]]

Friday, October 26, 2007

மழை வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் அவதி

சிதம்பரம் பகுதியில் மழை வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் அவதி

சிதம்பரத்தில் மழை வெள்ளம் வடியாததால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

மழை வெள்ளம்

சிதம்பரம் பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்த கன மழையினால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

சிதம்பரம் நகரில் வேணுகோபால் பிள்ளை தெரு, கொத்தங்குடி தெரு போன்ற பல்வேறு தெருக்களில் மழை நீர் தேங்கி நின்றது.


தற்போது பல இடங்களில் தேங்கி நின்ற தண்ணீர் வடிந்து விட்டது.

இருப்பினும் சிதம்பரம் நகரை சுற்றியுள்ள சாந்தி நகர், சிவசக்தி நகர், மின் நகர், ராஜா நகர், ராஜம் நகர், மகாவீர் நகர் போன்ற 25-க்கும்மேற்பட்ட நகர்களில் மழை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

வீட்டில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

இதனால் கடந்த 3 நாட்களாக அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நோய் பரவும் ஆபத்து

சில இடங்களில் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

வடிகால் வசதி இன்றி பல நகர்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.

குறிப்பாக வைப்புசாவடி, இந்திராநகர் ஆகிய இடங்களில் மழை நீரும், சாக்கடை நீரும் சேர்ந்து தேங்கி நிற்கிறது.

இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தவிர கொள்ளிடக்கரையோர கிராமங்களான வல்லம்படுகை, கனகரப்பட்டு, திட்டுக்காட்டூர், அண்ணாமலைநகர், மாரியப்பா நகர், கவரபட்டு,மேல திருக்கழிப்பாளை, கீழ திருக்கழிப்பாளை, அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் போன்ற பல கிராமங்களில் மழைநீர் சூழ்ந்து உள்ளது.

ஆற்றில் வரும் தண்ணீர், உப்பானாற்று தண்ணீர், பாலமான் வாய்க்காலில் வரும் தண்ணீர் ஆகியவை அப்பகுதி குடிசைப் பகுதிகளுக்குள் புகுந்தது.

ஆனால் மழை நீர் வடியாததால் மேலும் அங்குள்ள சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொதுமக்கள் அவதி

அதே போல் காட்டுமன்னார் கோவில் பகுதியில் திருநாரையூர், சிறகிழந்த நல்லூர், சர்வராஜன் பேட்டை, எள்ளேரி கிழக்கு, நெய்வாசல் தொருக்குழி, சோழக்கூர், வீரநத்தம், திருநாரையூïர், சிறகிழந்த நல்லூர், நந்திமங்கலம் மற்றும் திரவுபதி அம்மன் கோவில் தெரு, கண்ட மங்கலம் போன்ற பகுதியில் மழை நீர் வடியாததால் பொதுமக்கள் ரோட் டோரம் சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.

அதேபோல் கிள்ளை பகுதி, பரங்கிப்பேட்டை பகுதிகளிலும் பல கிராமங்களில் தண்ணீர் வடியாமல் தீவு போல காட்சி அளிக்கிறது.

இதனால் அப்பகுதி மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

மழை வெள்ளத்தால் சிதம்பரம்- கடலூர் சாலைகளில் பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

அவற்றை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

0 comments: