]]

Wednesday, September 12, 2007

வெளிநாடுகளில் வீட்டு வேலைக்கு செல்பவர்களுக்கு புதிய விதிமுறைகள்

வெளிநாடுகளில் வீட்டு வேலைக்கு செல்பவர்களுக்கு புதிய விதிமுறைகள்

-மத்திய மந்திரி தகவல்

வெளிநாடுகளில் வீட்டு வேலைக்கு செல்வோருக்கு புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக மத்திய மந்திரி கூறினார்.

தூதர்கள் கூட்டம்

வெளிநாட்டு வாழ் இந்தியர் நல விவகாரங்களுக்கான அமைச்சகம் சார்பில், அனைத்து வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியா, ஜோர்டான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் பணியாற்றும் இந்திய தூதர்களின் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது.

இந்த கூட்டத்துக்கு மத்திய வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நலத்துறை மந்திரி வயலார் ரவி தலைமை தாங்கினார்.

கூட்டம் முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய விதிமுறைகள்

வெளிநாடுகளில் வீட்டு வேலைக்கு செல்வோருக்கு புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

இதன்படி வெளிநாடு செல்லும் இந்திய தொழிலாளர்களுடன், அந்த நாட்டில் பணி வழங்குபவர்கள் தொழில் முறை ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

அந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்து, அந்த நாட்டுக்கான இந்திய தூதர் கையெழுத்திட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின்படி வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் 250 டாலரில் இருந்து 300 டாலராக அதிகரிக்கும்.

இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முன்பு இரு தரப்பினரும் உடன்படிக்கை செய்வது, பணி காலத்தின் போது, தொழிலாளர்களுக்கு இலவச போக்குவரத்து, மருத்துவம் உள்பட பல வசதிகள் செய்து தருவது கட்டாயமாக்கப்படும்.

சட்டரீதியான பாதுகாப்பு

வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் குறைகளை தீர்க்க 24 மணி நேர குறை தீர்ப்பு சேவை மையங்கள், அந்தந்த நாடுகளில் உருவாக்கப்படும்.

தேவைப்பட்டால், இந்தியர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க வசதி அளிக்கப்படும்.

இவ்வாறு மத்திய மந்திரி கூறினார்.

0 comments: