]]

Wednesday, July 18, 2007

கிராமங்களில் சுகாதாரமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுங்கள்

கிராமங்களில் சுகாதாரமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுங்கள்
ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கிராமங்களில் சுகாதாரமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டம்


கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு, ஜனாதிபதியின் நிர்மல் புரஸ்கார் விருது பெறுவதற்கான கூட்டம் ஊரக வளர்ச்சி துறை சார்பில் கடலூர் டவுன் ஹாலில் நேற்று நடந்தது.


கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-


கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கடந்த ஆண்டு 136 ஊராட்சி மன்றங்களில் செயல்பட்டது. இதேபோல் இந்த ஆண்டும் 136 ஊராட்சி மன்றங்களிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நடைபெறுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சி மன்றத்திற்கும் ரூ. 20 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. இந்த தொகையை கொண்டு தங்களின் கிராமங்களுக்கு தார்சாலை, சிமெண்டு சாலை, கட்டிடங்கள் ஆகியவை அமைக்கின்றன. இதனால் தங்கள் கிராமம் வளர்ச்சி அடைந்தது என்று எண்ண கூடாது.

நூறு சதவீத கல்வி அறிவு

ஒரு கிராமத்தின் வளர்ச்சி அந்த கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு சென்று கல்வி கற்க வேண்டும், பள்ளிக்கு செல்லாமல் இடையிலேயே படிப்பை நிறுத்திய குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு சென்று படிக்க முயற்சி எடுக்க வேண்டும்.

படிப்பறிவு இல்லாத பெரியவர்களுக்கு வளர்கல்வி திட்டத்தின் கீழ் கல்வி அறிவு வழங்க வேண்டும். கிராமத்தில் நூறு சதவீதம் கல்வி அறிவு பெற்றிருக்க வேண்டும். இதற்கான முயற்சி கல்வித்துறை மூலம் செயல்பட்டு வருகிறது.


மேலும் ஒரு கிராமம் வளர்ச்சி அடைய அங்கு நூறு சதவீதம் சுகாதாரமாக இருக்க வேண்டும். இவ்வாறு இருக்கும் கிராமங்களுக்கு ஜனாதிபதியின் நிர்மல் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.

சுகாதார வசதி

கிராமம் சுகாதாரமாக இருந்தால் தான் மக்கள் சுகாதாரமாக இருக்க முடியும். விருதிற்காக கிராமத்தை சுகாதாரமாக மாற்ற வேண்டும் என்று இல்லாமல் கிராம மக்களின் நலத்திற்காக சுகாதார வசதியை செய்ய வேண்டும்.


இதற்காக கிராமத்தில் திறந்த வழியில் மலம் கழிக்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும். கிராமங்களில் வீடு தோறும் கழிப்பறைகள் கட்ட வேண்டும். அங்கன்வாடிகள், பள்ளிகள் போன்றவற்றில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

மேலும் கிராமத்தில் அதிகமான மரங்கள், சுகாதாரமான குடிநீர் போன்றவைகளும் கிடைப்பதற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தங்க அட்டை

கடந்த ஆண்டு நமது மாவட்டத்தை சேர்ந்த 7 ஊராட்சி மன்றங்கள் நிர்மல் புஸ்கர் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. இதற்காக அதன் ஊராட்சி மன்ற தலைவர்கள் டெல்லிக்கு சென்று ஜனாதிபதியின் கையால் நிர்மல் புரஸ்கார் விருதினை பெற்றனர்.

இந்த விருது பெற்ற ஊராட்சி மன்றங்களுக்கு தனி சிறப்பு வாய்ந்த முத்திரை அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த முத்திரை பொறிக்கப்பட்ட மனுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வருகிற ஆகஸ்ட் 15 -ந் தேதி சுதந்திர தினம் அன்று இந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தங்க அட்டை வழங்கப்படும். இதை கொண்டு மாவட்ட கலெக்டரை எந்த நேரத்திலும் நேரடியாக சந்திக்கலாம்.

முழு நம்பிக்கை

கடலூர் மாவட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படும் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் அடுத்த ஆண்டு டெல்லிக்கு சென்று ஜனாதிபதியின் கையால் நிர்மல் புரஸ்கார் விருது பெற வேண்டும்.

ஊராட்சி மன்ற தலைவர்கள் விருது பெறுவார்கள் என்று முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த நம்பிக்கையை மக்கள் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ராஜேந்திர ரத்னூ பேசினார்.

கலை நிகழ்ச்சி

முன்னதாக திட்ட ஆலோசகர் வேல்மணி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட திட்ட அதிகாரி மெகராஜ், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அதிகாரி ராஜன் பாபு, மகளிர் திட்ட அதிகாரி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நல்லூர் பகுதியைச் சேர்ந்த வளர்கல்வி திட்ட கலைஞர்களின் சுகாதார விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

0 comments: