]]
Showing posts with label கலெக்டர். Show all posts
Showing posts with label கலெக்டர். Show all posts

Thursday, October 25, 2007

மழைக் காலத்தில் கொதிக்க வைத்த நீரை குடிக்குமாறு கலெக்டர் வேண்டுகோள்

மழைக் காலத்தில் கொதிக்க வைத்த நீரை குடிக்குமாறு கலெக்டர் வேண்டுகோள்

மழைக்காலங்களில் பொது மக்கள் கொதிக்க வைத்த நீரை குடிக்குமாறு கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து கலெக்டர் ராஜேந்திர ரத்னு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி விட்டது.

கடற்கரையோர மாவட்டமான கடலூர் மாவட்டம் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையாலும், இயற்கை சீற்றங்களாலும் பாதிக்கப்படுகிறது.

இது போன்ற காலங்களில் பாதுகாப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் பொது சுகாதாரத் துறை கைகோர்த்து பணிபுரிகிறது.

புயல் மற்றும் வெள்ள காலங்களில் பாதுகாப்புக்காக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும், சுற்றுப் புறத்தை பாதுகாக்கவும், ஆங்காங்கே மருத்துவர்கள் மற்றும் களப்பணியாளர்களைக் கொண்ட முகாம்கள் அமைத்து தேவையான மருந்துகள் கையிருப்பில் தயார் நிலையில் உள்ளன.

மழைக் காலங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்குவதால் கொசு உற்பத்தியாகி மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா போன்ற பொதுமக்களை அச்சுறுத்தும் நோய்கள் ஏற்படலாம்.

எனவே பொது மக்கள் தங்கள் சுற்றுப் புறங்களை சுகாதாரமான முறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த நோய்கள் நீர் மூலம் அதிகளவு பரவ வாய்ப்புகள் உள்ளதால் மழைக் காலங்களில் பொது மக்கள் கொதித்து ஆற வைத்த நீரையே குடிநீராக பயன்படுத்த வேண்டும்.

சூடான உணவு பொருட்களையே உட்கொள்ள வேண்டும்.

புகை மருந்து அடித்தல், குளோரினேஷன் போன்ற பணிகளில், பூரண ஒத்துழைப்பு தர வேண்டும்.

மாணவ, மாணவிகள் ஈ மொய்த்த திண்பண்டங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

திறந்த வெளிகளை தவிர்த்து பாதுகாக்கப்பட்ட கழிவறைகளை பயன்படுத்த வேண்டும்.

அவசர கால நோய் தடுப்பு பணிகளுக்காக மாவட்ட அளவில் 24 மணி நேரமும், செயல்படும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அவசர தேவைகளுக்கு 04142 295134, 294134 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது .

Wednesday, October 24, 2007

சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை

சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை
கலெக்டர் அறிவிப்பு

சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் 767 சிறுபான்மை இன மாணவ, மாணவிகளுக்கு பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் தொழிற் கல்வி ஆகியவை 2007-08ம் ஆண்டில் பயில உதவி தொகை வழங்க உத்தரவிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற
பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமலும், மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

கல்லூரி பட்டப் படிப்பு மற்றும் மேற்படிப்பு பயிலும் மொத்த செலவை அரசு ஏற்றுக் கொள்ளும்.

பராமரிப்பு படியாக விடுதி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரமும், விடுதி இல்லாத மாணவர்களுக்கு ரூ. 5 ஆயிரமும் கூடுதலாக வழங்கப்படும்.

தமிழகத்தில் இயங்கி வரும் பிற தொழிற்கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.20 ஆயிரம் மற்றும் பராமரிப்பு படி வழங்கப்படும்.

இந்த சலுகை பெற சிறுபான்மையின மாணவ, மாணவிகள் சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சிறுபான்மையினர் நலம் மற்றும் மேம்பாட்டு இயக்குனர் அலுவலக ஆணையருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நல்ல வாய்ப்புகளை பயனபடுத்தி கொள்ள முன்வருவோர் எவருமுண்டோ...?

நாம் வாழும் நாட்டில் நமக்கான வாய்ப்புகளை நாம் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ளவில்லை என்றால் நம்மைவிட ஏமாளிகள் யாருமில்லை என்பதை கசப்பாக இருந்தாலும் நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

நம் ஊரில் நற்பணிகளாற்றும் அமைப்புகள் இதுபோன்ற செய்திகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டுமென வாஞ்சையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

அன்பன்... கலீல் பாகவீ

Saturday, September 29, 2007

கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்

கிராம சபைக் கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவு

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தியையொட்டி வரும் 2ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் ராஜேந்திர ரத்னு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

காந்தி ஜெயந்தியையொட்டி வரும் 2ம் தேதி கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடத்த வேண்டும்.

கூட்டத்தில் 2006-07ம் ஆண்டிற்கான ஊராட்சியின் தணிக்கை அறிக்கையை முக்கிய அம்சங்கள் மற்றும் தணிக்கை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள குறைபாடுகள் மற்றும் முழு சுகாதார திட்டத்தின் கீழ் நிர்மல் கிராம புரஸ்கார் விருது பெற ஊராட்சி மேற்கொண்ட நடவடிக்கை விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்பது உட்பட பல பொருள்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.

ஊராட்சி மன்றத்தில் பணிபுரியும் உதவியாளர்கள் கிராம சபைக் கூட்டத்தில் பொது மக்கள் அதிகளவில் பங்கேற்க அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Friday, September 28, 2007

பந்த்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு

பந்த்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு பாதுகாப்பு

- கலெக்டர்

சேது சமுத்திர திட்டத்தை விரைவில் நிறைவேற்றக் கோரி அரசு அறிவித்துள்ள முழு அடைப்பு பேராட்டத்திற்கு கடலூரில் மக்களின் அத்தியாவசிய பணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என கலெக்டர் ராஜேந்திர ரத்னு கூறினார்.

சேது சமுத்திர திட்டத்தை விரைவில் நிறைவேற்றக் கோரி தமிழகத்தில் 1ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என தி.மு.க., அரசு மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கடலூர் கலெக்டர் ராஜேந்திர ரத்னு நிருபர்களிடம் கூறியது:

தமிழகத்தில் சேது சமுத்திர திட்டத்தை விரைவில் நிறைவேற்றக் கோரி வரும் 1ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு பேராட்டம் நடக்கிறது.

அதனையொட்டி கடலூர் மாவட்டத்தில் மக்களின் அத்தியாவசிய பணிகளான குடிநீர், மின்சாரம், செய்தித் தாள்கள், பால் நிலையங்கள், டெலிபோன் சேவைகள், மருத்துவமனைகள் ஆகியவற்றிற்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும்.

எந்த அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம், காவல் துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, September 12, 2007

கடலூரில் சுனாமி எச்சரிக்கை

கடலூரில் சுனாமி எச்சரிக்கை 51 கிராமங்களில் உஷார் நிலை

சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து கடலில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், தேவனாம்பட்டினம், கடலூர் துறைமுகம், தாழங்குடா, பரங்கிப்பேட்டை, கிள்ளை உள்ளிட்ட அனைத்து கடலோர கிராமங்களில் வசிப்பவர்கள் சுனாமி முன் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை வழங்கப்பட்டது.

கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சிற்கு நேற்று மாலை வந்த பொதுமக்கள் அனைவரையும் போலீசார் உடனடியாக வெளியேற்றினர். அப்பகுதியில் பதட்டம் காணப்பட்டது.

தாழங்குடாவில் உள்ள சுனாமி எச்சரிக்கை மையத்தை சுற்றி அப்பகுதி மக்கள் சுனாமி பற்றிய தகவலறிய கூடினர்.

கடலோரத்தில் வசித்து வந்த ஒரு சிலர் குடும்பத்துடன் தங்களின் உறவினர்களின் வீட்டிற்கு செல்ல மூட்டை முடிச்சுகளுடன் தயாராகினர்.

சுனாமி பாதித்த பகுதிகளில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்காக ஆந்திராவிலிருந்து வந்திருந்த 12க்கும் மேற்பட்ட தொழிலாளிகளை அதிகாரிகள் லாரியில் ஏற்றி 'டிட்கோ' அலுவலகத்தில் தங்க வைக்க பாதுகாப்பாக அனுப்பினர்.

கலெக்டர் பேட்டி:

மத்திய அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 51 கடலோர கிராமங்களிலும் "மைக்' மூலம் அறிவிப்பு விடுத்து உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் ராஜேந்திர ரத்னு கூறினார்.

அவர் கூறியதாவது:

கடலோர பகுதிகளில் மீனவர்கள் தாழ்வான பகுதிகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லக் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

கலெக்டர் அலுவலக வளகத்தில் உள்ள எச்சரிக்கை மையத்தின் மூலம் கடலோர பகுதிகளில் 51 கிராமங்களுக்கும் 'மைக்' மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலில் சென்று மீன் பிடிக்க வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Wednesday, July 18, 2007

கிராமங்களில் சுகாதாரமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுங்கள்

கிராமங்களில் சுகாதாரமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுங்கள்
ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கிராமங்களில் சுகாதாரமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டம்


கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு, ஜனாதிபதியின் நிர்மல் புரஸ்கார் விருது பெறுவதற்கான கூட்டம் ஊரக வளர்ச்சி துறை சார்பில் கடலூர் டவுன் ஹாலில் நேற்று நடந்தது.


கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-


கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கடந்த ஆண்டு 136 ஊராட்சி மன்றங்களில் செயல்பட்டது. இதேபோல் இந்த ஆண்டும் 136 ஊராட்சி மன்றங்களிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நடைபெறுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திற்கும் ரூ. 20 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. இந்த தொகையை கொண்டு தங்களின் கிராமங்களுக்கு தார்சாலை, சிமெண்டு சாலை, கட்டிடங்கள் ஆகியவை அமைக்கின்றன. இதனால் தங்கள் கிராமம் வளர்ச்சி அடைந்தது என்று எண்ண கூடாது.

நூறு சதவீத கல்வி அறிவு

ஒரு கிராமத்தின் வளர்ச்சி அந்த கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு சென்று கல்வி கற்க வேண்டும், பள்ளிக்கு செல்லாமல் இடையிலேயே படிப்பை நிறுத்திய குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு சென்று படிக்க முயற்சி எடுக்க வேண்டும்.

படிப்பறிவு இல்லாத பெரியவர்களுக்கு வளர்கல்வி திட்டத்தின் கீழ் கல்வி அறிவு வழங்க வேண்டும். கிராமத்தில் நூறு சதவீதம் கல்வி அறிவு பெற்றிருக்க வேண்டும். இதற்கான முயற்சி கல்வித்துறை மூலம் செயல்பட்டு வருகிறது.


மேலும் ஒரு கிராமம் வளர்ச்சி அடைய அங்கு நூறு சதவீதம் சுகாதாரமாக இருக்க வேண்டும். இவ்வாறு இருக்கும் கிராமங்களுக்கு ஜனாதிபதியின் நிர்மல் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.

சுகாதார வசதி

கிராமம் சுகாதாரமாக இருந்தால் தான் மக்கள் சுகாதாரமாக இருக்க முடியும். விருதிற்காக கிராமத்தை சுகாதாரமாக மாற்ற வேண்டும் என்று இல்லாமல் கிராம மக்களின் நலத்திற்காக சுகாதார வசதியை செய்ய வேண்டும்.


இதற்காக கிராமத்தில் திறந்த வழியில் மலம் கழிக்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும். கிராமங்களில் வீடு தோறும் கழிப்பறைகள் கட்ட வேண்டும். அங்கன்வாடிகள், பள்ளிகள் போன்றவற்றில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

மேலும் கிராமத்தில் அதிகமான மரங்கள், சுகாதாரமான குடிநீர் போன்றவைகளும் கிடைப்பதற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தங்க அட்டை

கடந்த ஆண்டு நமது மாவட்டத்தை சேர்ந்த 7 ஊராட்சி மன்றங்கள் நிர்மல் புஸ்கர் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. இதற்காக அதன் ஊராட்சி மன்ற தலைவர்கள் டெல்லிக்கு சென்று ஜனாதிபதியின் கையால் நிர்மல் புரஸ்கார் விருதினை பெற்றனர்.

இந்த விருது பெற்ற ஊராட்சி மன்றங்களுக்கு தனி சிறப்பு வாய்ந்த முத்திரை அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த முத்திரை பொறிக்கப்பட்ட மனுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வருகிற ஆகஸ்ட் 15 -ந் தேதி சுதந்திர தினம் அன்று இந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தங்க அட்டை வழங்கப்படும். இதை கொண்டு மாவட்ட கலெக்டரை எந்த நேரத்திலும் நேரடியாக சந்திக்கலாம்.

முழு நம்பிக்கை

கடலூர் மாவட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படும் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் அடுத்த ஆண்டு டெல்லிக்கு சென்று ஜனாதிபதியின் கையால் நிர்மல் புரஸ்கார் விருது பெற வேண்டும்.

ஊராட்சி மன்ற தலைவர்கள் விருது பெறுவார்கள் என்று முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த நம்பிக்கையை மக்கள் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ராஜேந்திர ரத்னூ பேசினார்.

கலை நிகழ்ச்சி

முன்னதாக திட்ட ஆலோசகர் வேல்மணி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட திட்ட அதிகாரி மெகராஜ், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அதிகாரி ராஜன் பாபு, மகளிர் திட்ட அதிகாரி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நல்லூர் பகுதியைச் சேர்ந்த வளர்கல்வி திட்ட கலைஞர்களின் சுகாதார விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.