]]

Tuesday, July 17, 2007

இடஒதுக்கீடு பிரச்சினைக்காகசட்டசபையின், சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்

இடஒதுக்கீடு பிரச்சினைக்காக சட்டசபையின், சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்
தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்

நாகப்பட்டினம், ஜுலை.17-

தமிழ்நாட்டில் கிறிஸ்தவ, இஸ்லாமிய, ஆதிதிராவிட மக்களின் இட ஒதுக்கீட்டிற்காக தமிழக அரசு சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் பேசினார்.


நாகப்பட்டினத்தில் நடந்த இஸ்லாமிய, கிறிஸ்தவ, ஆதிதிராவிட மக்களின் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசும் போது கூறியதாவது:-


அரசியல் வளர்ப்பதற்காக அல்ல


சிறுபான்மை சமுதாயத்தினரின் வாழ்வுரிமைக்காக மட்டுமே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இது அரசியல் வளர்ப்பதற்காக அல்ல. இது சமுதாய மாநாடு. இந்த சமுதாய மாநாடு உயரிய நோக்கம் கொண்டது.

ஒடுக்கப்பட்ட மக்கள் சோறு, துணி வேண்டும் என்று கேட்கவில்லை. அவர்களுடைய உரிமையான கல்வி, வேலை வாய்ப்பில் விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டும் என்று தான் கேட்கிறார்கள்.

சிறப்பு சட்டமன்றம்

பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக நீதிபதி ஜனார்த்தன் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இது சில புள்ளி விவரங்களை சேகரித்துக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். அப்படிப்பட்ட கமிஷனே தேவையில்லை என்பது தான் எங்கள் குறிக்கோள்.

சமீப காலமாக ஆந்திரா வழிகாட்டியாக உள்ளது. எனவே ஆந்திராவை பின்பற்றி தமிழக அரசு இவர்களுக்கான வாழ்வுரிமை சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

இதற்காக சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி இடஒதுக்கீடு குறித்து தீர்மானம் கொண்டு வந்து அதனை சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என இந்த மாநாட்டின் வாயிலாக தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.


வேலைவாய்ப்பு குறைந்து வரும் வேளையில் இது அவசியமான ஒன்று. இடஒதுக்கீடு அரசியலில் கூட வேண்டும்.

ஆதிதிராவிட மக்களுக்கு தனி சட்டமன்ற தொகுதிகள் இருப்பது போல இஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கும் தனி சட்டமன்ற தொகுதி, பாராளுமன்ற தொகுதி இருக்க வேண்டும் என பா.ம.க. விரும்புகிறது. பொது தொகுதி இருக்க கூடாது என்பது தான் எங்கள் நோக்கம்.

தலித் மக்களுக்கான சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதி ஒதுக்கீடு இன்னும் அதிகப்படுத்த வேண்டும். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை இதுபோன்ற மாநாடுகள் தொடர்ந்து நடத்துவோம். இதற்காக எந்த வகை தியாகத்தையும் செய்து உரிமைகளை பெற்றே தீருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: