]]

Friday, June 15, 2007

விற்க... வாங்க...

மக்கள் தொலைகாட்சி

தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்தும் கலாச்சார சீர்கேடுகள், மொழி மரபியல் முரண்பாடுகள், திரைப்படக் கூத்தாடிகளின் ஆக்ரமிப்புகள், உணர்வியல் ரீதியாக பெண்களை ஆட்டிப் படைக்கும் மகாத் தொடர்கள் என்று முழுக்க முழுக்க ஒளிபரப்பி ஒரு மோசமான வாழ்வியல் நிலைப்பாட்டை உருவாக்கிக் கொண்டிருக்கும் போது அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு மக்களை அறிவு, அறிவியல், மொழி, பண்பாடு, கலாச்சாரம், கல்வி, தொழில் என்று பல முனைகளில் வார்த்தெடுக்கும் நோக்கத்துடன் ஒரு தொலைக்காட்சி இயங்கி வருகின்றதென்றால் அது மக்கள் தொலைக்காட்சி ஒன்றுதான். சினிமாத்தனம், ஆடல் பாடல் என்று எதுவுமில்லாத, மக்களை சீரழிக்கும் எதற்கும் இடங்கொடுக்காத ஒரு குறிக்கோளுடன் மக்கள் தொலைக்காட்சி தமிழகத்தையும் இதர நாடுகளில் உள்ள தமிழர்களையும் ஓரளவு விழிப்படைய செய்து வந்துக் கொண்டிருக்கின்றது. அதன் அரசியல் செய்தித்தளங்களின் சில குறைப்பாடுகளைத் தவிர்த்து வேறு எந்த நிகழ்ச்சியையும் பளிச் சென்று குறை சொல்லி விட முடியாது.
நேரங்கிடைக்கும் பொதெல்லாம் நான் அந்த தொலைக்காட்சியைப் பார்ப்பேன். இன்றைக்கு பார்த்த ஒரு நிகழ்ச்சி *உடன் இதை வலைப்பூவில் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்* என்ற எண்ணத்தைத் தூண்டியது.

வணிகச் சந்தை என்ற அந்த நிகழ்ச்சி மிக மிக பயனுள்ளதாகவும், எல்லோருமே மிக எளிய முறையில் தங்கள் தேவைகளை(பிரச்சனைகளை) முடித்துக் கொள்ளக் கூடியதாகவும் அமைந்துள்ளது. (இது தொடர்ச்சியாக வரும் நிகழ்ச்சியாகும்)

நீங்கள் தமிழகத்தின் எநதப்பகுதியை சேர்ந்தவராகவும் இருக்கலாம். தற்போது உலகில் எங்கு வசிப்பவராகவும் கூட இருக்கலாம். உங்களிடம் நிலங்கள், மனைகள், வீடுகள், பிற மக்கள் பயன்பாட்டுப் பொருள்கள் எதுவும் விற்பனைக்கு இருந்தால் அதை விற்க நீங்கள் சிரமம் எடுத்துக் கொள்வீர்கள். சிரமம் வேண்டாம் என்றால் இடைத்தரகர்களிடம் ஒப்படைத்து அவர்களுக்கு கமிஷன் கொடுத்து வயிற்றெறிச்சல் படுவீர்கள். அதை விற்க காத்து கிடப்பீர்கள். இதற்கு ஒரு சிறந்த மாற்று வழியை முன் வைக்கின்றது இந்த நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியின் போது நீங்கள் அவர்களை தொலைப் பேசியில் தொடர்புக் கொண்டு உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை கொடுத்து விற்கப் போகும் நிலம் அல்லது வீடு அல்லது பொருளின் அளவு, தரம், விலைப் போன்ற நிலவரத்தை சொன்னால் போதும் அதே நேரத்தில் உங்களின் பெயரும் அலைப்பேசி எண்ணும் தொலைக்காட்சியில் திரையில் காட்சியாகும். அந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் (உலக அளவில்) அனைவரும் உங்கள் தகவல்களைப் பெற்றுக் கொள்வார்கள். பிறகென்ன? தேவையானவர்கள் உங்களை தொலைபேசியில் தொடர்புக் கொள்வார்கள். உங்கள் விற்பனையை எவ்வித இடைத்தரகரும் இல்லாமல் துரிதமாக முடித்துக் கொள்ளலாம்.
அதே போன்று உங்களுக்கு வீடோ நிலமோ தேவைப்பட்டால் அதையும் நீங்கள் குறிப்பிடலாம். இந்த ஏரியாவில் இந்த விலையில் இந்த அளவில் வீடோ, கடையோ, நிலமோ தேவைப்படுகின்றது என்ற விபரத்தைக் கூறினால் வி்ற்பனைக்குரியவர்கள் உங்களைத் தொடர்புக் கொள்வார்கள் மிக இலகுவாக நீங்கள் உங்கள் தேவையை பூர்த்தி செய்துக் கொள்ளலாம்.

இது மட்டுமல்ல இன்றைய நிகழ்ச்சியில், த்ண்ணீர் இறைக்கும் டீசல் இன்ஜீன் மெகானிக் ஒருவரும், ஓவியர் ஒருவரும், வீட்டில் இருந்தபடி கணணி வேலை செய்யும் ஒருவரும் கூட தொடர்புக் கொண்டு தங்கள் வேலைகளையும் இடங்களையும் பதிந்தார்கள். தேவையுள்ளவர்கள் அவர்களையும் தொடர்புக் கொள்வார்கள். எல்லோருக்கும் மிக பயனுள்ள நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது.

பரங்கிப்பேட்டையில் விற்பவர்கள் - வாங்குபவர்கள் ஏராளமாக இருப்பதால் அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி மிக பயனளிக்கும் என்று நினைக்கிறேன்.
முக்கிய குறிப்பு: இந்த நிகழ்ச்சிக்காக மக்கள் தொலைக் காட்சி எத்தகைய கட்டணத்தையும் வசூலிக்கவில்லை.

இதுகுறித்து உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்.

0 comments: