]]

Wednesday, July 18, 2007

பரங்கிப்பேட்டை நகராட்சியாக மாறுமா?


பரங்கிப்பேட்டை நகராட்சியாக மாறுமா?



கடலூர் மாவட்டதில் மொத்தம் நான்கு தேர்வுநிலை பேருராட்சிகளை மாநகராட்சியாக மாற்ற தமிழக அரசு உத்தேசித்துள்ளது.


அவற்றில் பரங்கிப்பேட்டையும் ஒன்று. வடலூர், புவனகிரி மற்றும் அண்ணாமலை நகர் போன்றவையும் இவற்றில் அடங்கும்.


இது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் / கலந்துறையாடல் கடந்த வாரம் பரங்கிப்பேட்டை பேருராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் தலைமையில் பரங்கிப்பேட்டையில் நடந்தது.


இக்கூட்டத்திற்கு புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயம் முன்னிலை வகித்தார். பரங்கிப்பேட்டை பொது மக்களும், பரங்கிப்பேட்டை வார்டு உறுப்பினர்களும் இக்கூட்டதில் கலந்துக்கொண்டனர்.


பரங்கிப்பேட்டை நகராட்சியாக மாறினால் எற்படும் நன்மை, தீமைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.

நகராட்சியாக மாறினல், வீட்டு வரி கூட கூடும் என்பது பலதரப்பு மக்களின் கவலை ஆனால், ஊரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டால் வரி ஒரு பிரச்சினை இல்லை என்பது சிலரின் கருததாக இருந்தது.


நகராட்சியாக மாற மக்கள் தொகை குறைந்தது 30,000ம், பேருராட்சியின் வருட வருமானம் ரூ. 40 இலட்சமும் இருக்கவேண்டும்.


பரங்கிப்பேட்டையை பொருத்தவரையில் மக்கள் தொகை ஒரு பிரச்சனையாக இருக்காது. ஆனால், பேருராட்சியின் வருட வருமானம் தற்போது ரூ. 30 இலட்சம் மட்டுமே.


கூட்டம் முடிவில் பரங்கிப்பேட்டையை நகராட்சியாக மாற்ற பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பதாக தெரிவிக்கப்பட்டது. இக்கருத்தை மாவட்ட கலக்டருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:


கடலூர் மாவட்டத்தை பொருத்தவரையில் நகராட்சியாக மாற பரங்கிப்பேட்டை மற்றும் வடலூர் ஆகிய இரண்டு பேரூராட்சிகளுக்கு மட்டுமே அதிக வாய்ப்புள்ளது. அப்படியே நகராட்சியால் மாறினால் 'புவனகிரி' என்ற தொகுதி 'பரங்கிப்பேட்டை' என்று மாறுமா?


---------------------------------------------------------------------------------------


அன்பிற்கினிய பரங்கிப்பேட்டை வாழ் உடன் பிறப்புகளுக்கு!

ஏக வல்லோனின் நிறைவான அருள் நம் அனைவரின் மீதும் பொழியட்டுமாக! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)



நமது எண்ணத்தில் பல்லாண்டுகளுக்கு முன் உதித்த எண்ணம் தற்போது நடைமுறைக்கு வருவது குறித்து மிக்க மகிழ்ச்சியடையும் அதே வேளையில் இத்திட்டம் வருவதற்காண தூண்டுகோலை உருவாக்கித் தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எம் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். எல்லாப் புகழும் வல்லோன் அல்லாஹ் ஒருவனுக்கே...!



ஏறக்குறைய 10 வருடங்களுக்கு முன்னால் 'பரங்கிப்பேட்டை இஸ்லாமிய அறக்கட்டளை' சார்பில் நம் நகருக்கு என்னென்ன தேவைகள் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் வெளியாகும் முன்னனி நாளிதழ்களுக்கு செய்திகள் கொடுத்திருக்கின்றோம். அவற்றில் சிலவற்றை தற்போது நினைவுபடுத்தலாம் என்று ஆசைப்படுகின்றோம்.


1. பரங்கிப்பேட்டை மாநகர மக்களின் முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு.


ஏனெனில், நம்முடைய கணிப்பின் பிரகாரம் ஏறக்குறைய 150 தெருக்கள் அல்லது அதைவிட அதிகமாகத்தான் நம் நகரில் உள்ளன. நம் அரசாங்கத்தின் தற்போதைய நகர கணக்கெடுப்பு, மக்கள் தொகையை குறைத்து காட்டுவதாகத்தான் அமைந்துள்ளதே தவிர, முறையான, சரியான கணக்கெடுப்பாக இல்லை.


மக்கள் தொகையை வைத்துத்தான் நம் நகர வளர்ச்சிக்குண்டான தேவைகளை அரசாங்கத்திடம் கோரிக்கையாக வைக்க முடியும் என்பது யாவரும் அறிந்த உண்மை. நம் நகரம் முன்னேற்றம் அடையாமல் இருப்பதற்குண்டான காரணங்களில் இதுவும் ஒன்று என்பதை நம் நகர மக்கள் நினைவில் வைக்க வேண்டும்.


2. தொலைதூர நகரங்களுக்கு நேரடி பேரூந்து வசதி.


தொலைதூர நகரங்களான சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், காரைக்கால், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, சேலம் போன்ற நகரங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது நம் நகரிலிருந்து நேரடி பேரூந்துகளை இயக்கினால் சிதம்பரம் அல்லது கடலூர் சென்று, அங்கிருந்து மற்ற பேரூந்துகளை பிடித்து பயணம் செய்யும் சிரமம் சிறிதளவேனும் குறையும்.


அப்போதைய புவனகிரி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்த ஜனாப். அப்துல் நாஸர் அவர்களிடம், அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவுடன் முதன் முதலாக அவரின் பேட்டியை வெளியிடுவதற்காக திருச்சியிலிருந்து வெளிவரும் 'மறுமலர்ச்சி வார இதழ்' சார்பாக சந்தித்து, அவரின் பேட்டியை வெளியிட்டோம்.



இதழுக்கான பேட்டி முடிந்த பிறகு, தனிப்பட்ட முறையில் பரங்கிப்பேட்டை நகர வளர்ச்சி சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்த போது, பரங்கிப்பேட்டையிலிருந்து சென்னை செல்வதற்காக தினந்தோறும் காலை, பகல் மற்றும் இரவு என மூன்று வேளைகள் அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 'பாயிணட் டூ பாயிண்ட்' பேரூந்துகள் இயக்கப்படுவதற்குண்டான பணிகள் முடிவடைந்த நிலையில் இருப்பதாகவும், கூடிய விரைவில் அது நடைமுறைப் படுத்தப்படும் என உறுதியளித்தார்.


ஆனால், இதுநாள் வரை அவ்வுறுதிமொழி காற்றில் எழுதப்பட்ட வெற்று மொழியாகவே இருப்பதை வேதனையுடன் நினைவு கூறுகின்றோம்.


தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயம் அவர்கள் சட்டப்பேரவையில் எதிர்கட்சி வரிசையில் இருந்தாலும் நம் மண்ணின் மகளான அவர்கள் நம் நகர வளர்ச்சிக்கு தொடர்ந்து குரல் கொடுப்பார் என்று நம்பிக்கை வைக்கின்றோம்.


அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யபட்டமைக்கு பரங்கிப்பேட்டை நகர மக்களின் பங்கு மிக மிக அதிகம் என்பதையும் நினைவுபடுத்துகின்றோம்.


3. பரங்கிப்பேட்டையிலிருந்து கடலூர் நகரம் வரை பேரூந்துகள் இயக்கப்பட வேண்டும். அதே போன்று நகரப் பேரூந்து(டவுன் பஸ்)களும் கடலூர் வரை இயக்கப்பட வேண்டும்.



4. கடலூர் முதல் சிதம்பரம் வரை செல்லக்கூடிய சில தனியார் பேரூந்துகள் பரங்கிப்பேட்டை வழியாக செல்வதற்குண்டான அனுமதியை வாங்கிக் கொண்டு, பரங்கிப்பேட்டை வழியாக செல்வதில்லை.


அப்படியே சென்றாலும் பரங்கிப்பேட்டைக்கு செல்லும் மக்களை பேரூந்து புறப்படும்போது ஏறச் சொல்வதும், வழி பரங்கிப்பேட்டை என்று குறிப்பிடாமல் செல்வதையும் போக்குவரத்து அதிகாரிகள் கவனிக்க வேண்டும். தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இது போன்ற கோரிக்கைகள் பல முறை பல அமைப்புகள் மூலம் வைக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.


5. கிழக்குக் கடற்கரை சாலை (ECR) பரங்கிப்பேட்டை வழியாகவே அமைய வேண்டும்.



தற்போது இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படாமல் பரங்கிப்பேட்டை வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டு, வேறொரு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.

6. பரங்கிப்பேட்டையை புவனகிரி தொகுதியிலிருந்து பிரித்து தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும்.


7. பரங்கிப்பேட்டை பேரூராட்சியை நகராட்சியாக உயர்த்த வேண்டும்.


8. பரங்கிப்பேட்டை நகரில் அரசு கல்லூரி (குறிப்பாக மகளிர் கல்லூரி) மற்றும் தொழில் நுட்ப பயிலகம் ஏற்படுத்த வேண்டும்.



9. வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும். இத்திட்டம் கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தின் உட்பிரிவாக அமைக்க வேண்டும்.



இது போன்ற நல்ல பல முன்னேற்ற திட்டங்களை நம் நகர வளர்ச்சிக்காக கோரிக்கையாக வைத்திருந்தோம். கிணற்றில் போடப்பட்ட கல்லாக இருந்தவை, தற்போது ஒவ்வொன்றாக செயல்வடிவம் அடையும்போது நம்மால் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.


இருப்பினும் நம் நகரம் முன்னேற்றம் காண வேண்டுமானால்... ஜாதி, மதம், கட்சி, இயக்கம், அமைப்பு, சங்கம், பேரவை, ஆண்டான், அடிமை, உயர்ந்தோன், தாழ்ந்தோன், ஆண், பெண், சிறியோர், முதியோர், படித்தவர், படிக்காதவர், முதலாளி, தொழிலாளி, வியாபாரி என எவ்வித வேறுபாடும் இல்லாமல், அனைவரும் ஒன்று கூடி, மக்கள் இயக்கமாக மாறி போராடினோம் என்றால் மேற்கூறப்பட்டவையுடன் மேலும் பல நல்ல செயற்திட்டங்களை நம் நகருக்கு கொண்டு வரலாம். கொண்டு வர முடியும்.


''நம் மக்கள் நலமுடன் வாழ நாம்தான் முயற்சி எடுக்க வேண்டும்'' என்ற சிந்தனை நம் நகர மக்கள் ஒவ்வொருவருக்கும் வந்து விட்டால் அதை விட பெரிய வெற்றி வேறு எதுவுமில்லை.


இதற்காக பரங்கிப்பேட்டையில் செயல்பட்டுவரும் அனைத்து அமைப்புகளும் தங்களால் முடிந்தளவு இச்செய்திகளை மக்களிடம் எடுத்து வைத்து, நற்காரியங்கள் நலமுடன் நடைபெற நல் ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

இந்த செய்திகளில் குறை இருப்பின் எனக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன். ஏனெனில், நான் வெளிநாட்டில் தொழில் புரிவதால் சில செய்திகள் செவி வழி செய்தியாக கிடைப்பதுண்டு. அவ்வகையில் சில தவறுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி சுட்டிகாட்டும் பட்சத்தில் அடுத்து வரும் பதிவுகளில் திருத்தங்கள் வெளியிடுவதற்கும் தயாராக இருக்கின்றேன்.



என்றும் மாறா அன்புடன்


உங்களில் ஒருவன்...

ஊர் மக்களில் ஒருவன்...


மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ.,

மின்னஞ்சல்கள் :

abkaleel@gmail.com / abkaleel@yahoo.com / khaleel_baaqavee@yahoo.com




இணைய / வலைப்பதிவுகள்


www.khaleel-baaqavee.blogspot.com / www.ppettai.blogspot.com / www.parangipettai.com / www.k-tic.com


வரலாறு படைத்த பெருநகரம் பரங்கிப்பேட்டை! - நம்

மக்கள் வளமுடன் வாழ அமைப்போம் இராஜப்பாட்டை!!


கடல் கடந்து வந்தோம் / சென்றோம் பொருள் தேட...!

கை கோர்த்து நிற்போம் இறை அருள் தேட...!!

0 comments: