வளைகுடாவுக்கு 'ஜெட்' விமானம்
வளைகுடாவுக்கு, ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம், அடுத்தாண்டு விமானப்போக்குவரத்தை ஆரம்பிக்கும்.
அடுத்தாண்டில் இருந்து, வளைகுடா பகுதிகளில், ஐந்து தடங்களில் விமானத்தை விட அனுமதிக்கும்படி, மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது ஜெட் நிர்வாகம்.
வளைகுடா பகுதிகளில், விமானப்போக்குவரத்தை நடத்த தனியாருக்கு இதுவரை அனுமதி தந்ததில்லை. அதனால், இதுபற்றி மத்திய அமைச்சர்கள் மட்டத்திலான குழு தீவிரமாக பரிசீலனை செய்துவருகிறது.
இது குறித்து விமானப்போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'அரசுக்கு சொந்தமான விமானப் போக்குவரத்து நடக்கும் தடங்களை தவிர, மற்ற பகுதிகளில் விமானப்போக்குவரத்தை நடத்த அனுமதிப்பது பற்றி பரிசீலிக்கப்படும்' என்று கூறினர்.
இந்தியா வளைகுடா இடையே பயணிகள் போக்குவரத்து அதிகமாக உள்ளதால், அந்த பகுதிகளுக்கு விமானப்போக்குவரத்தை விட தனியார் நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. இதற்காக, வளைகுடா நாடுகளுடன் தனியார் நிறுவனங்களும் பேச்சு நடத்தி வருகின்றன.
ஒவ்வொரு நாட்டில் இருந்தும் விமானப் போக்குவரத்துக்கு இவ்வளவு சதவீதம் ஒதுக்கீடு என்று வளைகுடா நாடுகள் முடிவு செய்துள்ளன.
இந்தியாவுக்கு வளைகுடா விமானப் போக்குவரத்து நடத்தும் சதவீதத்துக்கு ஏற்ப, இந்த ஒதுக்கீடு நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த வகையில், ஓமன், துபாய், அபுதாபி, கத்தார், குவைத் மற்றும் பக்ரைன் ஆகிய வளைகுடா பகுதிகளில் விமானப்போக்குவரத்தை நடத்த, ஜெட் விமான நிறுவனம் விண்ணப்பம் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தான் முடிவு செய்ய வேண்டும்.
இந்தியாவில் ஐந்தாண்டு விமானப் போக்குவரத்து நடத்தினால்தான், வெளிநாடுகளில் விமானப்போக்குவரத்தை நடத்த அனுமதி கிடைக்கும். அந்த நடைமுறையை தளர்த்த வேண்டும் என்று ஏற்கனவே, சில தனியார் நிறுவனங்கள் கோரின. ஆனால், மத்திய அரசு நிராகரித்து விட்டது.
ஜெட் விமான நிறுவனத்துக்கு, இந்தியாவில் விமானப் போக்குவரத்தை நடத்திய ஐந்தாண்டு அனுபவம் உள்ளது. அதனால், வெளிநாட்டு விமானப் போக்குவரத்தை நடத்த மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துவிட்டது.
இதனால், அடுத்தாண்டு, ஜெட் விமானம், வளைகுடா பகுதிகளுக்கு பறப்பது உறுதி. எந்தெந்த தடங்களில் பறக்கும் என்பது விரைவில் முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
0 comments:
Post a Comment