]]

Saturday, July 7, 2007

எங்கும் கம்ப்யூட்டர் மயம்

எங்கும் கம்ப்யூட்டர் மயம்
தமிழக அரசு புதிய திட்டம்

தமிழகத்தில் எல்லா மட்டத்திலும் கம்ப்யூட்டர்களை முழுமையாக பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. எல்லா அரசு ஊழியர்களுக்கும் இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் 10 கம்ப்யூட்டர் பொருத்தப்படுகின்றன.

தமிழக அரசு நிறுவனமான 'எல்காட்' பொதுமேலாளர் மோகன், மேலாளர் தியாகராஜன் ஆகியோர் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களுக்கும் தலா 10 கம்ப்யூட்டர் வழங்கப்பட்டுள்ளது. புதிய ரேஷன் கார்டு வழங்குவதற்காக சென்னைக்கு தகவல்களை அனுப்பி அங்குள்ள அலுவலர்கள் அதனை சரி பார்ப்பதில் சிரமம் உள்ளது.

தற்போது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலேயே கம்ப்யூட்டர் அமைக்கப்படுவதால் ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ள ஆர்.ஐ., சிவில் சப்ளை தாசில்தார்கள் நேரடியாக கம்ப்யூட்டரில் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களின் விவரங்களை சரி செய்து எங்களுக்கு அனுப்பும் போது நாங்கள் ரேஷன்கார்டு பிரிண்ட் மட்டும் செய்து அனுப்புவோம்.

சென்னையில் இருந்து மாநிலம் முழுவதும் தொடர்பு வைத்துக் கொள்வதற்கு தமிழ்நாடு ஸ்டேட் ஏரியா நெட் வார்க் என்று பெயரிட்டுள்ளோம்.

கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக பெரிய கம்ப்யூட்டர் நிறுவனத்தின் பயிற்றுநர்களையும் தேர்வு செய்துள்ளோம்.

குஜராத் மற்றும் ஆந்திரா பிரதேசத்தை அடுத்து தமிழகம்தான் அனைத்து தகவல் தொடர்புகளிலும் முதலிடம் வகிக்க உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகளை அனைத்து மாவட்டங்களிலும் நாங்கள் செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

உழவர் சந்தைகள்

உழவர்கள் தங்கள் சாகுபடி செய்யும் காய்கறிகளை இடைத்தரகர்கள் இன்றி, தாங்களே நேரடியாக விற்பனை செய்வதற்காக கடந்த 1996 ம் ஆண்டு உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டன. உழவர் சந்தைகளை கம்ப்யூட்டர் மயமாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நல்ல நிலையில் இயங்கும் 2 உழவர் சந்தைகளை தேர்ந்தெடுத்து கம்ப்யூட்டர், எல்.சி.டி., மானிட்டர் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தினமும் காலையில் அனைத்து காய்கறி விலை விபரங்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, டிஸ்பிளேயில் ஓட விடப்படும். பொதுமக்கள் காய்கறி விலை விபரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் தினமும் விவசாயத்துறை இயக்குனரகத்திற்கு அறிக்கை அனுப்பப்படும். எல்லா கம்ப்யூட்டர்களும் நெட் வசதியுடன் இயக்குநர் அலுவலகத்துடன் இணைக்கப்படும்.

இது தொடர்பாக விவசாயத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்

'கம்ப்யூட்டர் மயமாவதால் விலை விஷயத்தில் நுகர்வோரை ஏமாற்ற முடியாது. காரணம் நிர்ணயம் செய்யப்பட்ட விலை 'டிஸ்பிளே'யில் தெரியும். மேலும் தமிழகம் முழுவதும் இணைக்கப்படுவதால், மற்ற உழவர் சந்தைகளில் உள்ள விலை விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்' என்றார்.

தலைமை ஆசிரியர்களுக்கு 'லேப் டாப்'

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் நிர்வாக உதவிக்காக 'லேப்டாப்' கம்ப்யூட்டர் வழங்கப்பட்டு வருகிறது. 'லேப்டாப்' கம்ப்யூட்டரில் 'ஆன்லைன்' வசதி இருப்பதால், கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள முடியும்.

பள்ளி தலைமை ஆசிரியர்களும் கல்வித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிர்வாகம், கல்வியில் மாற்றம் குறித்து கேட்டறிய முடியும்.

பள்ளியின் வரலாறு, மாணவர் எண்ணிக்கை, முன்னாள் மாணவர் பற்றிய விபரம், பள்ளியில் உள்ள வசதி, ஆசிரியர் விபரம், அவர்களது வருகை பதிவேடு, அரசு திட்டங்களான இலவச சைக்கிள், இலவச நோட்டு புத்தகம், இலவச சீருடை போன்றவை குறித்து விபரம் ஆகியவற்றை 'லேப்டாப்' கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொள்ளலாம்.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், சிரமமின்றி உடனுக்குடன் தகவல் தெரிந்து கொள்ள தலைமை ஆசிரியர்களால் முடியும்.

ஈரோடு மாவட்டத்தில் 81 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இந்த 'லேப்டாப்' கம்ப்யூட்டர் வழங்கப்பட்டு வருகிறது. 'லேப்டாப்'களை 'லார்ஜிஸ்டிக் போஸ்டல்' துறையினர் அந்தந்த பள்ளிகளுக்கு நேரடியாக சென்று வழங்கி வருகின்றனர். அரசு பள்ளிகளின் தரம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

0 comments: