]]

Friday, August 17, 2007

மதுரையில் பிரின்டிங் தொழில் நுட்ப கண்காட்சி

பிரின்டிங் மற்றும் பேக்கேஜிங் தொழில் கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் வரும் 23ம் தேதி முதல் நான்கு நாட்கள் நடக்கிறது.

கண்காட்சி குழு தலைவர் ஆர்.எம்.லட்சுமி நாராயணன் கூறியதாவது:

பிரின்டிங் மற்றும் பேக்கேஜிங் தொழிலில் பல்வேறு நவீன தொழில் நுட்பங்கள் வந்துள்ளன. இவற்றை அறிந்து கொள்ள கண்காட்சிகள் அவசியம். இந்த கண்காட்சிகள் மும்பை, கோல்கட்டா, டில்லி போன்ற நகரங்களில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. சாதாரண அச்சக உரிமையாளர்கள் இவற்றுக்கு செல்வது இயலாத காரியம்.

தென் மாவட்டங்களில் இந்த தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்திலேயே முதன் முதலாக மதுரையில் கண்காட்சி நடத்தப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை இக்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக 1990ல் மதுரை மாவட்டத்தில் 100க்கும் குறைவாக இருந்த அச்சகங்கள், தற்போது இரண்டாயிரத்திற்கும் அதிகமாக உருவாகியுள்ளன.

கடந்த முறை நடந்த கண்காட்சியில் மாலத்தீவு, இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர். இதன் மூலம் ரூ.2.50 கோடிக்கு வர்த்தக பரிமாற்றம் நடந்தது.

மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆக.,23 முதல் 26ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது. கலெக்டர் ஜவகர், ஸ்டேட் வங்கி துணை பொது மேலாளர் சதாசிவம் ஆகியோர் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தலைசிறந்த மிஷின் உற்பத்தியாளர்கள், அச்சகத் துறையினர், பேக்கேஜிங் துறையினர் என நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். 75 அரங்குகள் அமைக்கப்படும்.

இவற்றில் பிரின்டிங், பேக்கேஜிங், பேப்பர் கப் போன்ற துறைகளில் நவீன தொழில்நுட்பங்கள், சார்பு தொழிலில் நவீன இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்படும். குறிப்பாக ரூ.12 லட்சம் மதிப்பிலான நவீன தானியங்கி பேக்கேஜிங் மிஷினுக்கு மாற்றாக, கோவையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் ரூ.3.50 லட்சத்தில் தயாரித்துள்ளார். இந்த மிஷின் காட்சிக்கு வைக்கப்படும்.

கண்காட்சியை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை காணலாம். இவர்கள் கண்டிப்பாக தொழில் அடையாள அட்டையை (பிசினஸ் கார்டு) வைத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் மட்டுமே இயந்திரங்களை இயக்கி விளக்கம் அளிக்கப்படும்.

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுவர்.

ஆக. 25ம் தேதி மடீட்சியா அரங்கில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை "கம்ப்யூட்டர் கிராபிக் டிசைனிங்' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடக்கிறது. அச்சகத் துறையிலும், கம்ப்யூட்டர் வரை கலையிலும் பல ஆண்டுகள் செயல்முறை அனுபவம் உள்ள கோவை பாலாஜி கம்ப்யூட்டர் வரை கலை பயிலகத்தின் நிர்வாகி ஜெ.வீரநாதன் மற்றும் இத்துறையில் அனுபவம் பெற்ற கோவை, மும்பை, சென்னையைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் கருத்தரங்கை நடத்துவர்.

அச்சகங்கள், டி.டி.பி., மையங்கள், விளம்பர நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், மேலாளர்கள், உரிமையாளர்கள், அச்சகத் துறை மாணவர்கள் பங்கேற்கலாம். நுழைவுக் கட்டணம் ரூ.100. மாணவர்களுக்கு ரூ.50 சலுகை கட்டணம். முதலில் முன்பதிவு செய்யும் 75 பேர் மட்டுமே கருத்தரங்கிற்கு அனுமதிக்கப்படுவர்.

பதிவு கட்டணத்தை "மடீட்சியா பிரின்ட் அண்டு பேக்' என்ற பெயருக்கு மதுரையில் மாற்றத்தக்க டி.டி., எடுத்து "ஒருங்கிணைப்பாளர், கருத்தரங்க கமிட்டி, பிரின்ட் அண்டு பேக், மடீட்சியா, அம்பேத்கர் ரோடு, மதுரை 20 என்ற முகவரியில் முன்பதிவு செய்ய வேண்டும்.

சிறந்த அச்சுக்கலை விருது

ஆக.,26ம் தேதி தமுக்கம் மைதானத்தில் சிறந்த அச்சுக்கலை விருது வழங்கும் விழா நடக்கிறது. ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு விருதுக்கான அச்சுக்கலையை தேர்வு செய்யும். விருது பெற விரும்புவோர் சிறந்த அச்சு படைப்புகளை மடீட்சியாவில் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு லட்சுமிநாராயணன் கூறினார்.

0 comments: