மக்களை நாடி மாவட்ட நிர்வாகம் திட்டம் மூலம் 10 ஆயிரம் பேருக்கு மனைப்பட்டா
- கலெக்டர் தகவல்
மக்களை நாடி மாவட்ட நிர்வாகம் திட்டம் மூலம் கடலூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கு மனைப் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது என கலெக்டர் ராஜேந்திர ரத்னு தெரிவித்தார்.
பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டை இந்திரா நகர், இருளர் காலனி உள்ளிட்ட சுனாமி பாதித்த பகுதிகளில் சசி தொண்டு நிறுவனம் பல உதவிகளை செய்து கொடுத்தது.
இந்நிலையில் அந்த பகுதியில் ரூ. 35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 14 நிரந்த வீடுகள், சமுதாய நலக்கூடம், சாலை வசதி, உள்ளிட்டவைகளை செய்து கொடுத்துள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு தொண்டு நிறுவன இயக்குனர் ரமேஷ்நாதன் தலைமை தாங்கினார். பரங்கிப்பேட்டை ஒன்றிய குழு தலைவர் முத்துபெருமாள், பேரூராட்சி மன்ற தலைவர் யூனுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சசி தொண்டு நிறுவன திட்ட மேலாளர் கவுரி சங்கர் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலெக்டர் ராஜேந்திர ரத்னு பங்கேற்று புதிய குடியிருப்புகளை திறந்து வைத்து பேசியதாவது:
கடலூர் மாவட்டத்தில் மக்களை நாடி மாவட்ட நிர்வாகம் திட்டம் நல்ல முறையில் செயல்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் 10ஆயிரம் பேருக்கு மனைப்பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
விடியல் நகர் பகுதியில் ரூ. 5லட்சம் சிமென்ட் சாலை போடப்படும்.
விடுதலை நகர் பகுதியில் ரூ. 13 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைக்கப்படும்.
பழங்குடியினர் இருளர்கள் 653 பேருக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
ஆர்.டி.ஓ., மூலம் பரங்கிப்பேட்டை மாதா கோவில் பகுதியில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விடியல் நகரில் ரூ. ஒரு லட்சம் செலவில் விளையாட்டு பூங்கா அமைக்கப்படும்.
மாவட்டம் முழுவதும் பழங்குடியினர் சர்வே எடுத்து விடுபட்டவர்கள் அனைவருக்கும் ஜாதி சான்று வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் ரவிக்குமர், செல்வபெருந்தகை, ஆர்.டி.ஓ., குழந்தை வேலு, தாசில்தார் பட்டுசாமி, சசி தொண்டு நிறுவன திட்ட மேலாளர் மோகன், கவுன்சிலர் காஜாகமால், ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி , துணைத் தலைவர் விஜயகுமார், கே.என்.எச்., இந்திய ஒருங்கிணைப்பாளர் சதீஷ் சாமுவேல், எச்.ஆர்.எப்.டி.எல்., மாநில அமைப்பாளர் ரவிச்சந்திரன், நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment