மழைக் காலத்தில் கொதிக்க வைத்த நீரை குடிக்குமாறு கலெக்டர் வேண்டுகோள்
மழைக்காலங்களில் பொது மக்கள் கொதிக்க வைத்த நீரை குடிக்குமாறு கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து கலெக்டர் ராஜேந்திர ரத்னு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி விட்டது.
கடற்கரையோர மாவட்டமான கடலூர் மாவட்டம் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையாலும், இயற்கை சீற்றங்களாலும் பாதிக்கப்படுகிறது.
இது போன்ற காலங்களில் பாதுகாப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் பொது சுகாதாரத் துறை கைகோர்த்து பணிபுரிகிறது.
புயல் மற்றும் வெள்ள காலங்களில் பாதுகாப்புக்காக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும், சுற்றுப் புறத்தை பாதுகாக்கவும், ஆங்காங்கே மருத்துவர்கள் மற்றும் களப்பணியாளர்களைக் கொண்ட முகாம்கள் அமைத்து தேவையான மருந்துகள் கையிருப்பில் தயார் நிலையில் உள்ளன.
மழைக் காலங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்குவதால் கொசு உற்பத்தியாகி மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா போன்ற பொதுமக்களை அச்சுறுத்தும் நோய்கள் ஏற்படலாம்.
எனவே பொது மக்கள் தங்கள் சுற்றுப் புறங்களை சுகாதாரமான முறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த நோய்கள் நீர் மூலம் அதிகளவு பரவ வாய்ப்புகள் உள்ளதால் மழைக் காலங்களில் பொது மக்கள் கொதித்து ஆற வைத்த நீரையே குடிநீராக பயன்படுத்த வேண்டும்.
சூடான உணவு பொருட்களையே உட்கொள்ள வேண்டும்.
புகை மருந்து அடித்தல், குளோரினேஷன் போன்ற பணிகளில், பூரண ஒத்துழைப்பு தர வேண்டும்.
மாணவ, மாணவிகள் ஈ மொய்த்த திண்பண்டங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
திறந்த வெளிகளை தவிர்த்து பாதுகாக்கப்பட்ட கழிவறைகளை பயன்படுத்த வேண்டும்.
அவசர கால நோய் தடுப்பு பணிகளுக்காக மாவட்ட அளவில் 24 மணி நேரமும், செயல்படும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அவசர தேவைகளுக்கு 04142 295134, 294134 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது .
0 comments:
Post a Comment