]]

Tuesday, June 26, 2007

நாம் முன்வருவோமா?

அன்பிற்கினிய பரங்கிப்பேட்டை வாழ் என் உடன்பிறப்புக்களே!

இணையில்லா இறையோனின் இனிய அருள் நம் அனைவரின் மீது பொழியட்டுமாக...!

பரங்கிப்பேட்டை
வாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், அறிவுத் திறனையும் முன்னுக்கு கொண்டு வரும் பொருட்டு நாம் பரங்கிப்பேட்டை இணையதளம் வாயிலாக பல முயற்சிகளை செய்து வருகின்றோம்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் செய்திகள் தொலைக்காட்சிகளிலோ, வானொலிகளிலோ கிடைப்பதில்லை. எந்தவொரு அரசு / தனியார் கல்வி / தொழில் சார்ந்த செய்திகள் அதிகம் இடம்பெறுவது தினசரி பத்திரிகைகளில்தான் என்பது நமக்கு நன்றாக தெரியும்.

இருப்பினும் பரங்கிப்பேட்டையில் வாழும் அனைவரும் தினந்தோறும் செய்தித் தாள்களை படிப்பது கிடையாது. அப்படியே படித்தாலும் இதுபோன்ற அறிவிப்புகள் இடம்பெறும் செய்திகளை பார்ப்பது கிடையாது.

அரசியல், சினிமா, ஜோதிடம் மற்றும் க்ரைம் செய்திகளுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை கூட அறிவு சார்ந்த செய்திகளுக்கு நம்மில் பெரும்பாலோர் கொடுப்பதில்லை.

இவை நம் மக்களை குறை கூறுவதாக அர்த்தமில்லை. நம் குறைகளை நாமே களைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் சுட்டிகாட்டுகின்றோம்.

இதற்கெல்லாம் ஒரு சிறு தீர்வாகத்தான் நம் தமிழ் நாளிதழ்களில் தினந்தோறும் இடம்பெறக்கூடிய செய்திகளில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி போன்ற தலைப்புகளில் இடம்பெறும் செய்திகளை தொடர்ந்து நம் இணையதளத்தில் தொகுத்துத் தருகின்றோம்.

அதிலும் குறிப்பாக இந்த செய்திகள் அனைத்தும் இணையதளத்தில் வெளியாகும் மின் பத்திரிகைகள் (ஈ பேப்பர்) மூலம் பெறப்படுவதால் குறைந்தளவே நம்மால் கொடுக்க முடிகின்றது.

தொடர்ந்து பத்திரிகை படிக்கும் அன்பர்கள் தாங்கள் படித்த செய்திகள் (கல்வி, அறிவு, சுய தொழில், தொழிற் பயிற்சி, வேலை வாய்ப்பு, வாழ்க்கை முன்னேற்றம் இன்னும் இது போன்ற) ஏதாவது ஒருவகையில் நம் மக்களின் முன்னேற்றத்திற்கு தூண்டுகோளாக இருப்பின் அவற்றை நம் இணையதளத்தில் இடம் பெற செய்ய வேண்டும்.

நாம் அறிந்த நம்மூர் சகோதரர்கள் மூலம் நம் நகர மக்களுக்கும் அவற்றை சேர்ப்பதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

இணைய வீதியில் இனிய உலா வரும் இணைய அன்பர்கள் தாம் பார்த்த நல்ல செய்திகளை தன்னுள் மட்டும் வைத்துக் கொண்டு, நம் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை குறித்து சிறிதேனும் உணர்வு இல்லாமல் இருப்பது பரங்கிப்பேட்டையில் நாம் பிறந்து, வாழ்வதற்குண்டான வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.

எனவே, ஒரு கை தட்டினால் ஓசை வராது. பல கைகளும் சேர்ந்தால் ஓசை மட்டுமல்ல, வாழ்வின் விசையையே மாற்றி அமைக்கலாம். இன்ஷா அல்லாஹ்...

நாம் முன்வருவோமா?

இது குறித்த மனந்திறந்த கருத்துக்களை நம் நகர மக்களிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை!
நம் மக்கள் வளமுடன் வாழ அமைப்போம் இராஜப்பாட்டை!!
கடல் கடந்து சென்றோம் / வந்தோம் பொருள் தேட...!
கை கோர்த்து நிற்போம் இறை அருள் தேட...!!

உங்களில் ஒருவன்...

பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா
அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ.,

மின்னஞ்சல்கள் :
abkaleel@gmail.com / khaleel_baaqavee@yahoo.com / abkaleel@yahoo.com

வலைப்பதிவு : www.khaleel_baaqavee.blogspot.com

1 comments:

said...

உங்கள் எண்ணம் தான் எனது ஏக்கமும் கூட. கணணி, இணையத்தளம் என்று கலக்கிக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கானவர்கள் நமதூரில் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களின் படிப்பும் செயல்களும் அவர்களுக்குரியதாக உள்ளதேத் தவிர 'பிறருக்காக' என்பதில் இல்லை. அப்படியே தேர்ந்தெடுத்தாலும் ஓரிருவரே தென்படுவார்கள். இந்நிலை மாறவேண்டும் என்று பல ஆண்டுகளாக நாமும் பலரிடம் வலியுறுத்தி வந்துள்ளோம். சிலரிடம் கோபமாகக் கூட பேசியுள்ளோம். பலனொன்றும் இல்லை. பார்போம் இனியாவது வெளிப்படுகிறார்களா.. என்று!.

தரமான மனிதர்கள் நமதூரில் இருக்கிறார்கள். ஆனால் அந்த 'தரமான'வை பளிச்சிடுவது எப்போது?