]]

Saturday, September 15, 2007

கிறிஸ்தவ, முஸ்லிம் அமைப்புகள் கருணாநிதிக்கு நன்றி

சிறுபான்மை சமுதாய மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு

கிறிஸ்தவ, முஸ்லிம் அமைப்புகள் கருணாநிதிக்கு நன்றி

சிறுபான்மை சமுதாய மக்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கி அவசர சட்டம் பிறப்பித்துள்ள முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு கிறிஸ்தவ, முஸ்லிம் அமைப்புகள் அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளன.

எம்.கிருஷ்ணசாமி

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் எம்.கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"சிறுபான்மை இனமான முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தலா 3.5 சதவீதம் ஒதுக்கீடு செய்து அவசர சட்டம் பிறப்பித்த முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பாராட்டையும், வரவேற்பையும் தெரிவித்து கொள்கிறேன்.

இந்த ஒதுக்கீடு சட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினரின் கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் மேலும் உயரும் என்பது நிச்சயம்'' என்று கூறியிருக்கிறார்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிறுபான்மை மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் பா.ம.க. தொடங்கிய காலத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறோம்.

தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். நெல்லை, திருச்சி, ஈரோட்டில் வாழ்வுரிமை மாநாடுகளை நடத்தினோம்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறுபான்மை மக்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கி, அதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதற்கு பா.ம.க. சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

தமிழக ஆயர் பேரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பிபிஇட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றிய முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு தமிழகம் முழுவதும் வாழும் ஒரு கோடி கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் சார்பாக பல கோடி நன்றிகளை தெரிவித்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெஞ்சம் நிறைந்த நன்றி

மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பாதிரியார் வின்சென்ட் சின்னதுரை, வெளியிட்ட அறிக்கையில்,

"சிறுபான்மை மக்களுக்கு உரிமைகள் பறிக்கப்பட்ட நேரங்களில் எல்லாம் அவர்களுக்கு அரணாகவும், பாதுகாப்பாகவும் இருந்து வருபவர் முதல் அமைச்சர் கருணாநிதி. பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீதத்தில் முஸ்லீம்களுக்கு 3.5 சதவீதம், கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீட்டை அறிவித்ததற்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக'' தெரிவித்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் எம். காதர் மொகைதீன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழக சிறுபான்மை மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்றுக் கொண்டு தமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதற்கு இதயம் திறந்த வாழ்த்தினையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும் ரமலான் முதல் நாளில், வெள்ளி ஜும் ஆ தொழுகையில் முஸ்லிம் சமுதாயம் நன்றி தெரிவித்து அறிவிப்பு செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

பேராயர் எஸ்றா சற்குணம்

இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் வெளியிட்ட அறிக்கையில்,

"சிறுபான்மை மக்களுக்கு இட ஒதுக்கீட்டை அண்ணா பிறந்த நாளையொட்டி அறிவித்திருப்பது பாராட்டுதற்குரியது'' என்று தெரிவித்துள்ளார்.

வக்பு வாரிய தலைவர் செ.ஹைதர் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"அகில இந்திய அளவில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு இட ஒதுக்கீட்டுக்காக அவசர சட்டம் நிறைவேற்றியதற்கு, முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய இலக்கிய கழக பொதுசெயலாளர் எஸ்.எம். இதாயதுல்லா வெளியிட்ட அறிக்கையில்,

"சிறுபான்மை மக்களுக்கு தனி ஒதுக்கீடு அளித்து அவசர சட்டம் பிறப்பித்திருப்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறோம். முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று கூறியுள்ளார்.

இதேபோல், அகில இந்திய கிறிஸ்தவ கவுன்சில் தலைவர் ஜி.சுப்புராம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன், சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை பொதுசெயலாளர் மேலை நாசர், தமிழ்மாநில தேசிய லீக் பொதுசெயலாளர் திருப்பூர் அல்தாப், ஈமான் தமிழ் இலக்கிய பேரவை மாநில தலைவர் கமுதி பஷீர், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுசெயலாளர் முகமது அலி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஜே.எம்.ஆரூண் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிறுபான்மை மக்களுக்கு இட ஒதுக்கீடு செய்து அவசர சட்டம் பிறப்பித்துள்ள முதல் அமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், ரம்ஜான் நோன்பு தொடக்க நாள் என்பதால், இது முஸ்லிம் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி என்றும் தெரிவித்துள்ளார்.

0 comments: