]]

Saturday, September 15, 2007

ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை முன்பணம் ...

ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை முன்பணம் 1000 ரூபாயாக உயர்வு

கருணாநிதி அறிவிப்பு

'ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்' என்று சேலத்தில் நடந்த ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க முப்பெரும் விழா

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று சேலம் ரத்ன வேல் கவுண்டர் திருமண மண்டபத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது.

சங்க பொன்விழா, ஓய்வூதியம் பெறுவோருக்கு கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்கியதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விழா மற்றும் சட்டமன்ற பணியில் 50 ஆண்டுகாலம் பணியாற்றிய முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழாவாக நடைபெற்ற இந்த விழாவுக்கு சங்கத்தின் மாநில தலைவர் பி.ஜி. மாசிலாமணி தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் கே.ஆனந்த நடராசன் மாநாட்டை தொடங்கிவைத்தார்.

விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க பொன்விழா மலரை வெளியிட்டார். முதல் பிரதியை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பெற்றுக் கொண்டார்.

விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசும்போது கூறியதாவது:-

நீங்கள் ஓய்வு பெற்றவர்கள் - ஓய்வூதியத்தினுடைய ஏற்றத்தாழ்வு, அதை வகைப்படுத்தி வழங்குதல், இன்ன பிற பிரச்சினைகளில் எத்தனையோ கோரிக்கைகளை வைத்து இந்த அரசின் சார்பாக அவற்றை எல்லாம் பெற்றிருக்கிறீர்கள்.

இந்த அரசு அவற்றை நிறைவேற்றி கொடுத்திருக்கின்றது. அதில் நாங்களும் பெருமை அடைகிறோம். நீங்களும் மகிழ்ச்சி அடைகின்றீர்கள்.

பொறாமைப்படுகிறேன்

என்னைப் பொறுத்தவரை ஓய்வு பெற்றவர்களைப் பார்த்து பொறாமை கொள்பவன். ஏனென்றால் எனக்கு இன்னும் ஓய்வு கிடைக்கவில்லையே என்ற காரணத்தினால் பொறாமைப்படுபவன். அது சேலத்துக்குப் பிறகாவது எனக்கு கிடைக்க வேண்டும். ஏன் என்றால் சேலம் திராவிட இயக்க சரித்திரத்தில் சில முக்கியமான திருப்புமுனைகளை உருவாக்கிய இடம். உருவாக்கக்கூடிய இடம். இனிமேலும் உருவாக்கும் என்று நான் எதிர்பார்க்கின்ற இடம்.

ஆகவே ஓய்வு பெற்ற உங்களை எல்லாம் நீங்கள் இருக்கும் உற்சாகத்தை கண்டு நானும் ஓய்வு பெற்றால் எவ்வளவு உற்சாகமாக இருக்கலாம், இந்த உபத்திரவம் எல்லாம் இல்லாமல் என்கின்ற அந்த எண்ணம் எனக்கு ஏற்படுகிறது.

இதை வைத்தே நாளை சில பத்திரிகைகள் தலையங்கங்கள் எழுதும். சில வாரப்பத்திரிகைகள் யூகங்களை வெளியிடும். அவர்களுக்கு வேலை கொடுப்பதற்காகவாவது இந்த வாசகங்களை நான் இங்கே சொல்ல வேண்டும் என்று எண்ணி சொல்லி இருக்கிறேன்.

வேறு ஒன்றும் இல்லை. ஒன்றும் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை என்று அர்த்தம் அல்ல. ஒன்றிரண்டு இருக்கிறது என்பதை என்னுடைய தம்பிமார்கள் அறிவார்கள்.

கோரிக்கைகள்

உங்களுடைய கோரிக்கைகளில் மிக முக்கியமாக ஓய்வூதியர்களுக்கு பண்டிகை முன்பணமாக 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக உயர்த்தி தரவேண்டும் என்பதாகும்.

ஓய்வூதியர்களுக்கு பண்டிகை முன்பணம் 500 ரூபாய் வழங்கப்பட்டு இந்த முன்பணம் மாதம் ஒன்றுக்கு 50 ரூபாய் என 10 மாத தவணைகளில் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த பண்டிகை முன்பணம் 1992-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது.

அண்மையில் அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணமாக 1000 ரூபாய் என்பதை 2 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தி ஆணை வழங்கப்பட்டதையும் தற்போது உங்களுக்கு நடைமுறையில் உள்ள 500 ரூபாய் என்பது 1992-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது என்பதையும் கருத்தில் கொண்டு ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை முன்பணமாக 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கலாம் என்று கருதி இருக்கிறோம்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை ஓய்வூதியர்கள் குழுமி இருக்கின்ற இந்த மாநாட்டில் நான் மிகுந்த பெருமையோடும் பூரிப்போடும் நீங்கள் எல்லாம் நிச்சயமாக நிம்மதியடைவீர்கள் என்ற கருத்தோடும் வெளியிடுகின்றேன்.

அதைப்போலவே 1.6.1988 முதல் 31.12.1995 வரையில் ஓய்வு பெற்றவர்கள் ஓய்வு பெறும்போது பெற்ற அகவிலைப்படி முழுவதையும் ஓய்வூதியம் கணக்கிடுவதற்கு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும் உங்கள் முதல் கோரிக்கையாக வைத்துள்ளீர்கள். அதைப்பற்றி இங்கே பேசிய நண்பர்கூட குறிப்பிட்டார்.

இது பற்றி நிதித்துறை செயலாளர்களோடு நான் ஏற்கனவே ஒருமுறை கலந்து பேசி இருக்கிறேன். இந்த கோரிக்கை வரும் என்று தெரிந்து இதைப்பற்றி பேசிய போது அவர்கள் சொன்ன குறிப்பினை உங்களுக்கு படித்துக்காட்ட விரும்புகிறேன்.

இப்படி படித்து காட்டுவதால் அந்த கோரிக்கையை விட்டு விட்டு வேறு பிரச்சினைக்கு செல்கிறேன் என்று நீங்கள் யாரும் கருத தேவையில்லை.

4-வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி 31.5.1988 வரையில் ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும் தருணத்தில் பெற்ற அகவிலைப்படியினை ஊதியத்தோடு இணைத்து ஓய்வூதியம் கணக்கிட ஆணையிடப்பட்டது.

இந்த சலுகை 1.6.1988 முதல் 31.12.1995 வரை ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்திலே இந்த சங்கம் மற்றும் ஓய்வூதியர்கள் தொடுத்த வழக்கிலே தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக உயர்நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டது.


4-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் படி இதனை 1.10.1984 முதல் 31.5.1988 வரை நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். 1.6.1988-க்கு பின் இதனுடைய பரிந்துரையை நடைமுறைப்படுத்த இயலாது.

எனவே, அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து தடையாணை பெற்றது. இந்த வழக்கின்மீது விசாரணை முடிந்து, தீர்ப்பு நிலுவையிலே உள்ளது.

வீண் போகாது

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு பெறப்பட்டவுடன் அந்த அடிப்படையில் இந்த கோரிக்கையின் மீது முடிவு எடுக்கலாம் என்று அதிகாரிகள் மட்டத்திலே யோசித்து வைத்து இருக்கிறோம்.

எனவே தீர்ப்பு வந்த பிறகு இதைப்பற்றி யோசித்து உங்களுக்கு நன்மை கிட்டுகின்ற வகையில், உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகின்ற வகையில் எப்படி அந்த தீர்ப்பை அணுகலாம் என்ற முறையிலே இந்த அரசு செயல்படும் என்பதை உங்களுடைய நம்பிக்கைக்கு எந்தவிதமான ஊனமும் ஏற்படாமல் நான் நிறைவேற்றித்தருவேன் என்பதையும் இந்த முதல் கோரிக்கையை முதன்மையான கோரிக்கையை இங்கே என் முன்னிலையிலே எடுத்து சொல்லப்பட்ட அந்த கோரிக்கையை பற்றி என் கருத்தினை வெளியிட்டு இருக்கிறேன்.

நான் இங்கே சொன்ன சொல் வீண் போகாது. காப்பாற்றப்படும். காப்பாற்றப்படுவதற்கான எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஓய்வு பெற்ற பின்...

நான் முதலிலேயே சொன்னதை போல உங்களை எல்லாம் இங்கே சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஓய்வு பெற்றுவிட்டோம் என்று அத்துடன் நம் கடமைகளை மறந்துவிடக்கூடாது.

ஒருவர் ஓய்வு பெற்று விட்டால் கூட ஓய்வு பெற்ற பிறகு தான் அவர்களுக்கு நிரம்ப பணிகள் சமுதாயத்திலேயே இருக்கின்றன என்பதை எல்லோரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஓய்வு பெறுகிற வரையிலே ஒரு பணிதான். ஓய்வு பெற்று விட்டால் பல பணிகள். பலபணிகளிலே அவர்கள் ஈடுபடவேண்டும். அப்படிப்பட்ட பணிகளிலே முதன்மை பணியாக இந்த சமுதாயத்திலே பகுத்தறிவு கொளுத்துகின்ற இந்த சமுதாயத்திலே மூட நம்பிக்கைகளை வீழ்த்துகின்ற, இந்த சமுதாயத்திலே சாதி-மத பேதங்களை அகற்றுகின்ற, இந்த சமுதாயத்திலே முன்னேற்ற கருத்துகளை முகிழ்க்க செய்கின்ற அந்த பணிகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். அந்த பணிகளிலே நீங்கள் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

ரூ.10 லட்சம் நிவாரணநிதி

முன்னதாக விழா மலரை முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட, அதை தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பெற்றுக்கொண்டார்.

பின்னர் முதல் அமைச்சர் கருணாநிதிக்கும், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

பின்னர் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில், மாநில பொதுச்செயலாளர் என்.சுப்ரமணியம், முதல்-அமைச்சர் நிவாரணநிதியாக ரூ.10 லட்சத்தை முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் வழங்கினார்.

0 comments: