]]

Friday, July 13, 2007

இந்த ஆண்டு 140 பேரூராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்

இந்த ஆண்டு 140 பேரூராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
தமிழக அரசு அறிவிப்பு

அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் இந்த ஆண்டு 140 பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

4 ஆண்டுகளுக்குள் கடந்த 11.4.2007 அன்று சட்டசபை கூட்டத் தொடரில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திலுள்ள 561 பேரூராட்சிகளிலும் 4 ஆண்டுகளுக்குள் `அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்' இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் துவக்கப்படவுள்ளன.


தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், திட்டப் பணிகளை ஆய்வு செய்ய அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்த போது, உள்ளாட்சித் துறை பிரதிநிதிகளால் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதற்குத் தக்க நிதி ஒதுக்கீடு மற்றும் பணிகள் மேற்கொள்வதற்கான உத்தரவை வழங்கும்படி வேண்டிக் கொண்டனர்.


புதிய முனைப்பு


அதன்படி, பொது மக்களின் அத்தியாவசிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் பொருட்டு அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் விதத்தில், `அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்' உருவாக்கப்படும் என சட்டசபைக் கூட்டத் தொடரில் அறிவித்துள்ளதற்கு இணங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்த அரசாணையின்படி, குறைந்த வருமானம் உள்ள பேரூராட்சிகளில் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் நிதிநிலை இடர்பாடுகளால் எந்தவொரு பெரிய அளவிலான அடிப்படை மற்றும் கட்டுமானப் பணிகள் எடுத்துக் கொள்ளாத நிலை போக்கப்படும்.

அரசு புதிய முனைப்பாக இந்தத் திட்டத்தினை பேரூராட்சிகளின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு குறைந்த வருமானம் உள்ள பேரூராட்சிகளுக்கு முன்னுரிமை அளித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு பணிகள் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

என்னென்ன பணிகள்?


இந்தத் திட்டத்தின் கீழ் மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து குடிநீர் வசதி, சாலை மற்றும் பாலங்கள் அமைத்தல், தெரு விளக்குகள் மற்றும் சோடியம் ஆவி விளக்குகள் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல், சுயஉதவிக் குழுக்களுக்கு பணிக்கூடம் அமைத்தல், அங்காடி வளாகம், சுகாதார வளாகம் அமைத்தல், படிப்பகம், பூங்கா அமைத்தல் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளை செய்திட இந்தத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.


இந்தத் திட்டத்தை மாவட்ட அளவில் முழுமையாக செயல்படுத்துவதற்கு மாவட்ட கலெக்டரை குழு தலைவராகவும், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உறுப்பினர்-செயலாளராகவும், மற்ற துறை அலுவலர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட திட்ட செயலாக்க கண்காணிப்பு குழு அமைத்து திட்டம் செயல்படுத்தப்படும்.

திட்டத்தினை இந்தக் குழு நடைமுறைப்படுத்தவும், கண்காணிக்கவும், மற்ற திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.280 கோடி மதிப்பீடு


2007-2008-ம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் 140 பேரூராட்சிகள் வீதம் பேரூராட்சிகளின் வருமானத்தினை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படும். குறைந்த வருமானம் உள்ள பேரூராட்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்து, ஒவ்வொரு பேரூராட்சிக்கும் ரூ.50 லட்சம் நிதியுதவியுடன் ஆண்டுக்கு ரூ.70 கோடி நிதியுதவி தரப்படும்.


ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்தில் உள்ள 25 சதவீத பேரூராட்சிகளில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டு, 4 ஆண்டு காலத்திற்குள் 561 பேரூராட்சிகளிலும், மொத்தமாக ரூ.280 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.


எந்தெந்த பேரூராட்சிகள்?


இந்த ஆண்டு காஞ்சீபுரத்தில் 6 பேரூராட்சிகள், திருவள்ளூர்-3, வேலூர்-6, திருவண்ணாமலை-3, தருமபுரி-2, கிருஷ்ணகிரி-2, சேலம்-8, நாமக்கல்-4, ஈரோடு-14, கோயம்புத்தூர்-13, நீலகிரி-3, கடலூர்-4, விழுப்புரம்-3, தஞ்சாவூர்-6, நாகப்பட்டினம்-2, திருவாரூர்-1,

திருச்சி-4, பெரம்பலூர்-2, புதுக்கோட்டை-2, திண்டுக்கல்-6, கரூர்-3, மதுரை-3, தேனி-5, ராமநாதபுரம்-2, விருதுநகர்-3, சிவகங்கை-3, நெல்லை-9, தூத்துக்குடி-4, கன்னியாகுமரி-14, ஆக மொத்தம் 140 பேரூராட்சிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.


பேரூராட்சிகளில் அடிப்படை மற்றும் கட்டுமான வசதிகள், சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற தூய்மை பேணிடும் பணிகள் மற்றும் பேரூராட்சிகளில் பொது மக்கள் தகவல் எளிதில் பெற்றிட கணினிமயமாக்கல் மற்றும் ஒருங்கிணைந்த வகையில் பேரூராட்சிகள் சமூகப் பொருளாதார வளர்ச்சி பெற்றிட, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களோடு ஒருங்கிணைத்து செயல்படுத்திட இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது.


இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நன்றி : தினத்தந்தி, ஜுலை 13, 2007

0 comments: