]]

Saturday, September 15, 2007

3.5 சதவீத தனி இடஒதுக்கீடு

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் தலா 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு - தமிழக அரசு அவசர சட்டம்

கருணாநிதி அறிவிப்பு

தமிழ்நாட்டில் கல்வி வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு தலா 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு

தமிழகத்தில் வாழும் சிறுபான்மைச் சமுதாய மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் தி.மு.க. அரசு எப்பொழுதும் கனிவும், கரிசனமும் கொண்டுள்ளது என்பது அச்சமுதாய மக்கள் அனைவரும் அறிந்ததாகும்.

2006-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில், சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கேற்ப, 13.5.2006 அன்று இந்த அரசு அமைந்தவுடனேயே, 24.5.2006 அன்று கவர்னரின் முதல் உரையில், "சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்த முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு ஏற்படுத்துவதற்குத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்'' என்றும்;

ஆணையம் ஆய்வு

2006-2007ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், "சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்த முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்குக் கல்வி நிலையங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் தனியாக இடஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி வருவதுடன்; தமிழகத்திலும் அவர்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு வழிவகுத்திட தேவைப்படும் உறுதியான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்'' என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்துவதன் முதல்கட்டமாக - நீதிபதி ஜனார்த்தனத்தை தலைவராகக் கொண்டுள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் - இப்பொருள் பற்றி விரிவாக விசாரணையும், ஆய்வும் செய்து உரிய பரிந்துரையை வழங்குமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

3.5 சதவீதம் ஒதுக்கீடு

ஜெ.அ.அம்பாசங்கரை தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்ட தமிழ்நாடு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அறிக்கையில் காணப்படும் இந்துக்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை; கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை; முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை தொடர்பான புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கலாம் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

இந்தப் பரிந்துரையை ஏற்று, அண்ணாவின் 99-ம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக, பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து, தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும், அப்பட்டியலில் இடம்பெற்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் 15.9.2007 முதல் தனி இட ஒதுக்கீடு வழங்கி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறதென முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments: