]]

Wednesday, July 18, 2007

கடலூர் மாவட்டத்தில் சுனாமி திட்ட பணிகள் மத்திய திட்டக்குழு ஆலோசகர் திடீர் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் சுனாமி திட்ட பணிகள் மத்திய திட்டக்குழு ஆலோசகர் திடீர் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் நடந்து வரும் சுனாமி திட்டப் பணிகளை மத்திய திட்டக் குழு ஆலோசகர் சோங்கர் நேற்று ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்ட கடற்கரை பகுதிகளில் உள்ள கிராமங்களில் சுனாமி தாக்கியதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நிரந்தர வீடு கட்டும் பணி, சிமென்ட் ரோடு போடும் பணி உள்ளிட்ட பணிகளும், முதியோர் இல்லம், சிறுவர்கள் காப்பகம், சுனாமியால் பாதித்த பகுதிகளைச் சேர்ந்த பெண்களுக்கான பயிற்சி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கடலூர் மாவட்டத்தில் நடந்து வருகின்றன.

இதில் பல பணிகள் முடிவடைந்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியிலிருந்து சிமென்ட் சாலை அமைத்தல் உட்பட பல பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

கடலூர் மாவட்டத்தில் நடந்து வரும் பணிகளை மத்திய திட்டக்குழு ஆலோசகர் (சுனாமி திட்டப் பணிகள்) சோங்கர், சுனாமி திட்ட சிறப்பு அதிகாரி சங்கர் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பரங்கிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அன்னங் கோவில், சி.புதுப்பேட்டை, சாமியார் பேட்டை, புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வரும் சிமென்ட் சாலை அமைத்தல், நிரந்தர வீடுகள், காப்பகங்கள் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர்.

பின்னர் கடலுõரில் சமூக நலத்துறை சார்பில் இயங்கும் சுனாமியால் தாய் தந்தையை இழந்த குழந்தைகளின் காப்பகத்தை பார்வையிட்டனர். அங்கு குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்படும் கல்வி, இருப்பிட வசதிகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

பின்னர் திட்டக்குழு ஆலோசகர் சோங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:

கடலூர் மாவட்டத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியின் மூலம் நடந்து வரும் சுனாமி திட்ட பணிகள் மற்றும் வாழ்வாதாரப் பணிகளை ஆய்வு செய்ததில் பணிகள் சிறப்பாக நடந்துள்ளது.

அரசு தொண்டு நிறுவனங்கள் சார்பில் பல்வேறு காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை பாதுகாத்து பராமரிப்பதற்கான ஊழியர்கள் இல்லை. போதுமான ஊழியர்களை நியமிக்க அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல இடங்களில் விளக்கு வசதிகள் இல்லாமல் உள்ளது. அவற்றை செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது கடலூர் மாவட்ட வருவாய் அதிகாரி (சுனாமி) இளங்கோவன், தாசில்தார் (சுனாமி) முகமது இப்ராகீம், மக்கள் தொடர்பு அலுவலர் அன்புசோழன், மாவட்ட சமூக நல அலுவலர் பிரபாவதி ஆகியோர் இருந்தனர்.

0 comments: