]]

Sunday, June 17, 2007

அரசுக் கல்லூரிகளில் 2000 ஆசிரியர்கள் ஆகஸ்டு மாத இறுதிக்குள் நியமிக்கப்படுவர்

அரசுக் கல்லூரிகளில் 2000 ஆசிரியர்கள் ஆகஸ்டு மாத இறுதிக்குள் நியமிக்கப்படுவர்


தமிழகத்திலுள்ள அரசுக்கல்லூரிகளில் காலியாக உள்ள 2000 பணியிடங்களுக்கு வருகிற ஆகஸ்டு மாத இறுதிக்குள் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுவிடுவர். இதற்கான பணிகள் துவங்கிவிட்டன என அமைச்சர் பொன்முடி கூறினார்.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:_


தமிழகத்திலுள்ள அரசு கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கான நியமன தேர்வு குறித்து சில விளக்கங்கள் கூற வேண்டியுள்ளது. 2,000 கல்லூரி விரிவுரையாளர்களை தேர்வு செய்யும் பணி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்று வருகிறது.

இந்த 2000 பணியிடங்களுக்கு ஏறக்குறைய 37,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் இரு கட்டங்களாக பரிசீலிக்கப்படுகிறது. முதல்கட்டமாக ஜூலை 9_ம் தேதியிலிருந்து 18_ந் தேதி வரை விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகிறது. இந்த பணிக்காக 46 அரசு கல்லூரிகளில் 70 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் முன்னிலையிலேயே எந்தவித ஒளிவு மறைவுமின்றி இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

சான்றிதழ்களின் சரிபார்ப்பு பணியின்போது சான்றிதழுக்கு ஏற்ப மதிப்பெண்கள் அளிக்கப்படும். இதற்கு மொத்தம் 40 மதிப்பெண் வழங்கப்படும். இதில் ஆசிரியர்கள் பெறுகின்ற மதிப்பெண்கள் உடனுக்குடன் அறிவிப்பு பலகையில் போடப்படும்.

இதற்கு அடுத்ததாக 2வது கட்டமாக நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இதற்கு ஒரு பணியிடத்துக்கு 10 பேர் வீதம் பரிந்துரைக்கப்படும். நேர்முகத்தேர்வுக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் 50 மதிப்பெண்களில் ஆசிரியர்கள் பெறுகின்ற மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் நியமனம் இருக்கும்.

இந்த பணிகள் அனைத்தும் ஆகஸ்டு 10_ம் தேதிக்குள் முடிந்துவிடும். ஆகஸ்டு இறுதிக்குள் ஆசிரியர் பணியிடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுவிடுவர். இது தவிர, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் 300 இடங்களும் விரைவில் நிரப்பப்பட உள்ளது.

இந்த பணிகள் அனைத்தும் ஒளிவு மறைவு இன்றி தெளிவாக நடைபெற இருப்பதால், ஆசிரியர் பணியில் சேருவதற்காக யாரும் பிறரிடம் பணம் தந்து ஏமாந்து விட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்டவாறு பொன்முடி கூறினார்.

0 comments: