கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மழை
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கடலூர் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இந்த தொடர்மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
கடலூர் மாவட்டத்திலும் நேற்று பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.
பரங்கிப்பேட்டை, சிதம்பரம், புவனகிரி, லால்பேட்டை, சேத்தியாத்தோப்பு, தொழுதூர் போன்ற இடங்களில் கன மழை பெய்தது.
இதனால் சாலைகளிலும், தெருக்களிலும் மழை நீர் ஆறுபோல ஓடியது.
நீர்வரத்து அதிகரிப்பு
கடலூர் பெண்ணையாறு, கெடிலம் ஆறு, விருத்தாசலம் மணிமுத்தா ஆறு போன்ற ஆறுகளில் வெள்ள கரைபுறண்டு ஓடியது.
இதனால் வறண்டு கிடந்த குளம், ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடலூரிலும் நேற்று மழை பெய்தது.
காலையில் லேசான தூறலுடன் பெய்த மழையானது நேரம் செல்ல செல்ல கனமழையாக பொழிந்தது.
இதனால் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், புதுப்பாளையம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் மழைநீர் தேங்கி நின்றது.
கடல் கொந்தளிப்பு
பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும், மாணவ, மாணவிகளும், அன்றாட வேலைக்கு செல்லும் தொழிலாளிகளும் அவதிப்பட்டனர்.
சிலர் மழையில் நனைந்து சென்றதையும் காண முடிந்தது.
இடைவிடாமல் மழை பெய்ததால் நேற்று சூரிய வெளிச்சத்தை காணமுடியவில்லை.
இரவில் குளிர் வாட்டி வதைத்தது.
கடலூரில் நேற்று கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது.
இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
மீன் பிடி படகுகள் அனைத்தும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை காணமுடிந்தது.
விடுமுறை
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளது.
இதே போல அரபிக்கடலில் தென் கிழக்கு பகுதியில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதை அடுத்து கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment