]]

Saturday, September 15, 2007

சிறுபான்மையினர் சார்பாக கருணாநிதிக்கு பாராட்டு விழா

சிறுபான்மையினர் சார்பாக கருணாநிதிக்கு பாராட்டு விழா

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் முடிவு

இடஒதுக்கீட்டுக்கு எதிராக அவசர சட்டம் பிறப்பிப்பதாக அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு, சிறுபான்மையினர் சார்பில் பாராட்டு விழா நடத்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் முடிவு செய்துள்ளது.

இடஒதுக்கீடு

முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை சமுதாய மக்களுக்கு தலா 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க அவசரச் சட்டம் பிறப்பிப்பதாக முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தது தொடர்பாக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் ஹைதர் அலி ஆகியோர் பேட்டி அளித்தனர்.

அவர்கள் கூறியதாவது:-

பாராட்டு விழா

இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு கேட்டு கட்சி தொடங்கிய 1995-ம் ஆண்டு முதல் கோரி வருகிறோம். இந்தக் கோரிக்கைக்காக மாநாடு, பேரணிகளை நடத்தி இருக்கிறோம். எங்கள் கோரிக்கையை தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சேர்த்து, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி, இந்தியாவிலேயே அனைவருக்கும் முன்னுதாரணமாக முதல்-அமைச்சர் கருணாநிதி இருக்கிறார்.

எனவே, எங்களது நீண்டகால கனவை நனவாக்கிய அவரை பாராட்டி, சிறுபான்மை சமுதாயத்தினர் விழா நடத்த இருக்கிறோம். இதற்காக அவரிடம் தேதி கேட்டு இருக்கிறோம்.

அ.தி.மு.க.

இஸ்லாமியர்களில் 6 பிற்படுத்தப்பட்ட பிரிவினரும், கிறிஸ்தவ சமுதாயத்தில் 5 பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் இதனால் பயன் பெறுவார்கள். சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என்று சட்டசபையில் அ.தி.மு.க. சார்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

எனவே முதல்-அமைச்சர் கருணாநிதியின் இந்த முடிவை அ.தி.மு.க. எதிர்க்காது.

ஒருமைப்பாடு

நீண்டகாலமாக மூடி இருந்த கதவு திறந்து இருக்கிறது. அதனால் இந்த இடஒதுக்கீட்டில் திருப்தியா? என்ற கேள்வி இப்போது எழவில்லை. 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்த பிறகு அதனடிப்படையில் அதுதொடர்பாக முடிவெடுப்போம்.

முந்தைய கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் 6 சதவீதமும், இஸ்லாமியர்கள் 5.78 சதவீதமும் உள்ளனர். மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வரப்படுவதால் சமுதாயத்தில் பிளவு ஏற்படாது. மாறாக, சிறுபான்மையினரும் மக்களுக்கு சேவை செய்ய வழி கிடைப்பதால், தேசிய ஒருமைப்பாடு வலுப்பெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

0 comments: