]]

Wednesday, June 20, 2007

தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தமாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை வழங்க வருமான வரம்பு நிர்ணயம்

தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை வழங்க வருமான வரம்பு நிர்ணயம் மத்திய அரசு உத்தரவு


புதுடெல்லி, உயர்கல்வி பயிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை (ஷ்காலர்ஷிப்) வழங்க வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.


மத்திய அரசின் கடந்த பட்ஜெட்டின்போது, உயர்கல்வி பயிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த திறமைவாய்ந்த மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


அதன்படி, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக 127 உயர்கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. 52 என்ஜினீயரிங் மற்றும் ஐ.ஐ.டி., 21 நிர்வாக இயல் கல்லூரிகள், 13 மருத்துவம்-பல் மருத்துவ கல்லூரிகள், 5 சட்டக்கல்லூரிகள் மற்றும் 26 சிறப்பு கல்லூரிகள் இந்த பட்டியலில் அடங்கும்.


பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து, இந்த கல்லூரிகளில் படிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்குவதை தாராளமாக்குவது பற்றி மத்திய சமூகநீதித்துறை அமைச்சகம் மறுபரிசீலனை செய்தது. அதன்படி, மேற்கண்ட கல்லூரிகளில் உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பட்டப்படிப்பு-பட்ட மேற்படிப்பு வரை, அவர்களின் பெற்றோருக்கு சுமையை ஏற்படுத்தாமல் நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.


இந்த திட்டத்தின் கீழ், உதவித்தொகை பெறுவதற்கு, மாணவர்களின் பெற்றோரின் வருமானம், ஆண்டுக்கு ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று வரம்பு நிர்ணயம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. ரூ.2 லட்சத்துக்கு அதிகமான வருமானம் உள்ள குடும்பத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு, இந்த கல்வித்திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படமாட்டாது.


அதே நேரத்தில், மத்திய திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 3 வகையான மெட்ரிக் படிப்புக்கு முந்திய-பிந்திய மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு(மெரிட் அடிப்படையில்) கல்வி உதவித்தொகை திட்டம் எந்த மாற்றமும் இன்றி தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

0 comments: