]]

Friday, September 28, 2007

8ம் வகுப்பு தனித்தேர்வு உருது மொழியில் எழுதலாம் - தமிழக அரசு

உருது மொழி பேசும் மாணவர்கள் 8ம் வகுப்பு தனித்தேர்வு எழுத சலுகை

எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் உருது மொழி பேசும் மாணவர்கள் பெற்று வந்த சலுகையை, எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கும் வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதைத் தொடர்ந்து எட்டாம் வகுப்பு தனித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் ஐந்தாம் தேதிவரை நீட்டிப்பு செய்து தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தமிழ், ஆங்கிலம் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது ஆகிய மொழிகளில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை எழுதலாம் என்ற நடைமுறை, தற்போது அமலில் இருந்து வருகிறது.

அரசு தேர்வுத் துறை நடத்தும் பல்வேறு தேர்வுகளில் எட்டாம் வகுப்பு தனித் தேர்வும் ஒன்று.

பள்ளி படிப்பை பாதியில் விட்ட மாணவர்கள், நேரடியாக எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வை தனித் தேர்வாக எழுதி தேர்ச்சி பெற முடியும்.

ஒன்பதாம் வகுப்பை பள்ளிகளில் இருந்து தொடரலாம்.

இந்த தேர்வு பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

இந்த வகை மாணவர்களுக்கு மொழி முதற் தாள், மொழி இரண்டாம் தாள் மற்றும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

மொழி முதற்தாள் தேர்வை, மாணவர்கள் தங்களது மொழிகளில் எழுத வேண்டும்.

ஆங்கிலம், மொழி இரண்டாம் தாளாக இருந்து வருகிறது.

மற்ற மூன்று பாடத் தேர்வுகளை தமிழ் அல்லது ஆங்கில வழியில் எழுத வேண்டும்.

இந்த முறையில் தான் இதுவரை தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன.

தற்போது மற்ற பாடத் தேர்வுகளையும் மாணவர்கள் விரும்பினால் உருது மொழியில் எழுதலாம் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

எட்டாம் வகுப்பு தனித் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு, 20ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.

ஆனால், திடீரென்று தமிழக அரசு ஆணை பிறப்பித்ததால், உருது மொழியில் தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கு வசதியாக அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நீட்டிப்பு செய்து தேர்வுத் துறை அறிவித்துள்ளது.


தேர்வுத் துறை வெளியிட்ட அறிவிப்பு

எட்டாம் வகுப்பு தனித் தேர்வு, டிசம்பர் மாதம் நடக்கிறது.

தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது மொழியிலும் தேர்வெழுதலாம் என்று ஆணையிடப்பட்டுள்ளது.

உருது மொழியில் தேர்வு எழுதுபவர்கள், விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.

மொழி பகுதி தேர்வை, உருது மொழியில் தேர்வெழுத விருப்பம் தெரிவித்து, மற்ற பாடங்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தேர்வெழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களில், யாரேனும் உருது மொழியில் தேர்வெழுத விரும்பினால் தங்களது விருப்பத்தை சம்பந்தப்பட்ட மண்டல துணை இயக்குனருக்கு கடிதம் மூலம் உடனடியாக தெரிவிக்கலாம்.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

உருது மொழியில் தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை அதிகளவில் வந்ததால், தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தனித் தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்களில் 20 பேர் உருதை மொழிப் பாடமாக குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக அரசின் புதிய உத்தரவை அடுத்து, உருது மொழியின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

0 comments: