சிறுபான்மையினர் இடஒதுக்கீடு
தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
தமிழகத்தில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்து விட்டது.
மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 19ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
கோவையைச் சேர்ந்த வக்கீல் எம்.லோகநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கடந்த 2001ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பிற்படுத்தப்பட்டோர் 46.14 சதவீதம் உள்ளனர்.
இவர்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகைக்கு இணையான இடஒதுக்கீடு இல்லை.
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு தனித்தனியாக 3.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்துதான் இந்த ஏழு சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.
ஓட்டு வங்கிக்காக இந்த இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
கொங்கு வேளாளர் சமூகத்தின் மக்கள் தொகை எட்டு சதவீதம் உள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது போல் அதே அடிப்படையில் தனியாக இடஒதுக்கீடு வழங்குமாறு கோர கொங்கு வேளாளருக்கும் உரிமை உள்ளது.
அதுமட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வரும் ஒவ்வொரு ஜாதியும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு இணையாக தங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க கோரலாம்.
எனவே குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தனி இடஒதுக்கீடு வழங்குவது என்பது பாரபட்சமானது.
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டதுபோல் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள மற்ற ஜாதியினருக்கும் வழங்க வேண்டும்.
தமிழக அரசின் கொள்கை முடிவு அவசர சட்டமாக கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கு ஜனாதிபதியின் முன் அனுமதி பெறவில்லை.
அவசரச் சட்டம் உள்நோக்கம் கொண்டது.
சட்டசபையில் விவாதிக்கப்படாமல் இது கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனை ரத்து செய்ய வேண்டும்.
எனவே, கல்வி மற்றும் பணிகளில் பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
அதனை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கு நேற்று தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் சீனியர் வக்கீல் விஜயன் ஆஜராகி, 'மக்கள் தொகை அடிப்படையில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஜனாதிபதியின் முன் அனுமதி பெறப்படவில்லை.
ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இருக்கும்போது மீண்டும் ஒரு ஒதுக்கீடு எப்படி என்கிற கேள்வி எழுகிறது.
சிறுபான்மையினர் என்பதற்காக அல்லாமல் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ளனர் என்பதற்காக அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
தற்போது மீண்டும் உள்பிரிவு கொண்டு வருவது கேலிக்குரியது.
பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து இந்த உள்ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது.
மற்ற ஒதுக்கீட்டை அரசு தொடரவில்லை. அவசரச் சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்' என வாதாடினார்.
அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விடுதலை ஆஜராகி, 'ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்ததன் மூலம் 50 சதவீத ஒதுக்கீட்டை தாண்டி விட்டது.
எனவே, அது ரத்து செய்யப்பட்டது.
பின்னர் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டுக்கு தடை விதிக்கப்படவில்லை.
தமிழக மக்கள் தொகையில் 37 லட்சம் கிறிஸ்தவர்கள், 34 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர்.
இரண்டையும் சேர்த்தால் தமிழக மக்கள் தொகையில் 10 சதவீதத்துக்கும் மேல் வருவர்.
இவர்களுக்கு தனியாக ஏழு சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
அவசர சட்டத்துக்கு தடை விதிக்கக் கூடாது' என வாதாடினார்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி அடங்கிய 'முதல் பெஞ்ச்', அவரச் சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.
வழக்கை விரிவாக விவாதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
நான்கு வாரங்களில் மத்திய அரசு, மாநில அரசு பதிலளிக்க வேண்டும், அதற்கு இரண்டு வாரங்களில் மனுதாரர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
0 comments:
Post a Comment