]]
Showing posts with label பேரூராட்சி. Show all posts
Showing posts with label பேரூராட்சி. Show all posts

Sunday, September 2, 2007

வெள்ளாற்று பாலத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும்


பரங்கிப்பேட்டை - கிள்ளையை இணைக்கும் வெள்ளாற்று பாலத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும்


ம.தி.மு.க.கோரிக்கை


பரங்கிப்பேட்டை - கிள்ளையை இணைக்கும் வகையில் வெள்ளாற்று பாலத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.


இது தொடர்பாக ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜீ என்கிற ராமதாஸ் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-


கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டைக்கும் கிள்ளைக்கும் இடையே வெள்ளாறு உள்ளது. இந்த வெள்ளாறு கிள்ளை பேரூராட்சிக்கும், பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கும் மையப்பகுதியில் உள்ளது.


பரங்கிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் சுமார் 50 கிராமங்களும், கிள்ளை பேரூராட்சியில் 50 கிராமங்களும் உள்ளது.


இந்நிலையில் பரங்கிப்பேட்டையில் இருந்து கிள்ளைக்கும், கிள்ளையில் இருந்தும் பரங்கிப்பேட்டைக்கும் படகு மூலமாக தான் செல்ல வேண்டும்.


மழைக்காலங்களில் படகுகள் செல்ல முடியாது. மழை நீர் வெள்ளாற்றில் கரைபுரண்டு ஓடும். இதனால் படகுகள் கவிழ்ந்துவிடும் என்று படகுகள் நிறுத்தி வைக்கப்படும்.


இதன் காரணமாக கிள்ளையில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு செல்ல வண்டிகேட் வழியாக புவனகிரியை சுற்றி செல்ல வேண்டும். அதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் ஆகும்.


இதனை கருத்தில் கொண்டு பரங்கிப்பேட்டை - கிள்ளையை இணைக்கும் வகையில் பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை வைத்தனர்.


அதன்படி பாலத்தை கட்ட உலக வங்கி ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது. பணி தொடங்க டெண்டரும் விடப்பட்டுள்ளது.


இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் டெண்டர் விடப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தொடங்க வில்லை.


இதனால் பொதுமக்கள் பரங்கிப்பேட்டை - கிள்ளைக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.


எனவே, பரங்கிப்பேட்டை - கிள்ளை பகுதி களில் 200 கிராம மக்களின் நலன்கருதி வெள்ளாற்று பாலத்தை துரிதமாக முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sunday, July 22, 2007

நகர்ப்புற உள்ளாட்சி, பேரூராட்சி பகுதிகளில் விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்

நகர்ப்புற உள்ளாட்சி, பேரூராட்சி பகுதிகளில் விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்
- அரசு அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் இணைப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.


இது குறித்து வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கையின் போது சட்டசபையில் 12.4.2007 அன்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்த போது, ``நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வீட்டுக் குடிநீர் இணைப்புகள் வழங்கும் முறையை எளிதாக்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, முறையான கட்டணங்கள் செலுத்தி, வீட்டு குடிநீர் இணைப்புகள் கோரும் அனைவருக்கும் மொத்த இணைப்பு எண்ணிக்கையில் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்'' என்று குறிப்பிட்டார்.


இந்த அறிவிப்பின் அடிப்படையில், நகராட்சி நிர்வாக ஆணையரிடம் இருந்து கருத்து பெறப்பட்டது.

இதை பரிசீலித்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வீட்டுக் குடிநீர் இணைப்புகள் வழங்குவது குறித்து வெளியிடப்படும் ஆணைகள் வருமாறு:-

7 நாட்களுக்குள்


* குடிநீர் இணைப்புகளுக்கு அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கட்டண விதிமுறைகளுக்கு உட்பட்டு, எண்ணிக்கையில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் குடிநீர் இணைப்புகள் பெற விண்ணப்பிக்கும் அனைவருக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.


* விண்ணப்பங்கள் பெறப்பட்டு 7 நாட்களில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.


* தொழில்நுட்ப காரணங்களினால் குடிநீர் இணைப்புகள் வழங்க முடியாத தெருக்களில் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டும், விண்ணப்பம் பெறப்பட்ட நாளில் இருந்து ஒரு மாதத்துக்குள் சரி செய்யப்பட்டு இணைப்புகள் வழங்கப்படும்.


ஆய்வறிக்கை


* ஒவ்வொரு மாதமும் எவ்வளவு விண்ணப்பங்கள் பெறப்பட்டன? அவற்றில் எவ்வளவு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன? என்ற விவரத்தை நகராட்சி நிர்வாக ஆணையரும், பேரூராட்சிகளின் இயக்குனரும் ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்து ஆய்வறிக்கையை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.

Friday, July 13, 2007

இந்த ஆண்டு 140 பேரூராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்

இந்த ஆண்டு 140 பேரூராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
தமிழக அரசு அறிவிப்பு

அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் இந்த ஆண்டு 140 பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

4 ஆண்டுகளுக்குள் கடந்த 11.4.2007 அன்று சட்டசபை கூட்டத் தொடரில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திலுள்ள 561 பேரூராட்சிகளிலும் 4 ஆண்டுகளுக்குள் `அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்' இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் துவக்கப்படவுள்ளன.


தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், திட்டப் பணிகளை ஆய்வு செய்ய அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்த போது, உள்ளாட்சித் துறை பிரதிநிதிகளால் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதற்குத் தக்க நிதி ஒதுக்கீடு மற்றும் பணிகள் மேற்கொள்வதற்கான உத்தரவை வழங்கும்படி வேண்டிக் கொண்டனர்.


புதிய முனைப்பு


அதன்படி, பொது மக்களின் அத்தியாவசிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் பொருட்டு அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் விதத்தில், `அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்' உருவாக்கப்படும் என சட்டசபைக் கூட்டத் தொடரில் அறிவித்துள்ளதற்கு இணங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்த அரசாணையின்படி, குறைந்த வருமானம் உள்ள பேரூராட்சிகளில் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் நிதிநிலை இடர்பாடுகளால் எந்தவொரு பெரிய அளவிலான அடிப்படை மற்றும் கட்டுமானப் பணிகள் எடுத்துக் கொள்ளாத நிலை போக்கப்படும்.

அரசு புதிய முனைப்பாக இந்தத் திட்டத்தினை பேரூராட்சிகளின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு குறைந்த வருமானம் உள்ள பேரூராட்சிகளுக்கு முன்னுரிமை அளித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு பணிகள் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

என்னென்ன பணிகள்?


இந்தத் திட்டத்தின் கீழ் மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து குடிநீர் வசதி, சாலை மற்றும் பாலங்கள் அமைத்தல், தெரு விளக்குகள் மற்றும் சோடியம் ஆவி விளக்குகள் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல், சுயஉதவிக் குழுக்களுக்கு பணிக்கூடம் அமைத்தல், அங்காடி வளாகம், சுகாதார வளாகம் அமைத்தல், படிப்பகம், பூங்கா அமைத்தல் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளை செய்திட இந்தத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.


இந்தத் திட்டத்தை மாவட்ட அளவில் முழுமையாக செயல்படுத்துவதற்கு மாவட்ட கலெக்டரை குழு தலைவராகவும், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உறுப்பினர்-செயலாளராகவும், மற்ற துறை அலுவலர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட திட்ட செயலாக்க கண்காணிப்பு குழு அமைத்து திட்டம் செயல்படுத்தப்படும்.

திட்டத்தினை இந்தக் குழு நடைமுறைப்படுத்தவும், கண்காணிக்கவும், மற்ற திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.280 கோடி மதிப்பீடு


2007-2008-ம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் 140 பேரூராட்சிகள் வீதம் பேரூராட்சிகளின் வருமானத்தினை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படும். குறைந்த வருமானம் உள்ள பேரூராட்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்து, ஒவ்வொரு பேரூராட்சிக்கும் ரூ.50 லட்சம் நிதியுதவியுடன் ஆண்டுக்கு ரூ.70 கோடி நிதியுதவி தரப்படும்.


ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்தில் உள்ள 25 சதவீத பேரூராட்சிகளில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டு, 4 ஆண்டு காலத்திற்குள் 561 பேரூராட்சிகளிலும், மொத்தமாக ரூ.280 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.


எந்தெந்த பேரூராட்சிகள்?


இந்த ஆண்டு காஞ்சீபுரத்தில் 6 பேரூராட்சிகள், திருவள்ளூர்-3, வேலூர்-6, திருவண்ணாமலை-3, தருமபுரி-2, கிருஷ்ணகிரி-2, சேலம்-8, நாமக்கல்-4, ஈரோடு-14, கோயம்புத்தூர்-13, நீலகிரி-3, கடலூர்-4, விழுப்புரம்-3, தஞ்சாவூர்-6, நாகப்பட்டினம்-2, திருவாரூர்-1,

திருச்சி-4, பெரம்பலூர்-2, புதுக்கோட்டை-2, திண்டுக்கல்-6, கரூர்-3, மதுரை-3, தேனி-5, ராமநாதபுரம்-2, விருதுநகர்-3, சிவகங்கை-3, நெல்லை-9, தூத்துக்குடி-4, கன்னியாகுமரி-14, ஆக மொத்தம் 140 பேரூராட்சிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.


பேரூராட்சிகளில் அடிப்படை மற்றும் கட்டுமான வசதிகள், சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற தூய்மை பேணிடும் பணிகள் மற்றும் பேரூராட்சிகளில் பொது மக்கள் தகவல் எளிதில் பெற்றிட கணினிமயமாக்கல் மற்றும் ஒருங்கிணைந்த வகையில் பேரூராட்சிகள் சமூகப் பொருளாதார வளர்ச்சி பெற்றிட, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களோடு ஒருங்கிணைத்து செயல்படுத்திட இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது.


இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நன்றி : தினத்தந்தி, ஜுலை 13, 2007

Sunday, July 1, 2007

பேரூராட்சிகளுக்கு தனி இணைய தளம் துவக்கம்

பேரூராட்சிகளுக்கு தனி இணைய தளம் துவக்கம்


பேரூராட்சிகளுக்கென தனி இணைய தளம் துவக்கப்பட்டுள்ளது. டெண்டர் படிவம் போன்றவற்றை இணைய தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

பேரூராட்சிகளின் இயக்குனர் கோபால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள 561 பேரூராட்சிகளுக்கும் கம்ப்யூட்டர் வழங்கப்பட்டுள்ளது. "ஆன் லைன்' மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்வதை நோக்கமாக கொண்டு இத்துறை செயல்படுகிறது. அனைத்து பேரூராட்சிகளுக்கும் இணைய தளம் உருவாக்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, www.townpanchayats.tn.nic.in என்ற இணைய தள முகவரியில் பேரூராட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தை பயன்படுத்தி பேரூராட்சிகள் பற்றிய பொதுத் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

பேரூராட்சிகளில் சாலைப் பணிகள், வடிகால் அமைத்தல், கட்டடங்கள், தெருவிளக்குகள், குடிநீர் வழங்கல் பணிகள், பூங்கா அமைத்தல், பஸ் ஸ்டாண்ட் புதுப்பித்தல் போன்ற வேலைகள் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் நடந்து வருகின்றன. இப்பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளுக்கென இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

அனைத்து பேரூராட்சிகளிலும் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட வேலைகள் பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றுக்கான டெண்டர் அறிவிப்பு, வரைபடம், டெண்டர் படிவம் போன்றவற்றை இணையதளங்களில் பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆகிய இந்த இணையதளங்களில் மாவட்ட வாரியாக, பேரூராட்சிகள் வாரியாக, பணிகள் வாரியாக தேடும் வசதியும், ஒப்பந்தப்புள்ளி தொடர்பான திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் பெற முடியும்.

இவ்வாறு கோபால் தெரிவித்துள்ளார்.