]]

Wednesday, July 18, 2007

கடலூர், காஞ்சீபுரம், நாகை மாவட்டங்களுக்கு சிசுக்கள் பராமரிப்பு சிறப்பு ஆம்புலன்சுகள்

கடலூர், காஞ்சீபுரம், நாகை மாவட்டங்களுக்கு சிசுக்கள் பராமரிப்பு சிறப்பு ஆம்புலன்சுகள் கருணாநிதியிடம் யுனிசெப் நிறுவனம் இலவசமாக வழங்கியது



கடலூர், காஞ்சீபுரம், நாகை மாவட்டங்களுக்காக சிசு பராமரிப்பு சிறப்பு ஆம்புலன்சுகளை யுனிசெப் நிறுவனம், முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் வழங்கியுள்ளது.



இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-


உயிருக்கும் போராடும் குழந்தைகள்



தமிழ்நாட்டில் ஆண்டொன்றுக்கு பிறக்கிற ஆயிரம் குழந்தைகளில் 31 பச்சிளம் குழந்தைகள் மூச்சுத் திணறல், தொற்று நோய்கள், குறைப் பிரசவங்கள், எடை குறைவு போன்ற காரணங்களால் இறந்து போகின்றன. அகில இந்திய அளவில் சிசு மரண விகிதம் 58-ஆக உள்ளது.



கிராமப்புறங்களில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் பச்சிளங் குழந்தைகளில் யாருக்கேனும் உடல் பிரச்சினை அதிகமாகி உயிருக்குப் போராடும் நேரங்களில், சிறப்பு சிகிச்சைகளை மேற்கொள்ளவும், சிசுவின் உயிர் காப்பதற்காக மாவட்ட மற்றும் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றன.

வசதி நிறைந்த ஆம்புலன்சுகள்

அவசர சிகிச்சைகள் தேவைப்படும் பிறந்த பச்சிளங் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த விரைவான நவீன உயிர்காக்கும் வசதிகள் கிடைக்கும்படியான நோக்கத்தில் நடமாடும் பச்சிளங்குழந்தை தீவிர பராமரிப்பு ஊர்திகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

உயர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படும் பச்சிளங் குழந்தைகளுக்கு பயணத்தின் போது ஏற்படும் கடுமையான உடல் பிரச்சினைகளை சரி செய்து, உயிர்காக்கும் வசதிகள் நிறைந்தவையாக இந்த ஆம்புலன்சுகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.

உள்ளே இருக்கும் கருவிகள்

தமிழ்நாடு அரசு மேற்கொள்ள இருக்கும் பச்சிளங் குழந்தை பராமரிப்பு உயர் சிகிச்சை நடவடிக்கைகளுக்காக, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 6 ஆம்புலன்ஸ் வாகனங்களை யுனிசெப் நிறுவனம் வழங்கியுள்ளது.

கடலூர், காஞ்சீபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் உபயோகத்திற்கு இவை பயன்படுத்தப்படும். இந்த வாகனங்களை முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் நேற்று யுனிசெப் நிறுவன உயர் அலுவலர்கள் ஒப்படைத்தனர்.

இந்த வாகனங்களில் அவசர சிகிச்சைக்கான சாதனங்களும் நவீன வசதிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. நோயுற்ற பச்சிளங் குழந்தையை மாற்று இடம் கொண்டு சேர்க்கும் வரை குழந்தையை கதகதப்பாக வைத்திருக்கும் கருவி, பிராணவாயு தரும் கருவி,

பல்ஸ்-ஆக்ஸிமீட்டர்-ரத்தத்திலுள்ள பிராணவாயுவின் அளவுகளை கண்காணிக்கும் கருவி, குழந்தைக்கு செயற்கை சுவாச கருவி (வெண்டிலேட்டர்), திரவ மருந்தேற்றும் கருவி, ரத்த அழுத்தமானி, தொண்டை பரிசோதனை கருவி, சளி உறிஞ்சும் கருவி ஆகியவை இந்த ஆம்புலன்ஸ்களில் வைக்கப்பட்டு உள்ளன.

0 comments: