]]

Wednesday, May 23, 2007

ஜமாஅத் தலைவருடன்...




ஜமாஅத் தலைவரை பேட்டிக்காக அணுகினோம். 29-11-06 இரவு 8 மணிக்கு நேரம் ஒதுக்கினார்கள். ஜமாஅத்தின் அலுவலகத்தில் இணையம் சார்பாக சந்தித்தோம்.

இனி பேட்டியிலிருந்து

பரங்கிப்பேட்டைக்கு ஜமாஅத் உருவாகி எத்துனை ஆண்டுகளாகின்றன?
27 ஆண்டுகளாக பரங்கிப்பேட்டையில் ஜமாஅத் இருந்து வருகின்றது.
இந்த 27 ஆண்டுகளில் ஜமாஅத் எத்தனை தலைமையை சந்தித்துள்ளது?
நான்கு தலைமைக்கு பிறகு தற்போது ஐந்தாவது தலைமையை நாம் ஏற்றுள்ளோம்.

தற்போதையை உங்கள் தலைமை பொறுப்பேற்று எத்தனை ஆண்டுகளாகின்றன?
2000 ம்ஆண்டு பிப்ரவரியிலிருந்து இன்றுவரை நாம் பொறுப்பிலிருக்கிறோம்.

தலைவரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
மூன்றாண்டுகள்

ஜமாஅத்திற்கு தலைவர் தேர்ந்தெடுக்கும் முறையைச் சொல்லுங்கள்?
பொதுவாக தேர்வுக் கமிட்டி மூலமாகத் தான் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதுதான் நடைமுறையாக இருந்தது. எனது (ஜமாஅத் தலைவர் யூனுஸ்) கடந்த இரு முறை தேர்வுக் கூட இதே அடிப்படையில் தேர்வுக் கமிட்டியால் தான் நடந்தது. இந்த முறை நான் அதை மாற்றி அமைக்க முயற்சித்தேன். இதற்கு காரணம் .இருந்தது. தேர்வுக் கமிட்டி எனும் போது தங்களுக்குத் தேவையானவர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள் என்ற பேச்சு உருவாகும் (கடந்த காலத்திலும் இது நடந்தது) இனி ஒரு போதும் இந்த நிலை தொடரக் கூடாது என்று முடிவு செய்துதான் பொதுக்குழு ஓட்டெடுப்பின் மூலமாகத்தான் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நிலையை நான் மேற்கொண்டு அறிவித்தேன்.

கடந்த இருமுறை நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள் இப்போதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். இரண்டுக்கும் எதை வித்தியாசமாக நீங்கள் உணர்கிறீர்கள்?
தேர்வு கமிட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் இப்போது தேர்தல் முறை (ஓட்டெடுப்பு) அறிவிக்கப்பட்டதற்கும் வித்தியாசம் உள்ளது. தற்போது ஓட்டெடுப்பு முறை என்று வந்தவுடன் விருப்பட்டவர்கள் போட்டியிட்டு வாக்குப் பெறலாம் என்று இருந்தும் இந்த முறை யாரும் என்னை எதிர்த்து நிற்கவில்லை. அதனால் எதிர்ப்பின்றி மக்கள் ஆதரவுடன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இது பெரும் வித்தியாசமாகும்.

உங்கள் தலைமையின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுவைப் பற்றி, அவர்களின் எண்ணிக்கை?
கடந்த இரு முறைகளில் 8 நிர்வாகக்குழு உறுப்பினர்களும் பரங்கிப்பேட்டை தழுவிய அளவில் 150 செயற்குழு உறுப்பினர்களும் இருந்தனர். இம்முறை அது சற்று மாற்றப்பட்டு 10 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 180 செயற்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

பிற ஊர்களை விட பரங்கிப்பேட்டையின் இந்த ஜமாஅத் தனித்தன்மையுடன், பிற ஊர் ஜமாஅத்தார்கள் வியக்கும் விதத்தில் அமைந்துள்ளதற்கு காரணம் என்ன?
நமது முஸ்லிம் சமூகத்தில் கொள்கை ரீதியாக பல அமைப்புகள் இருந்தாலும் கொள்கைக்கு அப்பாற்பட்டு பொது விஷயங்களில் அனைவரையும் ஒருங்கினைத்தது இந்த ஜமாஅத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அது மட்டுமின்றி இதர முஸ்லிம் ஊர்களில் இருப்பதுப் போன்று பல முஹல்லாக்கள், பல உள் ஜமாஅத்துகள் என்ற நிலை இங்கு இல்லை. இதுவும் காரணமாக அமைந்தது. மேலும், மத நல்லிணக்கங்களை நாங்கள் பெரிதும் விரும்புகிறோம். மதங்களுக்கு அப்பாற்பட்ட மனித நேயம் இங்கு வலுவாக வேரூன்றியுள்ளதும் எங்கள் பணிகளுக்கு துணையாக உள்ளது. இதுவெல்லாம் எங்கள் வெற்றிக்கு காரணம்.

பரங்கிப்பேட்டை ஜமாஅத்தை பிற எந்த ஊராவது மாடலாக எடுத்துக் கொண்டுள்ளார்களா..?
ஆம், புவனகிரியில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் என்று தங்கள் ஜமாஅத்தை மாற்றிக் கொண்டு இதே போல செயல்பட ஆர்வம் காட்டி வருகிறார்கள். விருதாசலத்திலிருந்து அங்குள்ள ஜமாஅத்தார்கள் எங்களை சந்தித்து விபரங்களை பெற்றுக்கொண்டு சென்றார்கள். அங்கும் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் உருவாகியுள்ளது. அவர்களும் இதேபோன்று செயல்பட முனைத்துள்ளார்கள்.

மாவட்டம் தழுவிய அளவில் இந்த ஜமாஅத் தலைமையில் இதே போன்று ஒரு ஒருங்கிணைப்பு நடக்க முயற்சிப்பதாக கேள்விப்பட்டோமே....
கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் என்று ஒரு ஜமாஅத்தை கட்டமைக்க பலர் தொடர்ந்து அணுகி வருகிறார்கள். அது பெரும் பணியாகும். கூடுதல் பொறுப்புணர்வு ஏற்க வேண்டி வரும். சரியான திட்டங்களும் அவகாசமும் இல்லாமல் துவங்கிவிட்டு தேக்க நிலையில் விட்டு விடக் கூடாது என்பதால் சற்று பொறுமையாக இருக்கின்றோம். ஆனாலும் அதற்கான முயற்சிகள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

ஊர் மக்களின் நலனுக்காக என்னென்ன திட்டத்தை ஜமாஅத் நடைமுறைப்படுத்துகிறது?
1-பொருளாதார அவசியத்திற்காக பைத்துல் மால் அமைத்துள்ளோம். 2- கல்வி, 3-வட்டியில்லா கடன் உதவி, 4-இலவச மருத்துவ உதவி, 5-ஆம்புலன்ஸ் உதவி, 6-திருமண உதவி, 7-சிறுவர்களுக்கு கத்னா உதவி, 8-வரதட்சனை ஒழிப்பு என்று இன்னும் பல திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

வட்டியில்லா கடன் திட்டம் பற்றி சொல்லுங்கள்.
பரங்கிப்பேட்டை செல்வம் கொழிக்கும் ஊர் என்று அறியப்பட்டாலும் இங்கு பாதிக்கு மேல் ஏழைகள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தேவைக்கு வட்டிக் கடனையே நாடுகிறார்கள். வட்டி பல வழிகளில் ஏழைகளின் வாழ்க்கையை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன. இதில் குறிப்பாக தண்டல் வட்டியை குறிப்பிடலாம். தண்டல் வட்டிக்காரர்களால் ஏழைகள் கேவலப்படுத்தப்படுகிறார்கள். வட்டியிலிருந்து ஓரளவாவது ஏழைகளை மீட்டெடுப்பதற்காகத்தான் சிறு அளவில் நாம் வட்டியில்லா கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உதவி வருகிறோம்.

வட்டியில்லா கடன் திட்டத்திற்காக ஜமாஅத் எவ்வளவு தொகை ஒதுக்கியுள்ளது?
குறிப்பிட்ட அளவு தனியாக தொகை எதையும் நாம் இதற்காக ஒதுக்கவில்லை. ஜமாஅத்தின் பொது நிதியிலிருந்து தான் எடுத்து கொடுத்து வருகிறோம். உள்ளுர் வெளிநாடுகளிலிருந்து வசூலிக்கப்படும் ஜக்காத் தொகை உட்பட தம்மாமிலிந்து கொடுக்கப்படும் தொகை மற்றும் இந்தத்திட்டத்திற்காக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் வழங்கியத் தொகை இவைகளில் தேவையான அளவு வட்டியில்லா கடன் திட்டத்திற்காக செலவிடப்படுகின்றது. குறைந்தது ஆயிரம் ரூபாய் முதல் தேவைக்கேற்ப பத்தாயிரம் வரை கடன் கொடுக்கிறோம். சிறுக சிறுக அவை முறையாக வசூலிக்கப்படுகின்றன. (குறிப்பு: வட்டியில்லா கடன் திட்டத்திற்கு தனியாக போதுமான அளவு தொகை ஒதுக்கப்பட வேண்டும் என்பதையும் அந்தத்திட்டத்தை இன்னும் விரிவு படுத்தும் அவசியத்தையும் நாம் வலியுறுத்தினோம்)

கல்விக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் என்னென்ன?
கல்வியில் அனைத்து வகையிலும் சமுதாயத்தை முன்னேற்ற முயற்சித்து வருகிறோம். உயர்கல்விக்காக ஜமாஅத்தை அணுகும் ஏழை மாணவ மாணவிகளுக்கு உதவுகிறோம். இந்த வருடம் 12 மாணவ மாணவிகள் உயர்கல்விக்காக ஜமாஅத்தை அணுகினார்கள். அனைவருக்கும் கல்வி உதவி செய்யப்பட்டுள்ளது. உயர்கல்விக்கு தேவையான பொருளாதார உதவிகளை ஜித்தா துபை சகோதரர்கள் வழங்குகிறார்கள். *டாம்கிரேட்* (TAMGRADE) தமிழ்நாடு சிறுபான்மைப் பிரிவு என்ற அமைப்பினரும் உயர்கல்விக்காக உதவுகிறார்கள்.
1 முதல் 12 வது வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு *பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமூக நல்வாழ்வு சங்கம் - சிங்கப்பூர்* வருடந்தோரும் ஒன்னறை லட்ச ரூபாய்கள் வழங்குகிறார்கள் கல்வி உதவித் தொகை நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்து அதை வழங்குகிறோம்.

வரதட்சனைக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் தோன்றியது?
பொதுவாகவே பரங்கிப்பேட்டை பணக்கார ஊர் என்று மக்கள் கருதினாலும் சரிபாதியளவு இங்கு ஏழைகள் வாழ்கிறார்கள்.ஏழைகள் ஜமாஅத்தை அணுகும் போது அவர்கள் படும் கஷ்டம் புரிகின்றது. வரதட்சனைக் கொடுத்தால் தான் தன் பிள்ளைக்கு திருமணம் நடக்கும் என்பதை கண்ணீர் மல்க கூறுகிறார்கள். இந்தக் கொடுமையால் நிறைய ஏழைக்குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே இதை ஒழிக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதை நடைமுறையும் படுத்தினோம். அதோடு சேர்த்து ஆடம்பர திருமணங்களையும் கட்டுப்படுத்தினோம். ஊர் மக்கள் எங்கள் முடிவை ஏற்றுக் கொண்டார்கள். வரதட்சனைக்கு எதிராக முடிவெடுத்த இந்த ஆறுமாதங்களில் 67 திருமணங்கள் நடந்துள்ளன. அனைத்து வீடுகளிலிருந்தும் வரதட்சனை வாங்கவுமில்லை - கொடுக்கவுமில்லை என்று சாட்சிகளுடன் கையொப்பமிட்டு எழுதி கொடுத்துள்ளார்கள். இந்த செய்தி பரங்கிப்பேட்டை.காம் இணையத்தில் வெளிவந்தவுடன் அமேரிக்கா, கனடா, சிங்கப்பூர், அரபுநாடுகள் மற்றும் வெளியூர்காரர்கள் என்று ஏராளமானவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

அரசுக்கு இந்த செய்தி எட்டியதா..?
பல அரசு அதிகாரிகள் பாராட்டினார்கள். பல பத்திரிக்கையிலும் இந்த செய்தி வந்தன.

திருமண உதவிப் பற்றிக் கூறுங்கள்
தம்மாமிலிருந்து வருடந்தோரும் 15 திருமணங்களுக்கு உதவி செய்கிறார்கள், வரதட்சனை ஒழிப்பிற்கு பிறகு ஜித்தாவிலிருந்து 15 திருமணங்களுக்கு உதவி செய்கிறார்கள். இவை நிரந்தர உதவிகளாகும். இவை எழைகளுக்கு மிகுந்த உதவியாக இருக்கின்றன. மட்டுமின்றி k.c அப்துர்ரவூப் (முட்லூர் K.C.R திருமண மண்டப உரிமையாளர்) பரங்கிப்பேட்டை உஸ்மான் சன்ஸ் இவர்கள் ஜமாஅத்தின் பரிந்துரையின் பேரில் தேவைக்கேற்ப உதவி செய்கிறார்கள். சிங்கை ஜியாவுத்தீனும் தேவைக்கு அணுகும்போது உதவி வருகிறார்.

சமீபத்தில் கல்விக்குழு என்ற ஒருக் குழு ஜமாஅத்தை சந்தித்ததாக கேள்விப்பட்டோமே..
கல்விக்குழு பரங்கிப்பேட்டைக்கு அவசியமாகும். கல்வி மறுமலர்சிக்காக திட்டங்கள் தீட்டுகிறோம். அதனால் கல்விக்குழுவை அங்கீகரித்துள்ளோம். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறியுள்ளோம்.

பரங்கிப்பேட்டை.காமைப் பற்றி..
பரங்கிப்பேட்டை.காமைப் பற்றி மாவட்ட ஆட்சித் தலைவர் ஒரு பெரும் கூட்டத்தில் புகழ்ந்து அறிவித்தார். ஜமாஅத்தின் செயல்பாடுகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள இணையம் துணையாக இருப்பதாக பலரும் கூறுகின்றார்கள்.

இந்த சந்திப்பின் வாயிலாக நீங்கள் மக்களுக்கு என்ன சொல்கிறீர்கள்?
ஜமாஅத்தின் செயல்பாடுகளை இந்த இணையத்தின் வாயிலாக அறிந்து எங்களை பாராட்டி வரும் அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் செயல்பாடுகளை இன்னும் செம்மைப்படுத்திக் கொள்ள ஆர்வளர்கள் இணையத்தின் வழியாக எங்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கலாம் என்றும் கூறிக் கொள்கிறோம்.

இந்த பேட்டியின் போது ஜமாஅத்தின் துணைத் தலைவர் இஸ்ஹாக் மரைக்காயர் மற்ற நிர்வாகிகள் நிஜாமுத்தீன், உதுமான் அலி, ஹபீப் ஆகியோரும் உடனிருந்தனர்.

0 comments: