]]

Tuesday, July 10, 2007

பருவநிலை குறித்த சர்வதேச கட்டுரை போட்டி

பருவநிலை குறித்த சர்வதேச கட்டுரை போட்டி

தெற்கு ஆஸ்திரேலியா அரசு சார்பில் தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டி நடக்கிறது.


இதுகுறித்து தெற்கு ஆஸ்திரேலியா அரசின் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பிரிவு இயக்குனர் தரீன் நிருபர்களிடம் கூறியதாவது:

பருவ நிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவை உலகை அச்சுறுத்தி வரும் விஷயங்களாகும். இது குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும் விதத்தில் 'பருவநிலை மாற்றமும், எதிர்கால உலகமும்' என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியை நடத்தவுள்ளோம்.

அடுத்த தலைமுறைக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு சர்வதேச அளவில் மாணவர்களுக்கு இந்த போட்டி நடத்தப்படுகிறது.

தமிழக அரசின் கல்வித்துறையுடன் இணைந்து நடத்தப்படும் இப்போட்டியில் ஐந்து முதல் 18 வயது வரையுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம்.

ஆங்கிலம் மற்றும் தமிழில் கட்டுரைகளை எழுதலாம்.

கட்டுரை தவிர சுற்றுசூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாதிரி வடிவமைப்புகளை தயாரித்தும் கொடுக்கலாம்.


ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு நகரம் "சோலார்' மின்சாரம் மூலம் இயங்கும் நகரமாகும். இந்த நகரத்தில் அடுத்த ஆண்டு (2008) பிப்ரவரி மாதம் நடக்கும் சுற்றுச் சூழல் குறித்த சர்வதேச மாநாடு நடக்கிறது.

கட்டுரைப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள 250 பள்ளிகள், அடிலெய்டில் உள்ள விமான நிலையம், பொது போக்குவரத்து மற்றும் அரசு கட்டடங்களில் சூரிய ஒளி மூலம் மின்சக்தி உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

இந்த கட்டுரைப் போட்டிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் ஆர்வத்தோடு பங்கேற்று வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களுடன் இணைந்து ஏற்கனவே கல்விப் பரிமாற்றங்களை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த கட்டுரைப் போட்டி மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதத்தில் அமையும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு தரீன் தெரிவித்தார்.

0 comments: