]]

Wednesday, July 18, 2007

தமிழகத்தில் முதல் முறையாக...

தமிழகத்தில் முதல் முறையாக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன இதய ஸ்கேன் கருவி ரூ.6 ஆயிரம் செலுத்தி சோதனை செய்யலாம்

தமிழகத்தில் முதல் முறையாக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன இதய ஸ்கேன் கருவி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ரூ.6 ஆயிரம் செலுத்தி சோதனை செய்யலாம்.


தமிழகத்திலேயே முதல்முறையாக சென்னை அரசு ஆஸ்பத்திரியில், இதயத்தை 64 கூறுகளாக பிரித்து ஆராயும் திறன் கொண்ட அதிநவீன சி.டி. ஸ்கேன் கருவி வாங்கப்பட்டுள்ளது. இந்த 64 சிலைஸ் சி.டி. ஸ்கேன் கருவி தொடக்க விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.


அப்போது அவர் கூறியதாவது:-

கட்டண குறைப்பு

அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைக்கு நிகராக நவீன கருவிகளை வாங்குவதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இந்த நவீன கருவிகள் வாங்க ரூ.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 67 கோடி ரூபாய்க்கு கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.

இப்போது தொடங்கப்பட்டுள்ள இந்த 64 சிலைஸ் சி.டி.ஸ்கேன் கருவியின் மதிப்பு ரூ.4 கோடியாகும். இதே போல் மதுரை மருத்துவமனைக்கும் விரைவில் இந்த கருவி வாங்கப்படும். அரசுத்துறையில் இது போன்ற வசதிகளுடன் இருப்பதில் இதுதான் முதல் கருவி.


இந்த கருவியில் சோதனை செய்ய நோயாளிகளிடம் 6 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். நடைமுறை சிக்கல்களைக் கருத்தில் கொண்டு கட்டணத்தை குறைக்க முயற்சி செய்வோம்.

திருச்சி, தஞ்சை, நெல்லை, கோவை, வேலூர், ஸ்டான்லி ஆகிய மருத்துவமனைகளுக்கு ரூ.30 கோடி செலவில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி வாங்கப்படும்,

சிக்குன் குனியா

தனியார் மருத்துவ கல்லூரிகளில் 2.25 லட்சம், 2.50 லட்சம் 3 லட்சம் என்று கட்டணம் நிர்ணயித்திருக்கிறார்கள். தனியார் கல்லூரிகள் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக கவுன்டர் பெட்டிஷன் போட இருக்கிறோம்.

குமரி மாவட்டத்தில் சிக்குன் குனியா நோய் தாக்கவில்லை. அங்கு சாதாரண காய்ச்சல்தான் வந்துள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் இருப்பவர்கள் தமிழகத்தில் சிகிச்சை பெறுவதற்காக இங்கு வந்து விடுகிறார்கள்.

இவ்வாறு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ், தமிழ்நாடு மருத்துவ சேவை கழக நிர்வாக இயக்குனர் கருத்தையா பாண்டியன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் தியாகவல்லி கிருபாகரன் சென்னை மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் டி.பி.கலாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: