]]

Sunday, September 9, 2007

முஸ்லிம்கள் வசிக்கும் தனி தொகுதிகள்

முஸ்லிம்கள் வசிக்கும் தனி தொகுதிகள்

சச்சார் கமிட்டி யோசனைக்கு வரவேற்பு

"முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் தனித் தொகுதிகளை பொதுத் தொகுதிகளாக அறிவிக்க வேண்டும்'' என்ற சச்சார் கமிட்டியின் கருத்தை, மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் உயர்மட்டக் குழு வரவேற்றுள்ளது.

முஸ்லிம்களில் பொருளாதார நிலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டி, "முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் தனித் தொகுதிகளை, பொதுத் தொகுதிகளாக அறிவிக்க வேண்டும். இதன்மூலம், பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்'' என தெரிவித்திருந்தது.

மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் சார்பில் இது குறித்து ஆலோசனை செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, சச்சார் கமிட்டியின் கருத்தை வரவேற்றுள்ளது.

உயர்மட்டக் குழு, "தனித்தொகுதிகள் மறுசீரமைக்கும் போது, முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் தனித்தொகுதிகள் பொதுத் தொகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டும். தனித்தொகுதிகள் விஷயத்தில் முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும். நியாயமான மறுசீரமைப்பு கொள்கை வேண்டும்'' என தெரிவித்துள்ளது.

தனித்தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதற்கு ஆதிதிராவிடர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால், உயர்மட்டக் குழுவின் கருத்தை செயல்படுத்துவது அரசிற்கு சிரமமான காரியமாகவே இருக்கும்.

எனவே, ஆதிதிராவிடர்களுக்கான தனித்தொகுதி எண்ணிக்கையை குறைக்காமல், முஸ்லிம்கள் அதிகமாக உள்ள தனித்தொகுதிகள் பொதுத்தொகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரப்படுகிறது.

ஆதிதிராவிடர்களுக்கான தனித் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், நீண்டகாலம் தங்களது கோட்டையாக விளங்கிய தொகுதியை விட்டுத்தர மாட்டார்கள். இவர்களது எதிர்தரப்பினரும் தற்போதைய நிலை தொடர்வதையே விரும்புகின்றனர்.

தனித் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எதிர்ப்பே, நீண்ட நாட்களாக தனித்தொகுதிகள் மறுசீரமைக்கப்படாமல் இருப்பதற்கு காரணம்.

0 comments: