கடலூரில் 22-ந்தேதி மக்கள் நீதி மன்றம்
ஐகோர்ட்டு நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் பங்கேற்கிறார்
கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வருகிற 22-ந் தேதி கடலூரில் மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் கலந்துகொள்கிறார்.
மக்கள் நீதிமன்றம்
தேங்கி உள்ள வழக்குகளை சமரசம் மூலம் விரைவாக முடிக்க அமைக்கப்பட்ட ஒரு அமைப்பே மக்கள் நீதி மன்றம். இந்த குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி, மூத்த வக்கீல் மற்றும் சமூக சேவர்கள் ஆகியோர் இடம் பெற்றிருப்பார்கள்.
ஒரு பிரச்சினை தொடர்பாக நீதி மன்றம் செல்வதற்கு முன்பு 2 தரப்பினரையும் அழைத்து பேசி மக்கள் நீதி மன்றத்தின் மூலம் சுமுகமாக தீர்வுகாணப்படுகிறது. இதனால் நீதி மன்றத்துக்கு செல்வது தவிர்க்கப்படுவதோடு செலவுகளும், கால விரயங்களும் மிச்சமாகிறது.
கடலூரில்...
கடலூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் மாதம் 2 முறையும், தாலுகாக்களில் மாதம் ஒரு முறையும் மக்கள் நீதி மன்றம் நடந்து வருகிறது. இதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட மக்கள் நீதி மன்றம் வருகிற 22-ந் தேதி(சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள ஜாங்கிட் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதற்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பிரபாஸ்ரீதேவன் தலைமை தாங்குகிறார்.
இன்சூரன்ஸ் வழக்குகள்
இதில் கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி கே.ராமகிருஷ்ணன், மாவட்டத்தின் அனைத்து நீதிபதிகள், வக்கீல்கள், பல்வேறு துறையை சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் விபத்து, அனைத்து வங்கி கடன், பி.எஸ்.என்.எல்., நகராட்சி சொத்துவரி, நெய்வேலி நில ஆர்ஜிதம், சிட்பண்ட் போன்ற வழக்குகள் தீர்வு செய்து முடிக்கப்பட உள்ளன.
எனவே பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இந்த மக்கள் நீதிமன்றத்தில் கலந்து கொண்டு சட்டரீதியாக பயன் பெறலாம்.
இதற்கான ஏற்பாடுகளை கடலூர் வக்கீல்கள் சங்க தலைவர் அருளப்பன், செயலாளர் ராம்மோகன், அரசு வக்கீல் சங்கர ராமன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
0 comments:
Post a Comment