அடுத்த மாதம் 9-ந் தேதி நடக்கிறது சென்னை பல்கலைக்கழக 150-வது ஆண்டு நிறைவு விழா
மன்மோகன் சிங், சோனியா, கருணாநிதி பங்கேற்பு
சென்னை பல்கலைக்கழகத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
150-வது ஆண்டு விழா
சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் துணைவேந்தர் எஸ். ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பதிவாளர் ரெங்கநாதம் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பிறகு துணைவேந்தர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பல்கலைக்கழகத்தின் 150-வது ஆண்டு நிறைவுவிழா நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 9-ந் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்-அமைச்சர் கருணாநிதி, கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
பல்கலைக்கழக சேப்பாக்கம், கிண்டி, தரமணி வளாகங்களில் தலா ரூ. 25 கோடி செலவில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடத்திற்கு அவர்கள் அடிக்கல் நாட்டுவார்கள். இந்த விழாவில் 42 புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன.
பழைய மாணவர்களுக்கு விருது
100 குடிசை பகுதிகளையும் 50 கிராமங்களையும் தத்தெடுக்க சென்னை பல்கலைக்கழகம் முன்பு முடிவு செய்திருந்தது. அதன் தொடக்கவிழா வருகிற 21-ந் தேதி நடைபெறும்.
150-வது ஆண்டு விழாவை ஒட்டி சாதனைகள் படைத்த பழைய மாணவர்கள் 150 பேருக்கு விருது வழங்கப்படும்.
இந்த விழாவுக்கு ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை அழைக்க முடிவு செய்துள்ளோம்.
பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும்.
இவ்வாறு துணைவேந்தர் ராமச்சந்திரன் கூறினார்.
0 comments:
Post a Comment