]]
Showing posts with label முஸ்லிம் லீக். Show all posts
Showing posts with label முஸ்லிம் லீக். Show all posts

Wednesday, December 15, 2010

முஸ்லிம் லீக் மாநாட்டில் அறிவித்தபடி சமச்சீர் கல்வி திட்டத்தில் சிறுபான்மை மொழிப் பாடங்கள் - கருணாநிதி உத்தரவு

சென்னை, டிச.16-

சமச்சீர் கல்வி திட்டத்தில், சிறுபான்மை மொழிப் பாடங்களை கற்பிக்க முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார்.

சென்னையில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பை நடைமுறைப்படுத்தி, இந்த உத்தரவை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 2010-2011-ம் கல்வி ஆண்டு முதல் சமச்சீர்க் கல்வி நடைமுறைப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சிறுபான்மை மொழிச் சங்கங்களிலிருந்து சில கோரிக்கைகள் பெறப்பட்டது. அத்துடன், கடந்த 11-ந் தேதி சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டிலும் அக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தக் கோரிக்கைகள் குறித்து பரிவுடன் பரிசீலனை செய்த முதல்-அமைச்சர் கருணாநிதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் பேசும்போது, 'பள்ளிக்கல்வித் துறையில் சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் சிறுபான்மை மொழிகள் கற்பித்தல் தொடர்பான கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும' என்று அறிவித்தார்.

அதை நிறைவேற்றும் வகையில், பள்ளிகளுக்கான சமச்சீர்க் கல்வி பாடத் திட்டத்தில், பள்ளிகளில் தற்போதுள்ள உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அரபிக் போன்ற சிறுபான்மை மொழிகளையும் கற்பித்திட வாரத்திற்கு நான்கு பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

மொழிப் பாடங்கள் மற்றும் சிறுபான்மை மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்படும். சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும். மதிப்பெண் பட்டியலில் சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான மதிப்பெண்கள் இடம்பெறும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Source: Daily Thanthi

Sunday, September 9, 2007

ரம்ஜான் நோன்பு காலத்தில் இரவு நேர ஓட்டல்கள் திறக்க அனுமதிக்க வேண்டும்

ரம்ஜான் நோன்பு காலத்தில் இரவு நேர ஓட்டல்கள் திறக்க அனுமதிக்க வேண்டும்

முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் எம்.பி. பேட்டி

ரம்ஜான் நோன்பு காலத்தில் இரவு நேர ஓட்டல்கள் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் எம்.பி. கூறினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநில தலைவர் காதர் மொய்தீன் எம்.பி. நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. அரசுக்கு பாராட்டு

வருகிற டிசம்பர் மாதம் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு சென்னையில் நடத்தப்பட இருக்கிறது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 10-ந்தேதி டெல்லியில் அகில இந்திய ஊழியர் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.

கட்சியின் அகில இந்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஒவ்வொரு மாநிலத்திலும் முஸ்லிம் லீக்கை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

டெல்லியில் நடந்த அகில இந்திய குழு கூட்டத்தில் தமிழகத்தில் தி.மு.க. அரசு செய்து வரும் சமூக நல திட்டங்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இரவு நேர கடைகள்

வருகிற 14-ந்தேதி ரம்ஜான் நோன்பு தொடங்குகிறது.

தற்போது தமிழகத்தில் இரவு 11 மணிக்கு மேல் டீ கடைகள், ஓட்டல்கள் திறந்து வைக்கக்கூடாது என காவல் துறை கூறி உள்ளது.

ரம்ஜான் நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் இரவு 11 மணிக்கு மேல்தான் பள்ளிவாசல்களில் தொழுகை முடித்து வருவார்கள்.

எனவே, முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் இரவு 11 மணி முதல் 12 மணிவரையும், அதிகாலை 2 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரையும் ஓட்டல்களை திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும்.

இதுபற்றிய கோரிக்கையை தமிழக முதல்-அமைச்சருக்கும், மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை ஆகும்.

இடஒதுக்கீடு உரிமையை இந்தியாவில் வாங்கி கொடுத்ததே முஸ்லிம் லீக் தான்.

இடஒதுக்கீடு வரலாற்றை புரட்டி பார்த்தால் இது தெரியும். கேரளாவில் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இடஒதுக்கீடும், கர்நாடகாவில் 4 சதவீத இட ஒதுக்கீடும் உள்ளது.

தமிழ்நாட்டில் முஸ்லிம்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கவேண்டும்.

எத்தனை சதவீதம் தேவை என்பதை தமிழக அரசு தான் முடிவு செய்யவேண்டும்.

நீதிபதி சச்சார் குழு பரிந்துரையை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனே அமல்படுத்த வேண்டும்.

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள் வருடந்தோறும் சலுகைக்கான உரிமத்தை புதுப்பிக்கவேண்டும் என ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணையை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு காதர் மொய்தீன் எம்.பி. கூறினார்.

Monday, September 3, 2007

முஸ்லிம் லீக் கண்டனம்

ஐதராபாத் சம்பவம்

முஸ்லிம் லீக் கண்டனம்

"ஐதராபாத் குண்டு வெடிப்பு சம்பவம், அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல். இத்தகைய செயல்களில் ஈடுபடும் கொடிய சக்திகளை கண்டறிந்து உரிய தண்டனை வழங்க வேண்டும்'' என்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய நிர்வாக குழு கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய தலைவர் பனாத்வாலா, எம்.எல்.ஏ.,க்கள் அப்துல் பாஸித், கலிலுர் ரகுமான், மகளிர் அணித் தலைவர் பாத்திமா முசாபர், மாநில செயலர் சையது சத்தார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய துணைத் தலைவராக காதர் மொய்தீன், கேரள மாநில பொதுச் செயலராக அகமது, கர்நாடக மாநில பொருளாளராக தஸ்தகீர் ஆகா மற்றும் பீகார் மாநில செயலராக நயீம் அக்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

நிர்வாகக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

அமெரிக்காவின் ராணுவ ரீதியான நெருக்கம் இந்தியாவின் சுதந்திரமான வெளிவிவகார கொள்கையை பாதிக்கும் வகையில் உள்ளது. எந்த சூழ்நிலையிலும் இந்தியாவின் சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கையை விட்டுக் கொடுக்காத நிலையை அரசு தொடரவேண்டும்.

ஐதராபாத் குண்டு வெடிப்பு சம்பவம், அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல். இத்தகைய செயல்களில் ஈடுபடும் கொடிய சக்திகளை கண்டறிந்து உரிய தண்டனை வழங்கவேண்டும்.

அதே நேரத்தில் குண்டு வெடிப்பை தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள மதரசாக்களில் திடீரென்று நுழைந்து சோதனை என்ற பெயரில் போலீசார் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.