]]

Sunday, July 22, 2007

சான்றிதழ் நகல்களில் அனைத்து குரூப்-பி அதிகாரிகளும் `அட்டஸ்டேஷன்' செய்யலாம்

சான்றிதழ் நகல்களில் அனைத்து குரூப்-பி அதிகாரிகளும் `அட்டஸ்டேஷன்' செய்யலாம்
- தமிழக அரசு உத்தரவு

சான்றிதழ் நகல்களில் இனி அனைத்து குரூப்-பி அதிகாரிகளும் அட்டஸ்டேஷன் (சான்றொப்பம்) செய்யலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மேற்படிப்பு சேர விரும்பும் மாணவர்கள், வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் பெரிதும் பயன் அடைவார்கள்.

கல்லூரியில் சேர விண்ணப்பிக்கும் போதும், அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் போதும், அரசு உதவிகள் பெறவும் அசல் சான்றிதழ்களின் நகல்களில் பச்சை மையினால் கையெழுத்து போடும் அரசு அதிகாரிகளிடம் (கெசட்டட் ஆபிசர்) சான்றொப்பம் வாங்க வேண்டும்.

அப்போதுதான் அந்த நகல்கள் செல்லுபடியாகும். விண்ணப்பங்களில் ஒட்டப்படும் போட்டோக்களிலும் இதேபோல் சான்று பெற வேண்டும். மேலும் வங்கிகளில் கடன் பெற விண்ணப்பிக்கும்போதும் சான்றிதழ் நகல்களில் சான்றொப்பம் வாங்க வேண்டும்.


தற்போது குரூப்-ஏ எனப்படும் கெசட்டட் அதிகாரிகளுக்கு மட்டுமே சான்றொப்பம் இடும் அதிகாரம் உள்ளது. சான்றிதழ்களிலோ அல்லது போட்டோக்களிலோ சான்றொப்பம் வாங்கச் செல்லும்போது பெரும்பாலான அதிகாரிகளுக்கு ரூ.100, ரூ.200 பணம் வெட்டினால்தான் கையெழுத்து போடுவார்கள். சான்றொப்பமிட பணம் வாங்காத அதிகாரிகளும் நிறையபேர் உண்டு.

குரூப்-பி

சான்றொப்பம் வாங்க அதிகாரிகளை தேடி அலைந்து கையெழுத்து வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.


இந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக குரூப்-பி அதிகாரிகளுக்கும் சான்றொப்பம் செய்யும் அதிகாரம் வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தன.


இதைத் தொடர்ந்து அவர்களின் கோரிக்கையை ஏற்று சான்றிதழ் நகல்களில் கையெழுத்து போடும் அதிகாரத்தை குரூப்-பி அதிகாரிகளுக்கும் அரசு வழங்கி இருக்கிறது.

இதற்கான அரசாணை கடந்த 18-ந் தேதி வெளியிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மாநில பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-


அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் அவர்களை குரூப்-ஏ, குரூப்-பி, குரூப்-சி, குரூப்-டி என்று 4 வகைகளாக பிரிக்கலாம். தற்போது அனைத்து குருப்-ஏ, அதிகாரிகளும், ரூ.5,900 அடிப்படை சம்பளம் வாங்கும் குரூப்-பி அதிகாரிகளும் சான்றொப்பம் செய்ய அதிகாரம் இருக்கிறது.


அரசு ஊழியர் சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க அனைத்து குருப்-பி அதிகாரிகளும் (ரூ.5,500 முதல் ரூ.10,000 வரை அடிப்படை சம்பளம் வாங்குவோர்) சான்றிதழ்களிலும், ஆவணங்களிலும் சான்றொப்பமிட அதிகாரம் அளிக்கப்படுகிறது.

அட்டஸ்டேஷன் செய்யும் அதிகாரிகள் அசல் சான்றிதழ்கள் மற்றும் ஒரிஜினல் ஆவணங்களை சரிபார்த்து உறுதி செய்த பின்னரே கையெழுத்திட வேண்டும்.


இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

0 comments: