]]

Wednesday, July 4, 2007

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு

கடலூர் மாவட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நடப்பு ஆண்டிற்கு 135 ஊராட்சிகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு கிராமங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்து அந்த கிராமத்தில் சுடுகாடு, ஈமச் சடங்கு கட்டடம், வடிகால் வசதி, சிமென்ட் மற்றும் தார் சாலைகள், நூலக கட்டடங்கள், மீன் வளர்ப்பு குட்டைகள், போர் வெல், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், சமூதாயக் கூடங்கள் உட்பட பல வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

இதில் மிகவும் பின்தங்கிய ஊராட்சிகளுக்கு முதலிடமும், அதிக வருவாய் ஈட்டகூடிய ஊராட்சிகளுக்கு கடைசி இடமும் கொடுத்து தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

தர வரிசைப் பட்டியலில் அடுத்த நிலையில் ஊராட்சிகளுக்கு இரண்டாம் கட்டத்திலும், அடுத்தடுத்து 5 ஆண்டுகளில் அனைத்து ஊராட்சிகளிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தி வளர்ச்சிப் பணிகள் செய்து முடிக்கப்படும்.

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 13 ஒன்றியங்களிலும் உள்ள 681 ஊராட்சிகளில் கடந்த ஆண்டு 136 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இரண்டாம் கட்டமாக அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை அமல்படுத்த நடப்பு (2007-08) ஆண்டில் 135 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி கடலூர் ஒன்றியத்தில் தோட்டப்பட்டு, நத்தப்பட்டு, சேடப்பாளையம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளும், அண்ணா கிராமம் ஒன்றியத்தில் 8 ஊராட்சிகளும், பண்ருட்டியில் 8, குறிஞ்சிப்பாடியில் 10, விருத்தாசலத்தில் 10, காட்டுமன்னார்குடியில் 11, குமராட்சியில் 11, கீரப்பாளையத்தில் 13, மேல் புவனகிரியில் 9, பரங்கிப்பேட்டையில் 8, கம்மாபுரத்தில் 11, நல்லூரில் 13 மற்றும் மங்களூரில் 13 ஊராட்சிகள் என மொத்தம் 135 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


தமிழக அரசு ஒவ்வொரு ஊராட்சிக்கும் தலா ரூ.20 லட்சம் வீதம் கடலூர் மாவட்டத்திற்கு மொத்தம் ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வளர்ச்சிப் பணிகள் கான்ட்ராக்ட் அடிப்படையில் மேற் கொள்ளப்படும். அதன்படி கடந்த மாதம் 26ம் தேதி முதல் அந்தந்த ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு டெண்டர்கள் விடப்பட்டன. ஆனால் ஒரு சில ஊராட்சிகளில் மட்டும் டென்டர் விடும் பணி நிலுவையில் உள்ளன. டெண்டர்கள் விடப்பட்ட ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் தொடங்கியுள்ளன.

0 comments: