]]

Friday, July 13, 2007

கடலோரத்தில் 2 ஆயிரம் வீடுகள்

கடலோரத்தில் 2 ஆயிரம் வீடுகள்

ரூ.43 கோடியில் கட்ட முடிவு


கடலோர மாவட்டங்களில் கடலில் இருந்து 200 மீட்டர் தூரம் வரை உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு, ஐந்தாயிரத்து 500 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.


தமிழக அரசின் செய்திக் குறிப்பு:

வீட்டு வசதி மற்றும் குடிசை மாற்று துறை குறித்த ஆய்வுக் கூட்டம், முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்தது. வீட்டு வசதி துறை அமைச்சர் சுப.தங்கவேலன் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

குடிசை மாற்று வாரியத்தால் தற்போது கட்டப்பட்டு வரும் 42 ஆயிரம் வீடுகளையும், சுனாமியால் பாதிக்கப்பட்டு இதுவரை குடியிருப்பு பெறாமல் உள்ள 13 ஆயிரம் குடும்பங்களுக்காக கட்டப்பட்டு வரும் வீடுகளையும், போர்க்கால அடிப்படையில் ஓராண்டுக்குள் கட்டி முடிக்க உத்தரவிடப்பட்டது.

சென்னை நொச்சிக்குப்பம், சீனிவாசபுரம் பகுதிகளில் ஏழாயிரம் வீடுகள் கட்டி, அப்பகுதிகளில் குடிசைகளில் வாழும் மக்களுக்கும், பழுதடைந்த வீடுகளில் குடியிருப்பவர்களுக்கும் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

திருவொற்றியூரில் வானொலி நிலையத்துக்கு சொந்தமான நிலத்தில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மூன்றாயிரத்து 616 வீடுகளும், ஒக்கியம் துரைப்பாக்கத்தில் இரண்டாயிரத்து 64 வீடுகளும் கட்டவும் முடிவு செய்யப்பட்டது.

கடலோர மாவட்டங்களில், கடலில் இருந்து 200 மீட்டர் துõரம் வரை உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஐந்தாயிரத்து 500 வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக, ரூ.43 கோடி செலவில் இரண்டாயிரம் வீடுகளை கட்டிக் கொடுப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இப்பணிகளை விரைவில் முடிக்க முடிவு செய்யப்பட்டது.

கடலோரப் பகுதிகளில் வாழும் 20 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறும் வகையில், ரூ.10 கோடி செலவில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இது தவிர, ஜவகர்லால் நேரு புனரமைப்புத் திட்டத்தின் கீழ் சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் வாழும் குடும்பங்களுக்கு 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்துக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி : தினமலர்

0 comments: