]]

Sunday, June 17, 2007

வீட்டு பணிப்பெண், வீட்டு நர்ஸ்களுக்கு புது கல்வித் திட்டம் துவக்க அரசு முடிவு

வீட்டு பணிப்பெண், வீட்டு நர்ஸ்களுக்கு புது கல்வித் திட்டம் துவக்க அரசு முடிவு

வெளிநாடுகளில் வீட்டு வேலைக்கும், வீட்டில் நர்சாக பணியாற்றுவதற்கும் அதிகளவில் இந்தியர்கள் தேவைப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டும், இந்த வேலைகளுக்கு செல்வோர், தங்களின் திறனை அதிகரித்துக் கொள்ளும் வகையிலும், தங்களின் உரிமைகளை அறிந்து கொள்ள உதவும் வகையில் புதிய கல்வித் திட்டத்தை துவக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் இதை அறிவித்தார். அவர் கூறியதாவது:

சர்வதேச தொழிலாளர் மாநாட்டுக்காக சமீபத்தில் ஜெனீவா சென்றிருந்தேன். அமெரிக்காவில் வயதானோரை கவனித்துக் கொள்வதற்காக 10 லட்சத்துக்கும் அதிகமான வீட்டு நர்ஸ்கள் தேவைப்படுவதாக, அந்நாட்டு அமைச்சர் என்னிடம் தெரிவித்தார். அதேபோல, குவைத் போன்ற நாடுகளில் திறமை வாய்ந்த வீட்டு வேலையாள் தேவை அதிகளவில் உள்ளது. வெளிநாடுகளில் வீட்டு வேலைக்கும், வீட்டில் நர்சாக பணியாற்றுவதற்கும் இந்தியர்கள் அதிகளவில் செல்கின்றனர். அங்கு அவர்கள் துன்புறுத்தப்படுவதும், பிரச்னைகளுக்கு ஆளாவதும் தொடர்கிறது. இதையடுத்து, இவர்கள் தங்களின் வேலைத்திறனை அதிகரித்துக் கொள்ளும் வகையிலும், தங்களின் உரிமைகளை தெரிந்து கொள்ள உதவும் வகையிலும் புதிய கல்வித் திட்டத்தை துவக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது போன்ற பாடத்திட்டத்தையும், கல்வி நிறுவனங்களையும் துவக்குவதற்கு மாநில அரசுகளுடன் மத்திய தொழிலாளர் துறை ஆலோசித்து வருகிறது.
இவ்வாறு பெர்னாண்டஸ் கூறினார்.

0 comments: