சிறுபான்மையினருக்கு அகில இந்திய அளவில் இட ஒதுக்கீடு வேண்டும்
டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை இந்திய அளவில் கொண்டு வரவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் பேசினார்.
உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு மற்றும் தேசிய நீதித்துறை ஆணையம் அமைப்பது தொடர்பாக சுதர்சனம் நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது.
இந்த அறிக்கை குறித்த கருத்தரங்கம், வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை சார்பில் சென்னையில் நேற்று நடந்தது.
கருத்தரங்கத்திற்கு ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி. தங்கவேல் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சமூக நீதி கொள்கையில் நாம் போகவேண்டிய தூரம் இன்னும் வெகு தொலைவில் உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 27 சதவீத இடஒதுக்கீடு திட்டத்தை அமைச்சரவை குழு 3 ஆண்டு தள்ளிவைப்பதாக கூறியது. அப்போது இது குறித்து நான் ஆவேசமாக பேசினேன். அன்று மாலையில் சோனியாகாந்தி தலைமையில் இதற்காக தனி கூட்டம் நடத்தப்பட்டது. அதன்பிறகு தான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு திட்டம் நிறைவேற்றப்பட்டது.
மண்டல் கமிஷன் திட்டத்தை நடைமுறை படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இதை நிவர்த்தி செய்த சோனியாகாந்தியை 60 சதவீத மக்கள் பாராட்டவேண்டும்.
600 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 20 சதவீதம் பேர்தான் எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இடஒதுக்கீடு முறையில் பதவி உயர்வு கொடுத்தால் இந்த நிலை இருக்காது.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து 150 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒற்றுமைவேண்டும். அகில இந்திய அளவில் 100 சதவீதம் இடஒதுக்கீட்டு கொள்கையை நடைமுறைபடுத்தவேண்டும்.
தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள சிறுபான்மை ஒதுக்கீட்டை அகில இந்திய அளவில் கொண்டு வரவேண்டும்.
நீதிமன்றங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி. மைனாரிட்டி நீதிபதிகள் 90 சதவீதம் வரை வரவேண்டும்.
நமக்கு அரசியல், பொருளாதாரத்தில் நீதி கிடைத்துவிட்டது. ஆனால் நீதித்துறையில் இன்னும் கிடைக்கவில்லை. அதற்கான விடிவுகாலம் விரைவில் பிறக்கும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
முன்னதாக கருத்தரங்கில் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் இ.எம். சுதர்சனநாச்சியப்பன் நிலைக்குழு அறிக்கை குறித்து விளக்க உரையாற்றினார். கருத்தரங்கத்தில் கலந்து கொண்டவர்களை வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவை தலைவர் கே. பாலு வரவேற்று பேசினார்.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் கோ.க. மணி, நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் எம்.ராமதாஸ், எஸ்.கே.கார்வேந்தன், தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் ஆர்.கே. சந்திரமோகன், சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், ஈரோடு வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.திருமலைராஜன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment