]]

Tuesday, July 10, 2007

கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு

கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும்
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி பேட்டி


கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. நேற்று நெல்லையில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்தார். அப்போது அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வாழ்வுரிமை மாநாடு

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட தேவேந்திரர், ஆதிதிராவிடர், அருந்ததியர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் ஆகியோருக்கான தென்மண்டல வாழ்வுரிமை மாநாடு வருகிற 22-ந்தேதி நெல்லையில் நடக்கிறது. இந்த மக்களுக்கு வாழ்வுரிமை வழங்குவது காலத்தின் கட்டாயமாகும்.

குறிப்பாக இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும் தேவேந்திரர், ஆதிதிராவிடர், அருந்ததியர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் இது வரை குடியிருக்க சொந்த வீட்டுமனை, சொந்த வீடு இல்லாமல் வறுமைகோட்டுக்கு கீழே வாழ்ந்து வருகிறார்கள்.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு

இதே போல இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய இந்த மண்ணில் பிறந்த மண்ணின் மைந்தர்களான இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு இல்லாதது மிகுந்த வேதனை அளிக்கிறது. இஸ்லாமியர்கள் அரசியல் மற்றும் உயர் பதவிகளில் ஒரு சதவீதம் கூட இல்லை. மேலும் பல முஸ்லிம்கள் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளனர்.

எனவே இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும். இதே போல கிறிஸ்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும்.

முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கேரளாவிலும், கர்நாடகத்திலும் இடஒதுக்கீடு உள்ளது. ஆந்திராவில் தற்போது இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. சமூக நீதியை கடைப்பிடிக்கும் தமிழகத்தில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாதது வருத்தம் அளிக்கிறது.

எனவே இந்த பிரிவு மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக தமிழகம் முழவதும் எங்கள் கட்சியின் சார்பில் வாழ்வுரிமை மாநாடு நடத்தி வருகிறோம்.

வருகிற 15-ந்தேதி நாகப்பட்டினத்திலும், 22-ந்தேதி நெல்லையிலும் மாநாடு நடத்துகிறோம். இந்த மாநாட்டில் டாக்டர் ராமதாஸ், மத்திய மந்திரிகள் அன்புமணி, வேலு மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் மத தலைவர்கள், பேராயர்கள், தலித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

0 comments: