தமிழ் வழியில் படிக்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு தேர்வு கட்டணம் ரத்து
தமிழ் வழிக் கல்வி பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த தேவையில்லை என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ் வழிக் கல்விக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், 10 மற்றும் 12ம் வகுப்பை தமிழ் வழியில் பயிலும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுநாள் வரை, பள்ளி மூலமாக மேல்நிலைத் தேர்வு எழுதுபவர்கள் செய்முறை தேர்வு அடங்கிய பாடத் தொகுப்பில் தேர்வு எழுத ரூ.225ம், செய்முறைத் தேர்வு இல்லாத பாடத் தொகுப்பில் தேர்வு எழுத ரூ.175ம் தேர்வுக் கட்டணமாக செலுத்தி வந்தனர்.
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கு கட்டணமாக ரூ.115 வசூலிக்கப்பட்டது.
வரும் 2008 மார்ச், ஏப்ரல் பொதுத் தேர்வுகள் முதல் இந்த தேர்வுக் கட்டண விலக்கு நடைமுறைக்கு வருகிறது.
எனவே, பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தமிழ்வழியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வுக்கான தேர்வுக் கட்டணத்தை செலுத்த தேவையில்லை.
ஆனால், ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் தனித் தேர்வர்கள் வழக்கம் போல தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். அவர்களுக்கான கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
0 comments:
Post a Comment