]]
Showing posts with label சிறுபான்மை. Show all posts
Showing posts with label சிறுபான்மை. Show all posts

Wednesday, December 15, 2010

முஸ்லிம் லீக் மாநாட்டில் அறிவித்தபடி சமச்சீர் கல்வி திட்டத்தில் சிறுபான்மை மொழிப் பாடங்கள் - கருணாநிதி உத்தரவு

சென்னை, டிச.16-

சமச்சீர் கல்வி திட்டத்தில், சிறுபான்மை மொழிப் பாடங்களை கற்பிக்க முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார்.

சென்னையில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பை நடைமுறைப்படுத்தி, இந்த உத்தரவை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 2010-2011-ம் கல்வி ஆண்டு முதல் சமச்சீர்க் கல்வி நடைமுறைப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சிறுபான்மை மொழிச் சங்கங்களிலிருந்து சில கோரிக்கைகள் பெறப்பட்டது. அத்துடன், கடந்த 11-ந் தேதி சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டிலும் அக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தக் கோரிக்கைகள் குறித்து பரிவுடன் பரிசீலனை செய்த முதல்-அமைச்சர் கருணாநிதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் பேசும்போது, 'பள்ளிக்கல்வித் துறையில் சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் சிறுபான்மை மொழிகள் கற்பித்தல் தொடர்பான கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும' என்று அறிவித்தார்.

அதை நிறைவேற்றும் வகையில், பள்ளிகளுக்கான சமச்சீர்க் கல்வி பாடத் திட்டத்தில், பள்ளிகளில் தற்போதுள்ள உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அரபிக் போன்ற சிறுபான்மை மொழிகளையும் கற்பித்திட வாரத்திற்கு நான்கு பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

மொழிப் பாடங்கள் மற்றும் சிறுபான்மை மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்படும். சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும். மதிப்பெண் பட்டியலில் சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான மதிப்பெண்கள் இடம்பெறும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Source: Daily Thanthi

Wednesday, October 24, 2007

சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை

சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை
கலெக்டர் அறிவிப்பு

சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் 767 சிறுபான்மை இன மாணவ, மாணவிகளுக்கு பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் தொழிற் கல்வி ஆகியவை 2007-08ம் ஆண்டில் பயில உதவி தொகை வழங்க உத்தரவிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற
பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமலும், மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

கல்லூரி பட்டப் படிப்பு மற்றும் மேற்படிப்பு பயிலும் மொத்த செலவை அரசு ஏற்றுக் கொள்ளும்.

பராமரிப்பு படியாக விடுதி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரமும், விடுதி இல்லாத மாணவர்களுக்கு ரூ. 5 ஆயிரமும் கூடுதலாக வழங்கப்படும்.

தமிழகத்தில் இயங்கி வரும் பிற தொழிற்கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.20 ஆயிரம் மற்றும் பராமரிப்பு படி வழங்கப்படும்.

இந்த சலுகை பெற சிறுபான்மையின மாணவ, மாணவிகள் சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சிறுபான்மையினர் நலம் மற்றும் மேம்பாட்டு இயக்குனர் அலுவலக ஆணையருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நல்ல வாய்ப்புகளை பயனபடுத்தி கொள்ள முன்வருவோர் எவருமுண்டோ...?

நாம் வாழும் நாட்டில் நமக்கான வாய்ப்புகளை நாம் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ளவில்லை என்றால் நம்மைவிட ஏமாளிகள் யாருமில்லை என்பதை கசப்பாக இருந்தாலும் நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

நம் ஊரில் நற்பணிகளாற்றும் அமைப்புகள் இதுபோன்ற செய்திகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டுமென வாஞ்சையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

அன்பன்... கலீல் பாகவீ

Sunday, September 16, 2007

சிறுபான்மையினருக்கு அகில இந்திய அளவில் இட ஒதுக்கீடு

சிறுபான்மையினருக்கு அகில இந்திய அளவில் இட ஒதுக்கீடு வேண்டும்

டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை இந்திய அளவில் கொண்டு வரவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் பேசினார்.

உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு மற்றும் தேசிய நீதித்துறை ஆணையம் அமைப்பது தொடர்பாக சுதர்சனம் நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது.

இந்த அறிக்கை குறித்த கருத்தரங்கம், வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை சார்பில் சென்னையில் நேற்று நடந்தது.

கருத்தரங்கத்திற்கு ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி. தங்கவேல் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சமூக நீதி கொள்கையில் நாம் போகவேண்டிய தூரம் இன்னும் வெகு தொலைவில் உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 27 சதவீத இடஒதுக்கீடு திட்டத்தை அமைச்சரவை குழு 3 ஆண்டு தள்ளிவைப்பதாக கூறியது. அப்போது இது குறித்து நான் ஆவேசமாக பேசினேன். அன்று மாலையில் சோனியாகாந்தி தலைமையில் இதற்காக தனி கூட்டம் நடத்தப்பட்டது. அதன்பிறகு தான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு திட்டம் நிறைவேற்றப்பட்டது.

மண்டல் கமிஷன் திட்டத்தை நடைமுறை படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இதை நிவர்த்தி செய்த சோனியாகாந்தியை 60 சதவீத மக்கள் பாராட்டவேண்டும்.

600 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 20 சதவீதம் பேர்தான் எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இடஒதுக்கீடு முறையில் பதவி உயர்வு கொடுத்தால் இந்த நிலை இருக்காது.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து 150 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒற்றுமைவேண்டும். அகில இந்திய அளவில் 100 சதவீதம் இடஒதுக்கீட்டு கொள்கையை நடைமுறைபடுத்தவேண்டும்.

தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள சிறுபான்மை ஒதுக்கீட்டை அகில இந்திய அளவில் கொண்டு வரவேண்டும்.

நீதிமன்றங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி. மைனாரிட்டி நீதிபதிகள் 90 சதவீதம் வரை வரவேண்டும்.

நமக்கு அரசியல், பொருளாதாரத்தில் நீதி கிடைத்துவிட்டது. ஆனால் நீதித்துறையில் இன்னும் கிடைக்கவில்லை. அதற்கான விடிவுகாலம் விரைவில் பிறக்கும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

முன்னதாக கருத்தரங்கில் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் இ.எம். சுதர்சனநாச்சியப்பன் நிலைக்குழு அறிக்கை குறித்து விளக்க உரையாற்றினார். கருத்தரங்கத்தில் கலந்து கொண்டவர்களை வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவை தலைவர் கே. பாலு வரவேற்று பேசினார்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் கோ.க. மணி, நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் எம்.ராமதாஸ், எஸ்.கே.கார்வேந்தன், தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் ஆர்.கே. சந்திரமோகன், சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், ஈரோடு வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.திருமலைராஜன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Thursday, September 13, 2007

சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு

சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு

சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது தமிழக அரசு.

கல்வி, வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தலா 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று இந்த அவசரச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

Sunday, September 9, 2007

முஸ்லிம்கள் வசிக்கும் தனி தொகுதிகள்

முஸ்லிம்கள் வசிக்கும் தனி தொகுதிகள்

சச்சார் கமிட்டி யோசனைக்கு வரவேற்பு

"முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் தனித் தொகுதிகளை பொதுத் தொகுதிகளாக அறிவிக்க வேண்டும்'' என்ற சச்சார் கமிட்டியின் கருத்தை, மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் உயர்மட்டக் குழு வரவேற்றுள்ளது.

முஸ்லிம்களில் பொருளாதார நிலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டி, "முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் தனித் தொகுதிகளை, பொதுத் தொகுதிகளாக அறிவிக்க வேண்டும். இதன்மூலம், பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்'' என தெரிவித்திருந்தது.

மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் சார்பில் இது குறித்து ஆலோசனை செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, சச்சார் கமிட்டியின் கருத்தை வரவேற்றுள்ளது.

உயர்மட்டக் குழு, "தனித்தொகுதிகள் மறுசீரமைக்கும் போது, முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் தனித்தொகுதிகள் பொதுத் தொகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டும். தனித்தொகுதிகள் விஷயத்தில் முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும். நியாயமான மறுசீரமைப்பு கொள்கை வேண்டும்'' என தெரிவித்துள்ளது.

தனித்தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதற்கு ஆதிதிராவிடர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால், உயர்மட்டக் குழுவின் கருத்தை செயல்படுத்துவது அரசிற்கு சிரமமான காரியமாகவே இருக்கும்.

எனவே, ஆதிதிராவிடர்களுக்கான தனித்தொகுதி எண்ணிக்கையை குறைக்காமல், முஸ்லிம்கள் அதிகமாக உள்ள தனித்தொகுதிகள் பொதுத்தொகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரப்படுகிறது.

ஆதிதிராவிடர்களுக்கான தனித் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், நீண்டகாலம் தங்களது கோட்டையாக விளங்கிய தொகுதியை விட்டுத்தர மாட்டார்கள். இவர்களது எதிர்தரப்பினரும் தற்போதைய நிலை தொடர்வதையே விரும்புகின்றனர்.

தனித் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எதிர்ப்பே, நீண்ட நாட்களாக தனித்தொகுதிகள் மறுசீரமைக்கப்படாமல் இருப்பதற்கு காரணம்.