]]
Showing posts with label இடஒதுக்கீடு. Show all posts
Showing posts with label இடஒதுக்கீடு. Show all posts

Wednesday, September 26, 2007

சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு

சிறுபான்மையினர் இடஒதுக்கீடு

தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

தமிழகத்தில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்து விட்டது.

மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 19ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

கோவையைச் சேர்ந்த வக்கீல் எம்.லோகநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கடந்த 2001ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பிற்படுத்தப்பட்டோர் 46.14 சதவீதம் உள்ளனர்.

இவர்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகைக்கு இணையான இடஒதுக்கீடு இல்லை.

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு தனித்தனியாக 3.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்துதான் இந்த ஏழு சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.

ஓட்டு வங்கிக்காக இந்த இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

கொங்கு வேளாளர் சமூகத்தின் மக்கள் தொகை எட்டு சதவீதம் உள்ளது.

மக்கள் தொகை அடிப்படையில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது போல் அதே அடிப்படையில் தனியாக இடஒதுக்கீடு வழங்குமாறு கோர கொங்கு வேளாளருக்கும் உரிமை உள்ளது.

அதுமட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வரும் ஒவ்வொரு ஜாதியும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு இணையாக தங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க கோரலாம்.

எனவே குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தனி இடஒதுக்கீடு வழங்குவது என்பது பாரபட்சமானது.

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டதுபோல் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள மற்ற ஜாதியினருக்கும் வழங்க வேண்டும்.

தமிழக அரசின் கொள்கை முடிவு அவசர சட்டமாக கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு ஜனாதிபதியின் முன் அனுமதி பெறவில்லை.

அவசரச் சட்டம் உள்நோக்கம் கொண்டது.

சட்டசபையில் விவாதிக்கப்படாமல் இது கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனை ரத்து செய்ய வேண்டும்.

எனவே, கல்வி மற்றும் பணிகளில் பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

அதனை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கு நேற்று தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் சீனியர் வக்கீல் விஜயன் ஆஜராகி, 'மக்கள் தொகை அடிப்படையில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஜனாதிபதியின் முன் அனுமதி பெறப்படவில்லை.

ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இருக்கும்போது மீண்டும் ஒரு ஒதுக்கீடு எப்படி என்கிற கேள்வி எழுகிறது.

சிறுபான்மையினர் என்பதற்காக அல்லாமல் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ளனர் என்பதற்காக அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

தற்போது மீண்டும் உள்பிரிவு கொண்டு வருவது கேலிக்குரியது.

பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து இந்த உள்ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது.

மற்ற ஒதுக்கீட்டை அரசு தொடரவில்லை. அவசரச் சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்' என வாதாடினார்.

அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விடுதலை ஆஜராகி, 'ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்ததன் மூலம் 50 சதவீத ஒதுக்கீட்டை தாண்டி விட்டது.

எனவே, அது ரத்து செய்யப்பட்டது.

பின்னர் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டுக்கு தடை விதிக்கப்படவில்லை.

தமிழக மக்கள் தொகையில் 37 லட்சம் கிறிஸ்தவர்கள், 34 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர்.

இரண்டையும் சேர்த்தால் தமிழக மக்கள் தொகையில் 10 சதவீதத்துக்கும் மேல் வருவர்.

இவர்களுக்கு தனியாக ஏழு சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

அவசர சட்டத்துக்கு தடை விதிக்கக் கூடாது' என வாதாடினார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி அடங்கிய 'முதல் பெஞ்ச்', அவரச் சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

வழக்கை விரிவாக விவாதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நான்கு வாரங்களில் மத்திய அரசு, மாநில அரசு பதிலளிக்க வேண்டும், அதற்கு இரண்டு வாரங்களில் மனுதாரர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Saturday, September 15, 2007

இட ஒதுக்கீட்டால் பாதிப்பா?

இட ஒதுக்கீட்டால் பாதிப்பா?

நீதிபதி விளக்கம்

'பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு தலா 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதால், எந்த சமுதாயத்தினருக்கும் பாதிப்பு ஏற்படாது' என தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஜனார்த்தனம் தெரிவித்தார்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஜனார்த்தனம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

அரசியலமைப்பு சட்டத்தின் படி, சமுதாயம் மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோருக்கு தான் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.

விதி 45/94ன்படி பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முஸ்லிம்களில் 90 சதவீதம் பேரும், கிறிஸ்தவர்களில் 80 சதவீதம் பேரும் பிற்படுத்தப்பட்டவர்கள்.

பிற்படுத்தப்பட்ட இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஜனத்தொகை அடிப்படையில்தான் தற்போது இடஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில்தான் பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும், மீதமுள்ள 23 சதவீதம் பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால், எந்த சமுதாயத்தினருக்கும் பாதிப்பு ஏற்படாது.

ஆந்திராவில் முஸ்லிம் மைனாரிட்டி என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதால்தான், ஐகோர்ட் அதனை தடை செய்தது. இடஒதுக்கீடு வழங்குவதில் பொருளாதார பின்னணியை கருத்தில் கொள்ள முடியாது.

இவ்வாறு நீதிபதி ஜனார்த்தனம் கூறினார்.

3.5 சதவீத தனி இடஒதுக்கீடு

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் தலா 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு - தமிழக அரசு அவசர சட்டம்

கருணாநிதி அறிவிப்பு

தமிழ்நாட்டில் கல்வி வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு தலா 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு

தமிழகத்தில் வாழும் சிறுபான்மைச் சமுதாய மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் தி.மு.க. அரசு எப்பொழுதும் கனிவும், கரிசனமும் கொண்டுள்ளது என்பது அச்சமுதாய மக்கள் அனைவரும் அறிந்ததாகும்.

2006-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில், சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கேற்ப, 13.5.2006 அன்று இந்த அரசு அமைந்தவுடனேயே, 24.5.2006 அன்று கவர்னரின் முதல் உரையில், "சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்த முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு ஏற்படுத்துவதற்குத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்'' என்றும்;

ஆணையம் ஆய்வு

2006-2007ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், "சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்த முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்குக் கல்வி நிலையங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் தனியாக இடஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி வருவதுடன்; தமிழகத்திலும் அவர்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு வழிவகுத்திட தேவைப்படும் உறுதியான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்'' என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்துவதன் முதல்கட்டமாக - நீதிபதி ஜனார்த்தனத்தை தலைவராகக் கொண்டுள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் - இப்பொருள் பற்றி விரிவாக விசாரணையும், ஆய்வும் செய்து உரிய பரிந்துரையை வழங்குமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

3.5 சதவீதம் ஒதுக்கீடு

ஜெ.அ.அம்பாசங்கரை தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்ட தமிழ்நாடு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அறிக்கையில் காணப்படும் இந்துக்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை; கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை; முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை தொடர்பான புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கலாம் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

இந்தப் பரிந்துரையை ஏற்று, அண்ணாவின் 99-ம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக, பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து, தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும், அப்பட்டியலில் இடம்பெற்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் 15.9.2007 முதல் தனி இட ஒதுக்கீடு வழங்கி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறதென முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday, September 9, 2007

ரம்ஜான் நோன்பு காலத்தில் இரவு நேர ஓட்டல்கள் திறக்க அனுமதிக்க வேண்டும்

ரம்ஜான் நோன்பு காலத்தில் இரவு நேர ஓட்டல்கள் திறக்க அனுமதிக்க வேண்டும்

முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் எம்.பி. பேட்டி

ரம்ஜான் நோன்பு காலத்தில் இரவு நேர ஓட்டல்கள் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் எம்.பி. கூறினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநில தலைவர் காதர் மொய்தீன் எம்.பி. நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. அரசுக்கு பாராட்டு

வருகிற டிசம்பர் மாதம் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு சென்னையில் நடத்தப்பட இருக்கிறது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 10-ந்தேதி டெல்லியில் அகில இந்திய ஊழியர் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.

கட்சியின் அகில இந்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாநிலத்திலும் முஸ்லிம் லீக்கை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

டெல்லியில் நடந்த அகில இந்திய குழு கூட்டத்தில் தமிழகத்தில் தி.மு.க. அரசு செய்து வரும் சமூக நல திட்டங்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இரவு நேர கடைகள்

வருகிற 14-ந்தேதி ரம்ஜான் நோன்பு தொடங்குகிறது.

தற்போது தமிழகத்தில் இரவு 11 மணிக்கு மேல் டீ கடைகள், ஓட்டல்கள் திறந்து வைக்கக்கூடாது என காவல் துறை கூறி உள்ளது.

ரம்ஜான் நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் இரவு 11 மணிக்கு மேல்தான் பள்ளிவாசல்களில் தொழுகை முடித்து வருவார்கள்.

எனவே, முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் இரவு 11 மணி முதல் 12 மணிவரையும், அதிகாலை 2 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரையும் ஓட்டல்களை திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும்.

இதுபற்றிய கோரிக்கையை தமிழக முதல்-அமைச்சருக்கும், மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை ஆகும்.

இடஒதுக்கீடு உரிமையை இந்தியாவில் வாங்கி கொடுத்ததே முஸ்லிம் லீக் தான்.

இடஒதுக்கீடு வரலாற்றை புரட்டி பார்த்தால் இது தெரியும். கேரளாவில் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இடஒதுக்கீடும், கர்நாடகாவில் 4 சதவீத இட ஒதுக்கீடும் உள்ளது.

தமிழ்நாட்டில் முஸ்லிம்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கவேண்டும்.

எத்தனை சதவீதம் தேவை என்பதை தமிழக அரசு தான் முடிவு செய்யவேண்டும்.

நீதிபதி சச்சார் குழு பரிந்துரையை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனே அமல்படுத்த வேண்டும்.

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள் வருடந்தோறும் சலுகைக்கான உரிமத்தை புதுப்பிக்கவேண்டும் என ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணையை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு காதர் மொய்தீன் எம்.பி. கூறினார்.

Sunday, August 26, 2007

இஸ்லாமியருக்கு தீங்கு ஏற்பட்டால் பா.ம.க., குரல் கொடுக்கும்

இஸ்லாமியருக்கு தீங்கு ஏற்பட்டால் பா.ம.க., குரல் கொடுக்கும்

'இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு தீங்கு ஏற்பட்டால் ஆதரவு குரல் கொடுப்போம்,' என திருச்சியில் நடந்த மண்டல வாழ்வுரிமை மாநாட்டில், பா.ம.க., ராமதாஸ் பேசினார்.


திருச்சி உழவர்சந்தை மைதானத்தில் பா.ம.க., சார்பில், மண்டல வாழ்வுரிமை மாநாடு நடந்தது. கட்சித் தலைவர் கோ.க.மணி தலைமை தாங்கினார்.

பா.ம.க., ராமதாஸ் பேசியதாவது:

ஓட்டுக்காக, அரசியலுக்காக இந்த மாநாட்டை நடத்தவில்லை. மதம், ஜாதி பெயரால் ஒரு துளி ரத்தம் சிந்தக் கூடாது. மதநல்லிணக்கம் எல்லாரிடமும் நிறைந்திருக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். உங்களது கோரிக்கைக்காக கடுமையாக போராடுவோம்.


நீதிபதி ஜனார்த்தன் குழு அறிக்கை பெற்று, சிறப்பு சட்டசபையை கூட்டி இடஒதுக்கீட்டை தடுக்க முடியாத வகையில், முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு தீங்கு ஏற்பட்டால் ஆதரவு குரல் கொடுப்போம். தமிழகத்தில் உண்மையான சமூகநீதி இல்லை. உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

ரயில்வே இணையமைச்சர் வேலு பேசுகையில், "இந்திய ரயில்வேயில் பணியாற்றுவோரில் வெறும் 3.1 சதவீதம் மட்டுமே முஸ்லிம்கள் உள்ளனர். ரயில்வே அமைச்சரிடம் பேசி, ரயில்வேயில் அதிகளவில் முஸ்லிம்கள் வேலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Tuesday, July 10, 2007

கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு

கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும்
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி பேட்டி


கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. நேற்று நெல்லையில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்தார். அப்போது அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வாழ்வுரிமை மாநாடு

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட தேவேந்திரர், ஆதிதிராவிடர், அருந்ததியர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் ஆகியோருக்கான தென்மண்டல வாழ்வுரிமை மாநாடு வருகிற 22-ந்தேதி நெல்லையில் நடக்கிறது. இந்த மக்களுக்கு வாழ்வுரிமை வழங்குவது காலத்தின் கட்டாயமாகும்.

குறிப்பாக இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும் தேவேந்திரர், ஆதிதிராவிடர், அருந்ததியர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் இது வரை குடியிருக்க சொந்த வீட்டுமனை, சொந்த வீடு இல்லாமல் வறுமைகோட்டுக்கு கீழே வாழ்ந்து வருகிறார்கள்.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு

இதே போல இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய இந்த மண்ணில் பிறந்த மண்ணின் மைந்தர்களான இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு இல்லாதது மிகுந்த வேதனை அளிக்கிறது. இஸ்லாமியர்கள் அரசியல் மற்றும் உயர் பதவிகளில் ஒரு சதவீதம் கூட இல்லை. மேலும் பல முஸ்லிம்கள் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளனர்.

எனவே இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும். இதே போல கிறிஸ்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும்.

முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கேரளாவிலும், கர்நாடகத்திலும் இடஒதுக்கீடு உள்ளது. ஆந்திராவில் தற்போது இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. சமூக நீதியை கடைப்பிடிக்கும் தமிழகத்தில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாதது வருத்தம் அளிக்கிறது.

எனவே இந்த பிரிவு மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக தமிழகம் முழவதும் எங்கள் கட்சியின் சார்பில் வாழ்வுரிமை மாநாடு நடத்தி வருகிறோம்.

வருகிற 15-ந்தேதி நாகப்பட்டினத்திலும், 22-ந்தேதி நெல்லையிலும் மாநாடு நடத்துகிறோம். இந்த மாநாட்டில் டாக்டர் ராமதாஸ், மத்திய மந்திரிகள் அன்புமணி, வேலு மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் மத தலைவர்கள், பேராயர்கள், தலித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.