முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கான தனி இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வந்தது
அரசு உத்தரவு வெளியீடு
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கான தனி இடஒதுக்கீடு சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்காக உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தலா 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும், 15-ந்தேதி முதல் தனி இடஒதுக்கீடு வழங்கி அவசர சட்டமாக பிறப்பிக்கப்படுகிறதென்றும் முதல்-அமைச்சர் கருணாநிதி கடந்த 13-ந்தேதி அறிவித்து இருந்தார்.
இது தொடர்பாக நேற்று வெளியான அரசிதழில் தமிழக அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தனி இடஒதுக்கீடு அவசர சட்டம் குறித்து அரசிதழில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்த சட்டம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பு கிறிஸ்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள் (தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு பணி நியமனங்கள்) அவசர சட்டம் - 2007 என்று அழைக்கப்படும்.
இந்த அவசர சட்டத்தை அமல்படுத்துவதற்காக அதிகாரி நியமிக்கப்படுவார். அந்த அதிகாரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அதிகாரி பதவிக்கு குறையாத அதிகாரியாக இருப்பார்.
இந்த அவசர சட்டம் தொடர்பாக அதிகாரியையோ அல்லது அரசையோ அல்லது அரசு அதிகாரிகள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க முடியாது.
இந்த அவசர சட்டம் விரைவில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
1985ம் ஆண்டு தமிழகத்தில் 2-வது பிற்பட்டோர் கமிஷன் அம்பாசங்கர் தலைமையில் நியமிக்கப்பட்டது. இந்த கமிஷன் தமிழகத்தில் உள்ள 27 லட்சத்து 5 ஆயிரத்து 960 முஸ்லிம் மக்களில், 25 லட்சத்து 60 ஆயிரத்து 195 பேர் (94.61 சதவீதம்) பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் என்றும்,
31 லட்சத்து 91 ஆயிரத்து 988 கிறிஸ்தவர்களில் 24 லட்சத்து 69 ஆயிரத்து 519 பேர் (77.36 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும், 78 ஆயிரத்து 675 பேர் (2.46 சதவீதம்) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம் அமைப்புகளிடமிருந்து அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை கடிதங்கள் வந்த வண்ணம் இருந்தன.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்படும் 30 சதவீத இடஒதுக்கீட்டில் தங்களுக்கு உரிய பங்கீடு தரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர்.
எனவே இது குறித்து பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் பரிசீலித்து அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்து இருந்தது. அதை அரசு ஆய்வு செய்து பிற்படுத்தப்பட்டோருக்காக தரப்பட்டுள்ள இடஒதுக்கீட்டிற்குள் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிப்பதற்கு அரசு முடிவு செய்தது.
அதற்காக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை உடனடியாக அரசு அமலுக்கு கொண்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment