]]

Sunday, July 22, 2007

நகர்ப்புற உள்ளாட்சி, பேரூராட்சி பகுதிகளில் விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்

நகர்ப்புற உள்ளாட்சி, பேரூராட்சி பகுதிகளில் விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்
- அரசு அறிவிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் இணைப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.


இது குறித்து வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கையின் போது சட்டசபையில் 12.4.2007 அன்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்த போது, ``நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வீட்டுக் குடிநீர் இணைப்புகள் வழங்கும் முறையை எளிதாக்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, முறையான கட்டணங்கள் செலுத்தி, வீட்டு குடிநீர் இணைப்புகள் கோரும் அனைவருக்கும் மொத்த இணைப்பு எண்ணிக்கையில் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்'' என்று குறிப்பிட்டார்.


இந்த அறிவிப்பின் அடிப்படையில், நகராட்சி நிர்வாக ஆணையரிடம் இருந்து கருத்து பெறப்பட்டது.

இதை பரிசீலித்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வீட்டுக் குடிநீர் இணைப்புகள் வழங்குவது குறித்து வெளியிடப்படும் ஆணைகள் வருமாறு:-

7 நாட்களுக்குள்


* குடிநீர் இணைப்புகளுக்கு அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள கட்டண விதிமுறைகளுக்கு உட்பட்டு, எண்ணிக்கையில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் குடிநீர் இணைப்புகள் பெற விண்ணப்பிக்கும் அனைவருக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.


* விண்ணப்பங்கள் பெறப்பட்டு 7 நாட்களில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.


* தொழில்நுட்ப காரணங்களினால் குடிநீர் இணைப்புகள் வழங்க முடியாத தெருக்களில் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டும், விண்ணப்பம் பெறப்பட்ட நாளில் இருந்து ஒரு மாதத்துக்குள் சரி செய்யப்பட்டு இணைப்புகள் வழங்கப்படும்.


ஆய்வறிக்கை


* ஒவ்வொரு மாதமும் எவ்வளவு விண்ணப்பங்கள் பெறப்பட்டன? அவற்றில் எவ்வளவு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன? என்ற விவரத்தை நகராட்சி நிர்வாக ஆணையரும், பேரூராட்சிகளின் இயக்குனரும் ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்து ஆய்வறிக்கையை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.

0 comments: