கங்கள் முனைப்பு காட்டலாம்.

2). சிதம்பரம் பக்கப் போக்குவரத்தை கருத்தில் கொண்டு வெள்ளாற்றுப்பாலம் விரைந்து முடிக்கக்கோரவும் முனைப்பு காட்டலாம்.

பின்னர், எல்லாம் தானே வழிக்கு வரும்.