]]

Tuesday, July 17, 2007

1600 சத்துணவு மையங்களுக்கு புதிய சமையல் பாத்திரங்கள், 5 லட்சம் குழந்தைகளுக்கு புதிய தட்டு, டம்ளர் வழங்கப்படும் - தமிழக அரசு முடிவு

1600 சத்துணவு மையங்களுக்கு புதிய சமையல் பாத்திரங்கள், 5 லட்சம் குழந்தைகளுக்கு புதிய தட்டு, டம்ளர் வழங்கப்படும் - தமிழக அரசு முடிவு

சென்னை, ஜுலை.17-

தமிழகத்தில் ஆயிரத்து 600 சத்துணவு மையங்களுக்கு புதிய சமையல் பாத்திரங்களும், 4 லட்சத்து 77 ஆயிரம் குழந்தைகளுக்கு புதிய தட்டு, டம்ளர் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

முதல்-அமைச்சர் கருணாநிதி, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து தலைமைச் செயலகத்தில் நேற்று ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, சமூகநலத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறைச் செயலாளர், ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர், சமூகநல இயக்குனர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர், சமூகப் பாதுகாப்பு ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


காது கேளாத குழந்தைகளுக்காகக் கடந்த ஆண்டில் 10 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் சிறப்பாக செயல்படுவது குறித்து அதிகாரிகளை முதல்-அமைச்சர் கருணாநிதி பாராட்டினார்.


இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

மன வளர்ச்சி குன்றியவர்கள்

மீதமுள்ள 20 மாவட்டங்களில், மேலும் 20 ஆரம்ப நிலை பயிற்சி மையங்களை இந்த ஆண்டில் தொடங்கிட இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மன வளர்ச்சி குன்றியவர்களைப் பராமரிப்பதில் தனிக்கவனம் தேவை என்பதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தேவையான உறைவிடத்துடன் கூடிய சிறப்புக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி மையங்களைத் தொடங்குவதற்கு ஆர்வத்துடன் முன்வரும் தகுதியுடைய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்வதற்காக ஏற்கெனவே ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டில் 10 ஆயிரம் மனவளர்ச்சி குன்றியோருக்கு மாதம் 500 ரூபாய் வீதம் பராமரிப்பு உதவித் தொகை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


நடப்பு ஆண்டில் மேலும் 20 ஆயிரம் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு மாதம் 500 ரூபாய் வீதம் மொத்தம் 30 ஆயிரம் பேருக்குப் பராமரிப்புத் தொகை வழங்கும் பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. மேலும், 6 வயது வரை உள்ள மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளைப் பராமரிக்க மாவட்டத்திற்கு ஒரு மையம் வீதம் 30 ஆரம்ப நிலை பயிற்சி நிலையங்களை ரூ.1.80 கோடி செலவில் ஏற்படுத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டது.

அஞ்சுகம் அம்மையார் நினைவு திட்டம்

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தில் கடந்த ஆண்டு 45 ஆயிரத்து 999 ஏழைப் பெண்களுக்கு 69 கோடி ரூபாய் திருமண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ள ரூ.75 கோடி நிதி மூலம் 50 ஆயிரம் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.


நிலுவையில் உள்ள தகுதியுள்ள விண்ணப்பங்கள் அனைத்திற்கும் 31-ந் தேதிக்குள் நிதியுதவி வழங்கப்படவேண்டும் என்றும், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை பெண்களின் மகள் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் 2.95 கோடி ரூபாய் செலவிலும், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டத்தில் ரூ.30 லட்சம் செலவிலும், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு ஏழை விதவை மறுமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் செலவிலும், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் ரூ.3.5 கோடி செலவிலும் உரிய நேரத்தில், சரியான பயனாளிகளுக்கு நிதியுதவிகளை வழங்க முடிவு செய்யப்பட்டது.


57 லட்சம் மாணவ-மாணவிகள்

சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் 57.64 லட்சம் மாணவ மாணவிகளுக்கும், மகளிர் தையல் கூட்டுறவு சங்கங்களின் 25ஆயிரத்து500 உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் செயல்படும் பள்ளிகளின் மாணவர்களுக்கும் இலவசச் சீருடைகளை விரைவில் அளித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் ரூ.1.5 கோடி செலவில் 2,300 மையங்களுக்கு எரிவாயு அடுப்பு மற்றும் பிரஷர் குக்கர்களையும், பள்ளி சத்துணவுத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு கோடி ரூபாயுடன் மேலும் ஒரு கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு மொத்தம் 2 கோடி ரூபாய் செலவில் சத்துணவு மையங்களுக்கு எரிவாயு அடுப்பு மற்றும் பிரஷர் குக்கர்களையும் உடனடியாக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

4.77 லட்சம் குழந்தைகளுக்கு தட்டு, டம்ளர்

ரூ.1.51 கோடி செலவில் 4.77 லட்சம் குழந்தைகளுக்கு புதிய தட்டு மற்றும் டம்ளர்கள் வழங்கிடவும்; 50 லட்சம் ரூபாய் செலவில் 1,667 மையங்களுக்கு புதிய சமையல் பாத்திரங்களை வழங்கிடவும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை பெண்களின் மகள் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு ஏழை விதவை மறுமண நிதியுதவித் திட்டம் ஆகியவற்றில் வழங்கப்படும் திருமண நிதியுதவிகளையும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதைப் போன்றே 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி ஆய்வு முடிவில் அறிவித்தார்.

இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடியே 75 லட்ச ரூபாய் கூடுதல் செலவாகும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

0 comments: