எந்த துறையில் லஞ்சம் இருந்தாலும் தைரியமாக புகார் தெரிவிக்கலாம்
- டி.எஸ்.பி., அம்பிகாபதி
எந்த துறையில் லஞ்சம் இருந்தாலும் பொதுமக்கள் தைரியமாக எங்களிடம் புகார் தெரிவிக்கலாம் என கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., அம்பிகாபதி கூறினார்.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி.,அம்பிகாபதி கூறியதாவது:
கடலூர் மாவட்டத்தில் பல துறைகளிலும் லஞ்சம் பெருகி வருவது தெரியவந்துள்ளது. ஆனால் பொதுமக்கள் புகார் தெரிவித்தால் தான் எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும்.
மேலும் அப்படியே புகார் தெரிவித்தாலும் புகார் தெரிவிப்பவர்கள் குறித்து முதலில் நாங்கள் விசாரணை செய்து அதன் பிறகே சம்பந்தப்பட்ட துறைக்கு சென்று அதிரடியாக சோதனை மேற்கொள்வோம்.
தற்போது திருச்சியிலும் பொறுப்பில் இருப்பதால் கடலூர் மற்றும் திருச்சிக்கும் சென்று நடவடிக்கை எடுத்து வருகிறேன். இதில் திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கியுள்ளதால் மிகவும் சிரமமாகத்தான் உள்ளது.
எங்களை கண்காணிக்க ஒரு சில துறையில் அலுவலகங்களின் வெளியே ஆட்களை நியமித்து வைத்துள்ளனர். நாங்கள் எங்கு சென்றாலும் அவர்கள் கார் எண் போன்ற அனைத்தையும் குறித்துக் கொண்டு எங்களை தொடர்ந்து வருவதுதான் வேடிக்கை.
இதையும் மீறி நாங்கள் மாறுவேடத்தில் நேராக செல்லாமல் ஒரு சில கி.மீ., தூரம் சுற்றிக் கொண்டு வாடகை கார் மற்றும் ஆட்டோக்கள் அல்லது நடந்து சென்று சோதனை செய்ய வேண்டியுள்ளது.
எந்த துறையில் லஞ்சம் இருந்தாலும் பொதுமக்கள் தைரியமாக எங்களிடம் புகார் தெரிவிக்கலாம்.
எந்த நேரத்திலும் தொலைபேசி எண்: 04142 233816 மற்றும் மொபைல்: 99949 66969 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு லஞ்சம் குறித்த புகார் தெரிவித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment