ரம்ஜான் நோன்பு காலத்தில் இரவு நேர ஓட்டல்கள் திறக்க அனுமதிக்க வேண்டும்
முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் எம்.பி. பேட்டி
ரம்ஜான் நோன்பு காலத்தில் இரவு நேர ஓட்டல்கள் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் எம்.பி. கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநில தலைவர் காதர் மொய்தீன் எம்.பி. நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. அரசுக்கு பாராட்டு
வருகிற டிசம்பர் மாதம் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு சென்னையில் நடத்தப்பட இருக்கிறது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 10-ந்தேதி டெல்லியில் அகில இந்திய ஊழியர் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.
கட்சியின் அகில இந்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாநிலத்திலும் முஸ்லிம் லீக்கை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
டெல்லியில் நடந்த அகில இந்திய குழு கூட்டத்தில் தமிழகத்தில் தி.மு.க. அரசு செய்து வரும் சமூக நல திட்டங்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இரவு நேர கடைகள்
வருகிற 14-ந்தேதி ரம்ஜான் நோன்பு தொடங்குகிறது.
தற்போது தமிழகத்தில் இரவு 11 மணிக்கு மேல் டீ கடைகள், ஓட்டல்கள் திறந்து வைக்கக்கூடாது என காவல் துறை கூறி உள்ளது.
ரம்ஜான் நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் இரவு 11 மணிக்கு மேல்தான் பள்ளிவாசல்களில் தொழுகை முடித்து வருவார்கள்.
எனவே, முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் இரவு 11 மணி முதல் 12 மணிவரையும், அதிகாலை 2 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரையும் ஓட்டல்களை திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும்.
இதுபற்றிய கோரிக்கையை தமிழக முதல்-அமைச்சருக்கும், மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை ஆகும்.
இடஒதுக்கீடு உரிமையை இந்தியாவில் வாங்கி கொடுத்ததே முஸ்லிம் லீக் தான்.
இடஒதுக்கீடு வரலாற்றை புரட்டி பார்த்தால் இது தெரியும். கேரளாவில் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இடஒதுக்கீடும், கர்நாடகாவில் 4 சதவீத இட ஒதுக்கீடும் உள்ளது.
தமிழ்நாட்டில் முஸ்லிம்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கவேண்டும்.
எத்தனை சதவீதம் தேவை என்பதை தமிழக அரசு தான் முடிவு செய்யவேண்டும்.
நீதிபதி சச்சார் குழு பரிந்துரையை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனே அமல்படுத்த வேண்டும்.
சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள் வருடந்தோறும் சலுகைக்கான உரிமத்தை புதுப்பிக்கவேண்டும் என ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணையை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு காதர் மொய்தீன் எம்.பி. கூறினார்.
0 comments:
Post a Comment