]]

Friday, July 13, 2007

ஹஜ் பயணம் செல்வது யார் : சென்னையில் இன்று குலுக்கல்

ஹஜ் பயணம் செல்வது யார்?
சென்னையில் இன்று குலுக்கல்

இந்த ஆண்டில் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பித்துள்ள ஆறாயிரத்து 800 பேரில் மூவாயிரத்து 484 பேர் சென்னையில் இன்று நடக்கும் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் நேற்று தமிழக ஹஜ் கமிட்டியின் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. ஹஜ் கமிட்டி தலைவர் ஜே.எம்.ஆருண் எம்.பி., உறுப்பினர்கள் பிரசிடென்சி ஓட்டல் அதிபர் அபுபக்கர், அப்துல் பாசித், ஹக்கீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


கூட்டம் முடிந்த பின்னர் ஜே.எம்.ஆரூண் கூறியதாவது:

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு செல்ல 6 ஆயிரத்து 800 பேரும், 16 குழந்தைகளும் விண்ணப்பித்துள்ளனர். முதலில் 2 ஆயிரத்து 700 பேருக்கு மட்டும் தான் அனுமதி கிடைத்தது.

ஹஜ் குழுவினர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து கூடுதலாக அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார். அதன் பின்னர் மூவாயிரத்து 384 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 100 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். ஆக மொத்தம் இந்த ஆண்டு மூவாயிரத்து 484 பேர் யாத்திரை செல்ல உள்ளனர்.

யாத்திரீகர்கள் யார்? யார்? என்பதை இன்று நடக்கும் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அரசின் சார்பில் ஹஜ் கமிட்டியின் செயலர் அலாவுதீன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை கமிஷனர் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுடன் ஒருவர் உடன் செல்லலாம். விமான டிக்கெட் கட்டணத்திற்கு மட்டும் சலுகை கிடைக்கும். 75 வயது கடந்தவர்கள் 77 ஹஜ் யாத்திரை செல்ல உள்ளனர்.

விண்ணப்பித்துள்ள அனைவரும் ஹஜ் பயணம் செல்ல மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு ஜே.எம்.ஆரூண் கூறினார்.


நன்றி : தினமலர்

0 comments: