]]

Saturday, September 15, 2007

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

குறைந்த பட்சம் ரூ. 90 முதல் ரூ. 1200 வரை கிடைக்கும்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளித்து கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜுலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. விலைவாசி உயர்வு புள்ளிகள் கணக்கின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது.

மத்திய அரசு அறிவிக்கும் அகவிலைப்படி உயர்வையொட்டி தமிழக அரசும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகிறது.

6 சதவீதம் உயர்வு

கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசும் 4 சதவீத அகவிலைப்படியை ஜனவரி 1-ந் தேதி முதல் முன்தேதியிட்டு உயர்த்தி அறிவித்தது.

ஜுலை மாதம் 1-ந் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதனை பின்பற்றி தமிழக அரசும் இப்போது 6 சதவீத அகவிலைப்படி உயர்வை ஜுலை மாதம் 1-ந் தேதி முதல் முன்தேதியிட்டு அறிவித்துள்ளது.

கருணாநிதி அறிவிப்பு

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படியை 1.7.2007 முதல் உயர்த்தி அறிவிக்கப்பட்டதையொட்டி, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை 1.7.2007 முதல் 6 சதவீதம் உயர்த்தி முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று அறிவித்துள்ளார்.

உயர்த்தப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி ரொக்கமாக வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு கூடுதலாக ஆண்டொன்றுக்கு 817 கோடி ரூபாய் செலவாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரூ. 1200 வரை கூடுதல் கிடைக்கும்

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் சூரியமூர்த்தி, அரசு பணியாளர் சங்க தலைவர் கு.பாலசுப்பிரமணியன் மற்றும் பல்வேறு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.

இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம் அரசு ஊழியர்களுக்கு ரூ.90 முதல் ரூ.1200 வரை கூடுதலாக கிடைக்கும். இதன் மூலம் சுமார் 13 லட்சம் அரசு அலுவலர்கள், 5 லட்சம் ஓய்வூதியர்கள் பலன் பெறுவார்கள்.

0 comments: